வெள்ளி, 22 ஜனவரி, 2021

சுக்ராக்களினதும், நூராக்களினதும் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்கள் ..

Image may contain: 1 person, text

  Manazir Zarook : சிரச லட்சாதிபதி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சகோதரி சுக்ரா விடயத்தில் சிலர் தற்போது சமூக அவலங்கள் பற்றி பாடம் எடுக்கத் தொடங்கி விட்டார்கள். இதில் சில ஆண்டிமாரின் அலப்பறைகள் வேறு. சமூகப் பிரச்சினைகளை பட்டியலிட்டு அதனை ஒழிக்க உழைக்க வேண்டும் என்றும், அதனை விடுத்து இவ்வாறான வெற்றிகளை கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை எனவும், பலவாறாக இப்பாடம் தொடர்கிறது. சமூகத்தின் பிரச்சினைகளை, அவலங்களை (குறிப்பாக்கிச் சொல்வதென்றால், வறுமையை) ஒழிக்க உழைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தினை யாரும் கொண்டிருக்க மாட்டார்கள். அதற்கு தன்னாலான உதவிகளையும், முயற்சிகளையும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இங்கு இவ்வாறான உணர்ச்சிசார்ந்து முன்வைக்கப்படும் ஆதங்கங்களின் வெளிப்பாட்டின் பின்னனியில் இரு முக்கிய சிக்கல்கள் உண்டு. சுருக்கமாகப் பார்ப்போம்.

.
முதலாவது சிக்கல், இவர்கள் சமூகப் பிரச்சினைகளை, அவலங்களை அணுகும் விதம் சார்ந்தது. வறுமை அல்லது சமூக ஏற்றத்தாழ்வு என்பது கல்வித் தேவைக்கான லெப்டொப் வாங்கிக் கொடுப்பதினாலோ அல்லது இன்னோரன்ன தேவையொன்றை நிறைவேற்றுவதினாலோ நிவர்த்திக்கப்படும் பிரச்சினை அல்ல. அது எமது சமூகப் பொருளாதார கொள்கை சார்ந்த பிரச்சினை. அதாவது, 'முறைமை' சார்ந்த பிரச்சினை. பாரிய சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பேணும் அல்லது காக்கும் ஒழுங்குகளை வைத்துக் கொண்டு இப்பிரச்சினைகளை தீர்க்க முடியாது. இன்னொரு வகையில், எமது மனங்களில் ஆழமாக பதிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி, முன்னேற்றம் சார்ந்த கருத்தியல்களின் விளைவுகள் இவை. எனவே, பிரச்சினையை மிகை எளிமைப்படுத்தி அங்கலாங்ப்பதில் பிரச்சினைக்களுக்கான மூலவேர் இன்னும் பலப்படவே செய்யும். (இப்பின்னனியில் தான், அரசார்பற்ற நிறுவனங்கள் (என்.ஜி.யோக்கள்) குறித்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் போன்றோரின் விமர்சனங்கள் எழுகின்றன).
.
பிரச்சினையை சரியாக இணங்காண்பது பிரச்சினைக்கான தீர்வின் ஒரு பகுதி, தவிர்க்க முடியாத பகுதி. உதாரணமாக, ஆபிரிக்க நாடுகளில் வறுமையால் வயிறு ஒட்டிய நிலையில் காட்சிதருபவர்களைப் பார்த்து நாம் கவலைப்பட்டிருப்போம். ஆனால், அவர்களின் உண்மையான பிரச்சினை அந்நாடுகளில் உணவு இன்மை அல்ல. சுரண்டல், வளங்கள் நியாயமாகப் பகிரப்படாமை, பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றன. வல்லரசு நாடுகள் மற்றும் அந்நாடுகள் பின்பற்றும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளின் விளைவு அது. அந்நாடுகளில் வறுமையில் வாடும் மக்களுக்கு ஒருசிலர் உணவு அளிப்பதால் மாத்திரம் அப்பிரச்சினைக்கு தீர்வு வராது. இதன் அர்த்தம் வறுமையில் வாடுபவருக்கு உணவு அளிக்கப்படாது என்பதல்ல; மனிதனாக வாழ்தல் என்பதற்கு குறைந்தபட்ச தகுதி சக மனிதன் குறித்து அக்கறை கொள்வதே. ஆனால், வறட்டுத்தனமாக வறுமை உட்பட சமூகப் பிரச்சினைகளை அணுகுதல் தீர்வுக்கு உதவாது, அது தீர்வினை பிற்போடவே உதவும். (இது விரிவாக தனியாக நபிமார்களின் வரலாற்றுடன் இணைத்து உரையாடப்பட வேண்டிய பகுதி, பதிவின் நோக்கம் இதுவல்ல என்பதால் தவிர்க்கிறேன்).
இரண்டாவது சிக்கல், இச்சமூகப் பிரச்சினைகளை எங்கு பேசுகிறார்கள் என்பதும், இவ்வாறான உரையாடலில் உள்ள முரண்களும். இதுவே இப்பதிவின் சாரமும், நோக்கமும். சுக்ராக்களும், நூராக்களும் வறுமையால் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அந்நிலைமை அவர்களை எதற்கெல்லாம் தள்ள முடியும் என்று ஒருவர் பதிவிட்டிருந்தார். அதனை வாசித்த பின்னரே இப்பதிவினை எழுதத் தோன்றியது. இவ்வாறான பதிவின் முரணும், சிக்கலும் சுக்ராக்களினதும், நூராக்களினதும் பிரச்சினையை வெறுமனே வறுமையினுள் தள்ளி அணுகுவது. அதாவது, அப்பெண்களின் திறமைக்கு, முன்னேற்றத்துக்கு வறுமையே முதன்மைத் தடை போன்ற பிம்பத்தினை தோற்றுவிப்பது. சரி, அவர்களின் வறுமைப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டால், சுக்ராக்களினதும், நூராக்களினதும் தடைகள் தகர்ந்துவிடுமா?! அவர்களின் திறமைகளை வெளிக்காட்ட பிரதான தடை வறுமைதானா?!
வறுமை என்பது பொதுப் பிரச்சினை. அது ஆண் - பெண் (அதாவது, பால்) சார்ந்ததல்ல. அது எல்லோரையும் பாதிக்கவே செய்கிறது. ஆனால், ஒரு பெண்ணின் திறமை, சுதந்திர செயற்பாடு போன்றவற்றுக்கான வெளியை ஒடுக்கிவிட்டு, அவர்களுக்கு மேய்ப்பர்களான ஆண்களின் (அதாவது, கலாச்சாரக் காவலளர்களின்) கண்காணிப்பு அவசியம் என்ற மனநிலையில் கவனமாக திணித்து விட்டு, வறுமைதான் அவர்களின் முதன்மைப் பிரச்சினை என்று எவ்வாறு வாதாட முடிகிறது!
பிற்போக்குத்தனமான ஆணாதிக்க மனநிலையை உட்செரித்துக் கொண்டு, தன்னைப் போன்றே அனைத்து உணர்வுகளும் கொண்ட இரத்தமும் சதையுமான சக உயிரி என்ற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல், கார், வீடு போன்ற தனது சொத்துக்களை பாதுகாக்கும், பராமரிக்கும் மனப்பாங்கில் வரிந்து கட்டிக் கொண்டு செயலாற்றும் கலாச்சாரக் காவளர்களுக்கு முன்னால், ஒரு திறமையான பெண்ணின் முதன்மைப் பிரச்சினை வறுமையல்ல. அவள் வறுமையைக் கூட கடந்து பயணிக்க முடியும், இந்த ஆணாதிக்க மேய்ப்பர்களையும், அது சமூகத்தில் விதைத்துள்ள மனப்பதிவையும் கடந்து பயணிப்பதுவே கடினமானது, 
பலபோது அசாத்தியமானது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் வறுமை குறித்து பாடம் எடுப்பவர்களிடம் தவறாது கேட்க வேண்டிய கேள்வி... சுக்ராக்களினதும், நூராக்களினதும் திறமைக்கும், கனவை நோக்கிய பயணத்துகும் முதன்மை தடைக்கல் வறுமையா? அல்லது மேய்ப்பர் மனநிலையில் அலையும் கலாச்சாரக் காவலர்களா?!///

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக