ஞாயிறு, 31 ஜனவரி, 2021

நட்டா...ராமதாஸ்... பிரேமலதா... மூடுமந்திரம்: அதிமுக கூட்டணி எங்கே போகிறது?

நட்டா...ராமதாஸ்... பிரேமலதா...  மூடுமந்திரம்: அதிமுக கூட்டணி எங்கே போகிறது?
minnambalam.com : இன்றைய அதிமுக கூட்டணி நிலவரம் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் கூட்டணி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது. இதில் தேனி மக்களவை தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றது. ரத்து செய்யப்பட்டு தாமதமாக நடந்த வேலூர் தொகுதி உட்பட மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி என்றோ தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றோ இன்னும் பெயரிடப்படாத அதாவது உறுதி செய்யப்படாத கூட்டணியைப் பற்றி பல்வேறு தகவல்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. பாஜகவின் தேசிய தலைவர் நட்டா இன்று (ஜனவரி 30) மதுரையில் தமிழக பாஜகவின் மையக் குழுக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். அதில் தமிழகத்தில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான கூட்டணியில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, “ நாம் வலியுறுத்தும் தொகுதிகளை அதிமுக தந்தால் மட்டுமே கூட்டணி வெற்றிபெறும். இல்லையென்றால் வெறுமனே கூட்டணி அமைக்கலாம். அவ்வளவுதான். அப்படிப்பட்ட கூட்டணி அமைப்பதற்கு பதில் தனியாக நின்று கட்சியை பலப்படுத்தும் வேலையை நேர்மையாக ஆத்ம திருப்தியுடன் நாம் செய்யலாம்” என்று முக்கிய் நிர்வாகிகள் நட்டாவிடம் கூறியிருக்கிறார்கள்.

இதேபோல தேமுதிகவின் சட்டமன்ற பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் இன்று நடந்திருக்கிறது. இதில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா,

“நாடாளுமன்றத் தேர்தலில் கடைசி நேரத்தில் நாம் கூட்டணியில் சேர்ந்ததால் அதிமுக உரிய முறையில் நம்மை மதிக்கவில்லை. இப்போதும் அப்படித்தான் நடத்துவார்கள் என்றே தோன்றுகிறது. நம்மைப் பற்றி அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள்:. எனவே நாம் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். நாளை கேப்டனின் திருமண நாள். உங்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார்” என்று கூறியுள்ளார்.

இதேபோல பாமகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் கூட இன்னும் உறுதியான கூட்டு ஏற்படவில்லை. 20% எம்பிசி இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கேட்டு ராமதாஸ் தொடர்ச்சியாக அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறார். அதில் இருக்கும் சட்ட ரீதியான, நிர்வாக ரீதியான சிக்கல்களை முன்வைத்து அதிமுகவோ அதை தள்ளிப் போடப் பார்க்கிறது. இதுகுறித்து இன்று (ஜனவரி 30) தைலாபுரம் தோட்டத்துக்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியின் தூதுவரும் சென்று வந்திருக்கிறார். நாளை பாமகவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அரசியல் முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

இப்படி பாஜக, பாமக, தேமுதிக ஆகிய மூன்று கூட்டணிக் கட்சிகளுமே அதிமுகவோடு மூடுமந்திரப் போக்கையே கடைபிடித்து வருவதால், அதிமுக கூட்டணி எங்கே போகிறது என்ற கேள்வி அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக