செவ்வாய், 19 ஜனவரி, 2021

சீட்டைக் குறைத்தார் பீகே: ஸ்டாலின் சொன்னார் ஓகே! திமுக கூட்டணிக்கு வேட்டு?

சீட்டைக் குறைத்தார் பீகே: ஸ்டாலின் சொன்னார் ஓகே! திமுக கூட்டணிக்கு வேட்டு!

காங்கிரஸுக்கு 10 சீட்டுகள்தான் என்று இப்போது முடிவெடுத்திருக்கிறார் ஸ்டாலின். அது அதிகபட்சம் 11 ஆகுமே தவிர அதற்கும் அதிகமாக வாய்ப்பேயில்லை. வைகோ 16 சீட்கள் கேட்கிறார்; அவருக்கு 5 சீட் மட்டுமே தருவதாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 4 சீட்டுகள், விடுதலைச்சிறுத்தைகள், மனிதநேயமக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 2, கொங்கு ஈஸ்வரன், பச்சமுத்து, வேல்முருகன், பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்கு தலா ஒரு சீட் என்ற கணக்கில்தான் லிஸ்ட் கொடுத்திருக்கிறார் பீகே. அதற்கு ஸ்டாலினும் ஓகே சொல்லிவிட்டார்’’ என்று கூட்டல் கழித்தல் கணக்கைப் போட்டுக்காட்டினார்கள் திமுக சீனியர்கள்

minnnambalam :ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்பார்கள். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வந்துள்ள ஓவர் கான்ஃபிடன்ஸ் அவரை சிம்மாசனத்தில் அமர்த்தப் போகிறதா அல்லது சின்னாபின்னமாக்கப் போகிறதா என்பதுதான் இப்போது திமுக சீனியர்களின் சீரியஸ் விவாதமாகவுள்ளது. சென்ற 2019ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, திமுக அமோக வெற்றியைப் பெற்றது. அந்தத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு ஆலோசனை தந்தது சுனில். அவருடைய நிறுவனம்தான் இப்போது அதிமுகவுக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருக்கிறது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற பிரமாண்ட வெற்றிதான், ஸ்டாலினுக்கு தேசிய அரசியலில் ஓர் அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. ஆனால் அவருக்கோ, அவருடைய கட்சியின் எம்.பிக்களுக்கோ அது பெரிதாக உதவவேயில்லை. திமுகவின் ஒரே டார்கெட் சட்டமன்றத் தேர்தலில் அதே அளவு வெற்றியைப் பெற்று ஆட்சி பீடத்தில் அமர்வது மட்டும்தான்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வெற்றியின் அடிப்படையில் இப்போது கணக்கிட்டால், திமுக கூட்டணிக்கு 216 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி கிடைக்க வேண்டும். ஆனால், திமுக தனித்தே 200 தொகுதிகளில் ஜெயிக்க வேண்டுமென்று நினைக்கிறார் ஸ்டாலின். ஆனால், அது அத்தனை எளிதான காரியமாக இருக்குமென்று தோன்றவில்லை. ஏனெனில் ஆளும்கட்சியின் தேர்தல் அணுகுமுறைகளும் விடாது மழையாகத் தொடரும் விளம்பரங்களும் தேர்தல் களத்தை மேலும் கனமாக்கி வருகின்றன. கடுமையான மோதலாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படும் இந்தத் தேர்தல் போர்க்களத்தில் ஸ்டாலின் நம்பியிருப்பது, பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகம் என்ற மாபெரும் ஆயுதத்தை மட்டுமே.

முறைப்படி ஒப்பந்தம் போட்ட நாளிலிருந்து பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தன் வேலையைத் தொடங்கிவிட்டது. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக, வயது வாரியாக, தகுதி வாரியாக, வெவ்வேறு தரப்பு மக்கள் மத்தியில் குறிப்பிட்ட இடைவெளியில் அந்த நிறுவனம் சர்வேக்களை நடத்தி அதன் அடிப்படையில் திமுக தலைமைக்குச் சில அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அது அப்படியே நடைமுறைப்படுத்தப்படுகிறது. பல மாவட்டங்களை மேலும் பல மாவட்டங்களாகப் பிரித்தது, மாவட்டச் செயலாளர்களை மாற்றியது, கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கியது, மக்கள் கிராம சபை நடத்துவது என எல்லாமே பீகே என்கிற பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படியே நடந்து வருகிறது.

கட்சியில் சீனியர்களாக இருக்கும் பலருக்கும், கட்சி நிர்வாகிகள் பலருக்கும் இப்படி ஒரு தனியார் நிறுவனம் தரும் தகவல்களின் அடிப்படையில் கட்சிக் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பீகே சொல்லும் திட்டங்கள் அனைத்தும் தங்களுடைய கட்சியைக் கண்டிப்பாக ஆட்சிப் பீடத்தில் அமர்த்தும் என்ற நம்பிக்கையில் அமைதி காத்து வருகின்றனர். இதனால் ஐபேக் நிறுவனத்தினரின் ஆதிக்கம் கட்சியில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. உள்கட்சிக்குள் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சியினரிடமும் இவர்களின் ஆதிக்கம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, பீகே ஆலோசனைப்படி, திமுக தன்னுடைய கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களில் மூன்றில் ஒரு பங்கு சீட்களை மட்டுமே தருவதற்கு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

திமுக தலைமை நடவடிக்கைகளை நெருக்கமாகக் கவனித்து வரும் சீனியர்கள் சிலரிடம் பேசினோம்...

‘‘தேர்தல் நெருங்க நெருங்க பீகேயின் ஆதிக்கமும் ஆலோசனையும் கட்சிக்குள் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. சமீபத்தில் சென்னைக்கு வந்த பிரசாந்த் கிஷோர், பத்து நாள்கள் தங்கி தன்னுடைய டீம் ஆட்கள் திரட்டியிருந்த தகவல்களையெல்லாம் தொகுத்துள்ளார். டீம் ஆட்கள் இல்லாமல் அவர் ரகசியமாக வைத்துள்ள சில ஏஜென்சிகளை வைத்து அந்தத் தகவல்களையும் கிராஸ் செக் செய்துள்ளார். எல்லாவற்றையும் தெளிவாக ஆய்வுசெய்தபின், தலைவர் ஸ்டாலினிடம் சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு நேற்றுதான் சென்னையிலிருந்து கிளம்பியிருக்கிறார். இருவரும் பேசிய சில விஷயங்கள் இப்போது கட்சி வட்டாரத்தில் கசிந்து வருகின்றன. அதில் கிடைத்த தகவலின்படி, ஸ்டாலினுக்கு பீகே சொல்லியிருக்கும் முக்கிய ஆலோசனை, கூட்டணிக் கட்சிகளுக்கான சீட்டுகளை மேலும் குறைக்க வேண்டுமென்பதுதான். கட்சி தொடங்குவதில்லை என்று ரஜினி எடுத்த முடிவுதான், இவர்களின் இந்த முடிவுக்குக் காரணம்.

ரஜினி கட்சி தொடங்குவதாகச் சொன்ன நாளிலிருந்து, அவர் கட்சி தொடங்குவதில்லை என்று சொன்ன நாள் வரையிலுமாக வெவ்வேறு காலகட்டங்களில் பல கட்ட சர்வேகளை ஐபேக் நடத்தியுள்ளது. அதில் கிடைத்த ரிசல்ட்டின்படி, ரஜினி கட்சி தொடங்குவதாகச் சொல்வதற்கு முன்பிருந்ததைவிட இப்போது திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாகியுள்ளது. இதை வைத்துத்தான் இந்த ஆலோசனையை பீகே கொடுத்துள்ளார். ‘ஏற்கெனவே அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியாலும், திமுகவுக்கு இருக்கும் செல்வாக்கினாலும் 120 தொகுதிகள் வரை ஜெயிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், நான் வந்து இங்கே வேலை பார்த்ததற்கு அடையாளமாக கூடுதலாக 50 தொகுதிகளையும் சேர்த்து ஜெயிக்க வைக்க வேண்டும். அதுதான் எனக்கும் மரியாதை; என்னுடைய நிறுவனத்துக்கும் அதுதான் எதிர்காலமாக இருக்கும்’ என்று பீகே கூறியுள்ளார். இது எப்படி சாத்தியமென்று ஸ்டாலின் கேட்டதற்கு, ‘நீங்கள் அதற்கு 200 தொகுதிகளில் கட்டாயமாகப் போட்டியிட வேண்டும். மற்ற கட்சிகள் கேட்பதில் பாதியை அல்லது அதற்கும் குறைவாகக் கொடுத்தால் போதுமானது’ என்று பீகே விளக்கியிருக்கிறார்.

இவர்களிருவரின் ஆலோசனையின் அடிப்படையில் 34 தொகுதிகள் மட்டுமே திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாகப் பங்கிட்டுத் தரப்படவுள்ளது. முன்பெல்லாம் தேசியக்கட்சியின் தலைவர்களுடன் பேசும் பொறுப்பு, கட்சியின் எம்.பிக்கள் குழுத் தலைவரிடம்தான் ஒப்படைக்கப்படும். அப்படிப் பார்த்தால் காங்கிரஸ் தலைமையிடம் டி.ஆர்.பாலுதான் கூட்டணி, தொகுதிப் பங்கீடு விவரங்களைப் பேச வேண்டும். ஆனால், இப்போது ராகுலிடம் பேசியது பாலு இல்லை; பிரசாந்த் கிஷோர்.

காங்கிரஸுக்கு இந்த முறை 15 தொகுதிகள் மட்டுமே தர முடியுமென்று ராகுலிடம் சொல்லியிருக்கிறார் கிஷோர். அதற்கு ராகுல் ஒப்புக்கொள்ளாமல், ‘தமிழகத்தில இன்னும் எங்களுக்கு வாக்கு வங்கி இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். அதை பீகே சொன்னதும் ‘சரி 20 வரை கொடுப்போம்’ என்ற மனநிலையில் இருந்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால் பீகேயுடன் நேற்று நடந்த கலந்துரையாடலுக்குப் பின், காங்கிரஸுக்கு 10 சீட்டுகள்தான் என்று இப்போது முடிவெடுத்திருக்கிறார் ஸ்டாலின். அது அதிகபட்சம் 11 ஆகுமே தவிர அதற்கும் அதிகமாக வாய்ப்பேயில்லை.

வைகோ 16 சீட்கள் கேட்கிறார்; அவருக்கு 5 சீட் மட்டுமே தருவதாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 4 சீட்டுகள், விடுதலைச்சிறுத்தைகள், மனிதநேயமக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 2, கொங்கு ஈஸ்வரன், பச்சமுத்து, வேல்முருகன், பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்கு தலா ஒரு சீட் என்ற கணக்கில்தான் லிஸ்ட் கொடுத்திருக்கிறார் பீகே. அதற்கு ஸ்டாலினும் ஓகே சொல்லிவிட்டார்’’ என்று கூட்டல் கழித்தல் கணக்கைப் போட்டுக்காட்டினார்கள் திமுக சீனியர்கள்.

வருகிற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என்ற நம்பிக்கையில் திமுக தலைமை நடந்து கொள்ளும்விதம், கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினி கட்சி ஆரம்பிப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தபோது, எல்லாத் தலைவர்களிடமும் இணக்கம் காட்டிவந்த ஸ்டாலின், சமீபமாக உதாசீனப்படுத்துவதாகவும் முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கியுள்ளன. இந்தத் தேர்தலில் தங்களுடைய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தனிச் சின்னங்களில் போட்டியிடும் ஆர்வத்தில் மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இருக்கின்றன. ஆனால் அந்தக் கட்சிகளின் வேட்பாளர்களையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டுமென்றும் ஐபேக் ஐடியா கொடுப்பதாகவும் தகவல் பரவியுள்ளது.

கூட்டிக்கழித்துப்பார்த்தால்... தேர்தலின்போது திமுக கூட்டணியில் ஐபேக் மட்டும்தான் இருக்கும் போலிருக்கிறது.

–பாலசிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக