வியாழன், 7 ஜனவரி, 2021

அழகிரி : நான் மைக்க புடிச்சி ஏதாவது பேசினா மட்டும் லைன்ல வருவீங்களா?

minnambalam : கடந்த ஜனவரி 3ஆம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முக அழகிரி... "திமுகவுக்கு நான் எத்தனையோ வகைகளில் பாடுபட்டிருக்கிறேன். ஆனால் தொண்டர்களுக்காக நான் கேள்வி கேட்டதற்காக என்னை நீக்கி விட்டார்கள். ஸ்டாலினுக்கு திமுகவின் பொருளாளர் பதவியும் துணை முதல்வர் பதவியும் நான் சொல்லித்தான் கலைஞர் கொடுத்தார்.

நான் நீக்கப்பட்ட பிறகு கலைஞரை சந்தித்தபோது, ‘என்னை எப்போது சேர்த்துக் கொள்வீர்கள் என்று கேட்டேன். ‘இரு அவர்களின் ஆட்டம் அடங்கட்டும்’ என்று சொன்னார். ஆனால் அதன் பின் அவர் படுத்துவிட்டார். எத்தனையோ பேரை மந்திரியாக்கியிருக்கிறேன். எவனுக்கும் நன்றி கிடையாது. ஆனாலும் உங்களுக்காக ஒரு தொண்டன் அழகிரி இருக்கிறான். ஸ்டாலின் இந்தத் தேர்தலில் முதல்வர் ஆகவே முடியாது. நானும் என் ஆதரவாளர்களும் விடமாட்டோம்" என்று மிகக் கடுமையாகப் பேசியிருந்தார்.  

அழகிரியின் இந்த பேச்சுக்கு திமுக தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் மறுப்பும் வரவில்லை. அதேநேரம் அழகிரி தரப்பினர் , “அண்ணன் மதுரையில் பேசிய பிறகு திமுக தரப்பில் இருந்து அவர்கள் அவரை சிலர் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்” என்று கூறுகிறார்கள்.

இதுகுறித்து விசாரித்தபோது..."அழகிரி மதுரையில் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்த பிறகு அவரது சகோதரி செல்வி போனில் அழகிரியைத் தொடர்பு கொண்டிருக்கிறார். ‘என்னப்பா இப்படி பேசிட்டே?’ என்று செல்வி கேட்க... ‘நான் சாதாரணமா உங்க கிட்ட பேசினா கண்டுக்க மாட்டீங்க. நான் மைக்க புடிச்சி ஏதாவது பேசினா மட்டும் லைன்ல வருவீங்களா?'என்று கேட்டிருக்கிறார் அழகிரி. அதன்பிறகு செல்விக்கும் அவருக்குமிடையே சில நிமிடங்கள் போன் உரையாடல் நடந்திருக்கிறது.

இதேபோல திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடியும் அழகிரியிடம் பேசியிருக்கிறார். அவரிடமும் தனது கோபத்தையும் ஆதங்கத்தையும் வேதனையையும் அழகிரி கொட்டியுள்ளார்" என்று அழகிரி வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக