புதன், 6 ஜனவரி, 2021

நீங்கள் கையெழுத்துப் போட்டிருந்தால் நான் இறந்திருக்கமாட்டேன்!" - எஸ்.பி. அலுவலகத்தை அதிரவைத்த கடிதம்!

nakkheeran.in - எஸ்.பி. சேகர் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருப்பவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படையைச் சேர்ந்த பெயரிடப்படாத போலீஸ்காரர் ஒருவர், 'தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக' மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.Unnamed letter sent to viluppuram SP office

 அந்த கடிதத்தில், "2013ஆம் ஆண்டு ஆயுதப்படைக்கு தான் காவலராகத் தேர்வு செய்யப்பட்டு பணியில் உள்ளேன். கடந்த 8 ஆண்டுகளாக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறேன். குடும்ப சூழ்நிலையின் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு சென்னைக்கு மாறுதலாகிச் சென்று, மீண்டும் விழுப்புரம் ஆயுதப்படைக்கு வந்து சேர்ந்துவிட்டேன். இதனால், தன்னுடைய பணியின் முன்னுரிமை மாறிவிட்டது. என்னுடன் பணியில் சேர்ந்த சக போலீசார் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்குப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 ஆனால், எனக்கு அப்படிப்பட்ட பணிமாறுதல் கிடைக்கவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து, பணி மாறுதல் கேட்டு, ஐந்து முறை விருப்ப மனு கொடுத்தும், இதுவரை என்னை தாலுகா காவல் நிலையங்களுக்குப் பணிக்கு அனுப்பவில்லை. இதனால், மனம் வெறுத்துப்போன நான் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை. பணியிடமாறுதல் பட்டியலில் ஏற்கனவே மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த எஸ்.பி.ஜெயக்குமார் கையெழுத்துப் போடுவதற்குள் அவர் தூத்துக்குடிக்கு மாறுதலாகிச் சென்றுவிட்டார்.

 புதிதாக மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள தாங்கள், அந்த கோப்பில் கையெழுத்துப் போட்டிருந்தால், இன்று நான் இறந்திருக்கமாட்டேன். இங்கு ஆயுதப்படையில் போலீசார் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எங்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதை மறந்துவிட்டீர்கள். பணி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்குள் அடுத்த பணிக்கு அலுவலகத்தில் இருந்து தகவல் வருகின்றது. ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பணிகள் தரப்படுவதால் பணிச்சுமை அதிகரிக்கிறது. அதனால் மனச்சுமை ஏற்படுகிறது. இதன் காரணமாக இறப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு. என் உடல் மேல், ஒரு போலீஸ் அதிகாரி நிழல் கூட படவேண்டாம். நான் இறந்தபிறகு எந்த சூதாட்டத்திலும் என் இறப்பைச் சம்பந்தப்படுத்திவிடாதீர்கள். என் மரணம் ஆயுதப்படை போலீசாருக்கு நன்மையாக இருக்கட்டும்" என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 இது சம்பந்தமாக மாவட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, "பொதுமக்கள் மட்டுமின்றி போலீசாரும் தங்களின் குறைகளை, என்னை நேரில் சந்தித்துக் கூறலாம். எப்போதும் அவர்களைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன், என்பதைப் பலமுறை வெளிப்படையாக அறிவித்துள்ளேன். ஆனால், இதுபோன்ற முகவரி இல்லாத மொட்டைக் கடிதங்கள் அனுப்புவது நல்லதல்ல. அந்த போலீஸ்காரர் கடிதத்தில் கூறியது போன்று ஏதேனும் முறைகேடு நடக்கிறதா என விசாரிக்குமாறு கூறியுள்ளேன். காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில், ஆயுதப் படையில் உள்ள காவலர்களுக்குப் பணியிட மாறுதல் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கடிதத்தை விழுப்புரம் ஆயுதப்படை அறிவிப்புப் பலகையில் ஓட்டுமாறு உத்தரவிட்டுள்ளேன். அப்படி ஓட்டினால்தான் முகவரி இல்லாத மொட்டைக் கடிதங்கள் அனுப்புவதை தவிர்ப்பார்கள்" என்றார்.

 இந்தத் தற்கொலை மிரட்டல் கடிதம் விழுப்புரம் ஆயுதப்படை போலீசார் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக