திங்கள், 25 ஜனவரி, 2021

கேரளா கடத்தல் கஞ்சா இலங்கை எங்கும் அமோக விநியோகம்? கட்டுக்கடங்காமல் பெருகும் கஞ்சா பாவனை

teavadai.com :இலங்கையில் வடக்கின் ஊடாக தொடரும் கஞ்சா கடத்தல்: நடப்பது என்ன….? யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வடக்கிற்கான பொருளாதார தடைகள் ஏற்பட்ட போது இந்தியாவில் இருந்தே பெருமளவான பொருட்கள் கடல் வழியாக இலங்கையில் கொண்டு வரப்பட்டன. மண்ணெண்ணெய், கோதுமை மா, பற்றரிகள், பெற்றோல் என பல பொருட்கள் கடல் ஊடாகவே பரிமாற்றப்பட்டன. கடல் வழியாக பலர் இந்தியாவுக்கு சென்று வருவதும் இடம்பெயர்ந்து செல்வதும் சர்வ சாதாரணமாக இடம்பெற்றது. ஆனால் அந்த காலப்பகுதியில் கூட வடக்கிற்கு போதைப்பொருளான கஞ்சா கொண்டுவரப்படவில்லை. அதனைப் பயன்படுத்துபவர்களும் சொல்லக் கூடிய வகையில் வடக்கில் இருக்கவில்லை. இறுக்கமாகவும் கட்டுக் கோப்புடனும் இருந்த தமிழ் சமூகம் இன்று என்ன நிலையில் நிற்கின்றது என்ற கேள்வி எழுகிறது. தமிழ் மக்களின் கலாசார பூமியாக கருதப்படுகின்ற யாழ்ப்பாணத்திலும் வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் நாளாந்தம் கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்படுவது என்பது தினமும் பத்திரிகைச் செய்திகளாகிவிட்டன.

இலங்கை வடபகுதியில் யாழ்ப்பாணம்,  மன்னார் ஆகிய கடற் பகுதிகளூடாக கேரளா கஞ்சா வந்து சேருகின்றது. அங்கிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு அவை வியாபாரத்திற்காக கொண்டு செல்லப்படுகின்றன. கேரளா கஞ்சா பாவனை மற்றும் போதைவஸ்து பாவனை என்பது இலங்கையில் தற்போது ஏற்பட்டதொன்றல்ல. நீண்டகாலமாக இதனுடன் தொடர்பு பட்ட குழுக்கள் தென்பகுதியில் இயங்கி வருகின்றன. ஆனால்இ வடபகுதியில் தற்போது  தான் கேரளா கஞ்சாவின் வருகை அதிகரித்து இருக்கின்றது. இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டுகின்ற போதும்இ இந்திய மீனவர்கள் இலங்கை கடல்  எல்லையை தாண்டுகின்ற போதும் கைது செய்யும் இரு நாட்டு கடற்படைகளும் கேரளா கஞ்சாவை பெரியளவில் பிடிப்பதாக தெரியவில்லை. இந்திய கடலோர காவல்படை இந்திய கடற்படை இலங்கைக் கடற்படை ஆகியவற்றின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டே கேரளா கஞ்சா வடக்கின் கரையை அடைகிறது. இந்த நாட்டில் 30 வருடமாக நிலவிய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பங்காற்றிய கடற்படையாலேயே கேரளா கஞ்சாவின் வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம் தான்.

இந்தியாவில் இருந்து வருகின்ற போது ஒருகிலோ அளவில் கேரளா கஞ்சாவை பிரித்து எடுத்து அவற்றை நீர் புகாதபடி பொலித்தீன் பைகளில் போட்டு பொதி செய்து படகுகளின் அடிப்பகுதியுடன் நீருக்குள் மறைத்துக் கொண்டு வருகிறார்கள். வடக்கின் கரையை குறித்த படகு அடைவதற்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் வலம் வரும் சில இளைஞர்கள் கடற்கரை மற்றும் அதனையண்டிய பகுதியின் பாதுகாப்பை கண்காணித்து தகவல் வழங்க கரையை அடையும் படகில் இருந்து கேரளா கஞ்சா பொதிகள் கரையை நோக்கி வீசப்படுகிறது. அதன் பின் அந்த படகு சென்று விட அதனை பெறுவதற்காக தயாராக இருந்த குழு அதனை எடுத்து வாய்க்கால்கள்  புதர்கள் என எவரும் இலகுவில் சந்தேகம் அடையாத மற்றும் மக்கள் செல்லாத பகுதிகளில் மறைத்து வைத்து விட்டு கட்டம் கட்டமாக எடுத்து வாகனங்களில் வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றது. இதற்கு மோட்டார் சைக்கிள் தொடக்கம் சொகுசு வாகனங்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் கேரளா கஞ்சாவின் வருகை என்பது வடக்கில் அதிகரித்துள்ளது. நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் சாதாரண பொதுமக்கள் வரை வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் வருகை தொடர்பில் பேசும் அளவிற்கு இந்த நிலைமை காணப்படுகின்றது.  உரிமைக்காக போராடிய இனம் இன்று ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் அந்த இனத்தின் இளைஞர்கள் மத்தியில் மீண்டும் போராட்ட எண்ணம் ஏற்படக் கூடாது என்பதற்கான ஒரு திசை திருப்பல் முயற்சியாகவே கேரளா கஞ்சா பாவனையை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் திரைமறைவில் நடைபெறுவதாக பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு இந்திய கடற்படையும்  துணை போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

 

இலங்கையில் வடக்கைப் பொறுத்தவரை ஏனைய மாகாணங்களை விட பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். இது தவிரஇ முழத்திற்கு முழம் பொலிஸ் புலனாய்வுப்பிரிவு என வடபகுதியில் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் நிலை கொண்டுள்ள போதும் கேரளா கஞ்சாவை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பொலிஸாரால் அவ்வப் போது கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டாலும் நாளாந்தம் அது இந்தியாவில் இருந்து வந்து கொண்டே இருக்கிறது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலையே தொடர்கின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இதன் பின்னணியில் பலமானதொரு சக்தி உள்ளது என்ற சந்தேகம் எல்லோர் மனங்களிலும் எழுகிறது. அது தவிர்க்க முடியாததும் கூட. இது தவிர  வடக்கு இளைஞர்கள் மத்தியில் உள்ள சில பிரச்சினைகளும்இ வசதி வாய்ப்புக்களும் கேரளா கஞ்சா பாவனையை தூண்டுவதாக அமைகிறது.  அதிநவீன தொடர்பு சாதனங்களின் வருகை  வெளிநாடுகளில் இருந்து வீட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் அளவுக்கதிகமான பணம் அதிகரித்த வேலை இல்லாப் பிரச்சினை என்பன இளைஞர்களை தவறான வழியில் இட்டுச் செல்கின்றது. இவ்வாறான இளைஞர்களே கேரளா கஞ்சா விற்பனையிலும் பாவனையிலும் ஈடுபடுகின்றனர். வடக்கைப் பொறுத்தவரை போதைப் பொருள் பாவனை இளைஞர்கள் மத்தியில் பெரியளவில் இருப்பதாக தெரியவில்லை. மதுப்பாவனை என்பது உள்ள போதும் தென்பகுதியுடன் ஒப்பிடுகின்ற போது கேரளா கஞ்சா பாவனை அதிகம் என கூறமுடியாது. இருப்பினும் வடக்கிற்கு கடத்தப்படும் கேரளா கஞ்சா ஏனைய பகுதிகளுக்கு பரிமாற்றப்படுகின்றது.

வடமாகாணத்தைப் பொறுத்தவரை கல்விப் பொது சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும்மாணவர்களில் யுத்தம் முடிவடைந்த 2009 தொடக்கம் 2015 வரை முறையே 55.71, 56.93, 54.26,  59.99, 65.33, 64.19,  60.38 வீதமான மாணவர்களே சித்திபெறுகின்றனர். ஏனைய மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியவர்களாக வீடுகளிலேயே நிற்கின்றனர். அதேபோல் உயர்தரம் கற்கும் மாணவர்களில் நாடளாவிய ரீதியில் சுமார் மூன்று இலட்சம் பேர் தோற்றுகின்ற போதும் 65 ஆயிரம் பேர் வரையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்து 28 ஆயிரம் வரையிலான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர்.

ஏனைய மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பு வசதி  தொழில் துறை என்பன வடக்கில் முறையாக இல்லாத நிலையே உள்ளது. இவ்வாறான மாணவர்களுக்கான தொழில் பயிற்சிகளை அது சார்ந்த கல்லூரிகள் தொழில் பயிற்சி அதிகார சபைகள் ஊடாக வழங்கப்படுகின்ற போதும் அதில் இளைஞர்கள் விரும்பிச் சென்று கற்கக் கூடிய நிலைமைகள் உருவாக்கப்படவில்லை. இதனால் பல இளைஞர்கள் சாதாரணதரம்இ உயர்தரத்தின் பின் என்ன செய்வது என்று தெரியாத நிலையிலேயே உள்ளனர். இதன்காரணமாக பல இளைஞர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபடக் கூடிய நிலைமைகளும் தோன்றியுள்ளது. வடக்கில் கேரளா கஞ்சா கைப்பற்றப்படுவதற்கும் அதனை இளைஞர்கள் பயன்படுத்துவதற்கும் இந்த கல்விசார் பிரச்சினையும் ஒரு காரணம் என்றே கருதவேண்டியுள்ளது. ஒரு நபரிடம் இருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதும் அதனுடனேயே பொலிஸாரின் விசாரணையும் கைதும் நின்று விடுகிறது. அந்த நபர் எங்கிருந்து அதைப் பெற்றார். எங்கு கொண்டு செல்கின்றார். அதனுடன் தொடர்பு பட்டவர்கள் யார் என்ற அடிப்படையிலான விசாரணைகள் இடம்பெறுவதாக தெரியவில்லை.

அவ்வாறு இடம்பெற்று அதனுடன் தொடர்புடைய பெரிய வலைப்பின்னல் நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பதிவுகள் இல்லை. ஆக  பொலிஸ் விசாரணைகள் கூட கஞ்சா கடத்தலை முழுமையாக இல்லாதொழிக்கும் வகையில் வடக்கில் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் உள்ளது. இதுவும் பல்வேறு சந்தேகங்களையும் கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

வடபகுதியில் இடம்பெறுகின்ற பல வன்முறைகளுக்கும் விரும்பத் தகாத செயற்பாடுகளுக்கும் கேரளா கஞ்சாவின் பாவனையும் ஒரு காரணம் என்பதை எவரும் மறுத்து விடமுடியாது. இருப்பினும் கேரளா கஞ்சாவை கட்டுப்படுத்துவதற்கு நீதித்துறை மற்றும் பொலிஸார் மட்டும் நடவடிக்கை எடுப்பதால் வெற்றி பெறப்போவதில்லை. இளைஞர்களுக்கான முறையான கல்வி முறை தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு கிராமமும் அங்குள்ள கிராம மட்ட அமைப்புக்களும் தமது கிராமம் தொடர்பில் விழிப்படைய வேண்டும். போதை மூலம் ஒரு சமூகத்தை அழித்து இன்னொரு சமூகம் வாழலாம் என்பது தவறான சிந்தனையே. ஒவ்வொருவரும் தமது பிரதேசத்தையும்இ சமூகத்தையும் பாதுகாக்க முன்வருவதன் மூலமே கேரளா கஞ்சா பாவனையை கட்டுப்படுத்த முடியும் என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக