செவ்வாய், 12 ஜனவரி, 2021

மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவுகிறது கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், அரியானா, குஜராத், உத்தரபிரதேசம்

    ட thinathanthi : ெல்லி, மராட்டியம் உள்பட மேலும் 3 மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பீதி அடங்குவதற்குள் பறவை காய்ச்சல் என்னும் மற்றொரு பூதம் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. இந்த கொடூர வைரஸ் கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், அரியானா, குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பரவுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாநிலங்களில் கோழிகள், வாத்துகள், காட்டு பறவைகள், காகம் என பல்வேறு வகையான பறவைகள் அடுத்தடுத்து கூட்டம் கூட்டமாக செத்து மடிகின்றன. அவற்றின் மாதிரிகளை பரிசோதித்ததன் மூலம் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு வருகிறது.


இந்த வரிசையில் தற்போது தலைநகர் டெல்லியிலும் இந்த வைரஸ் தடம் பதித்திருக்கிறது. அங்குள்ள சஞ்சய் ஏரி மற்றும் பூங்காக்களில் ஏராளமான வாத்துகள் மற்றும் காகங்கள் செத்து கிடந்தன. அவற்றின் மாதிரிகளை ஜலந்தரில் உள்ள பரிசோதனைக்கூடத்தில் பரிசோதித்து வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதைப்போல மராட்டியத்தின் பர்பானி, மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பறவைகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மாதிரிகளை போபால் ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்ததில் பறவை காய்ச்சல் உறுதியானது.

உத்தரகாண்ட் தலைநகர் டேராடூன், ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காகங்கள் உள்பட 200-க்கும் அதிகமான பறவைகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது கண்டறியப்பட்டு உள்ளது.

இதன் மூலம் நாட்டில் பறவை காய்ச்சல் பாதித்த மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக டெல்லியில் தடுப்பு நடவடிக்கைகளை ஆம் ஆத்மி அரசு முடுக்கி விட்டு உள்ளது.

அதேநேரம் பறவை காய்ச்சலால் மக்கள் யாரும் பீதிக்குள்ளாக வேண்டாம் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவுறுத்தி உள்ளதுடன், இந்த வைரஸ் பரவலை தடுக்க ஆவன செய்யுமாறு அரசு அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இதற்கிடையே பறவை காய்ச்சலால் தீவிரமாக பாதிக்கப்பட்டு உள்ள கேரளா மற்றும் இமாசல பிரதேசத்தில் மத்தியக்குழுவினர் முகாமிட்டு உள்ளனர். நோய்த்தொற்று மையங்களாக அறியப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்து வரும் அவர்கள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு சில மாநிலங்களில் பரவி வரும் பறவை காய்ச்சலால் பறவைகள் மட்டுமே உயிரிழப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மனிதர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக அறிவியல் பூர்வமாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

எனவே இந்த தொற்று தொடர்பாக தவறான தகவல் பரவுவதை தடுக்குமாறும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதேநேரம் இந்த தொற்று பரவாமல் தடுப்பதை உறுதி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக