ஞாயிறு, 31 ஜனவரி, 2021

தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு மைல்கல்; பல்வேறு இடங்களில் துவங்க உள்ள அகழ்வாய்வு

கீழடி
 madrasreview.com  : தமிழ்நாட்டிலுள்ள ஏழு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது; மேலும் இரண்டு பகுதிகளில் கள ஆய்வும் செய்யப்பட உள்ளது. கீழடி அகழாய்வுப் பணிகள் மூலம் கிடைத்த தமிழர்களின் பண்டைய நகர நாகரீகம் குறித்த ஆய்வு முடிவுகளை, இன்னும் விரிந்த தளத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இந்த ஏழு இடங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுப் பணிகள் உதவக்கூடும் என கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மூலம் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படாமல் உள்ள ‘தாமிரபரணி நாகரீகம்’ குறித்து மேலும் ஆய்வு செய்வதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளிலும் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. 

தொல்லியல் ஆராய்ச்சிக் குழுவிடம் ஒப்பதலைப் பெற்றுள்ள உதயச்சந்திரன் இ.ஆ.ப

தமிழக தொல்லியல் துறை செயலாளர் உதயச்சந்திரன் தமிழ்நாடு அரசு சார்பாக, மத்திய தொல்லியல் ஆராய்சிக்கான ஆலோசனைக் குழுவிடம் இதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசு மற்றும் பல்கலைக்கழகங்கள் வாயிலாக பத்து இடங்களில் தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட இருப்பதாக” தெரிவித்துள்ளார். 

  • கீழடியை மையப்படுத்தி அதனைச் சுற்றியுள்ள சிவகங்கை மாவட்டப் பகுதிகளிலும், 
  • ஆதிச்சநல்லூரை சுற்றியுள்ள பகுதிகளிலும், 
  • தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும்,
  • அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேடு பகுதிகளிலும் 

அகழாய்வு செய்யப்பட உள்ளது. 

தாமிரபரணி நாகரீகம் தொடர்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளிலும், புதிய கற்காலம் தொடர்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் பகுதிகளிலும் கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இப்பணிகளுக்காக தமிழ்நாடு அரசு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 

“மேற்சொன்ன தொல்லியல் அகழாய்வு மற்றும் கள ஆய்வுப் பணிகள் தமிழர்களின் பண்டைய வரலாற்று சிறப்பை மீட்டெடுப்பதற்கான மைல்கல்லாக அமையும்” என உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

உதயசந்திரன் இ.ஆ.ப

முன்னதாக கீழடி தொல்லியல் ஆய்வுப் பணிகளைத் தொடர, இந்திய ஒன்றிய அரசு போதிய ஒத்துழைப்பு வழங்காமல் இடையூறு ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு கீழடி தொல்லியல் ஆய்வுப் பணிகளை தொடர்ந்தது; கீழடி அகழாய்வின் முதல் கட்ட அறிக்கையையும் வெளியிட்டது. இதில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை செயலாளர் உதயச்சந்திரனின் பங்களிப்பு மிக இன்றியமையாததாக அமைந்திருந்தது குறிப்பிடதக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக