ஞாயிறு, 3 ஜனவரி, 2021

வைகோ - வெங்கையா நாயுடு சந்திப்பு ஏன்? திமுக கூட்டணியில் திடீர் தீப்பொறி!

minnambalam : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.“சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளிலும் பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாஜக, பாமக ஆகியவை முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் முறுக்கிக்கொண்டு நிற்கின்றன. இதுவரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டுமே எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் என்பதை அறிவித்திருக்கிறது.
டிஜிட்டல் திண்ணை:  வைகோ - வெங்கையா நாயுடு சந்திப்பு ஏன்?  திமுக கூட்டணியில் திடீர் தீப்பொறி!

இந்த உரசலை மெய்ப்பிப்பது போல முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் பிரச்சாரம் செய்யும் எந்த மேடையிலும் மத்திய அரசின் சாதனைகளையோ, பிரதமர் மோடி பெயரையோ குறைந்தபட்ச அளவு கூட உச்சரிப்பதில்லை. இதுகுறித்து, ‘பிரச்சாரம்: மோடி பெயரை உச்சரிக்காத எடப்பாடி' என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியாகியிருந்தது.  அதிமுக கூட்டணியில் இப்படி ஒரு குழப்பம் என்றால் திமுக கூட்டணியிலும் குழப்பம் தொடங்கிவிட்டது. யாருக்கு எத்தனை சீட் என்பதில் தொடங்கி எந்த சின்னத்தில் நிற்பது என்பது வரை கூட்டணிக் கட்சிகளுக்கும் திமுகவுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். இந்தச் சந்திப்பில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 20 இடங்கள் வரை தேவையென்றும், கட்சியின் அங்கீகாரத்தைக் காப்பாற்ற இத்தனை சீட்டுகள் வேண்டும் என்றும் ஸ்டாலினிடம் வைகோ கோரிக்கை வைத்தார். ‘மற்ற தலைவர்களிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்று வைகோவுக்கு ஸ்டாலின் பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்திக்கும் வழக்கம் கொண்ட வைகோ கடந்த ஜனவரி 1ஆம் தேதி சந்தித்தபோது, ‘எங்கள் கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்' என்று அறிவித்தார். எங்கள் முடிவு கூட்டணிக்கு பாதகமாக அமையாது என்றும் அதற்கு விளக்கம் சொன்னார்.

இதுவும் திமுகவின் தலைமையை எட்டியது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே கம்யூனிஸ்டு, காங்கிரஸ் போன்ற தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற சின்னங்களைக் கொண்ட கட்சிகளை தவிர பிற கூட்டணிக் கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்குமாறு திமுக தலைமை கேட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வமற்ற உரையாடல்களும் நடந்து வருகின்றன. உதயசூரியன் இல்லாமல் வேறு ஏதேனும் தற்காலிக சின்னத்தில் நிற்கும் பட்சத்தில் சின்னத்தை அடிப்படையாகக்கொண்டே வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படும் நிலையில், அந்த தற்காலிக சின்னங்களை அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தோற்கடித்துவிடுமோ என்று திமுகவுக்கு சந்தேகம். அதனால்தான் எம்.பி தேர்தலிலேயே மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளின் ரவிக்குமார், கொமதேகவின் சின்ராஜ் உள்ளிட்டோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றார்கள். இப்போதும் அதே ஃபார்முலாவையே பின்பற்ற விரும்புகிறது திமுக. ஆனால் வைகோ தனி சின்னம்தான் வேண்டும் என்று கேட்டதும், திமுகவிடமிருந்து வந்த பதில் வேறு மாதிரி இருந்துள்ளது.

‘தனி சின்னத்தில் நிற்கலாம். ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கை மூன்று தான். ஏனெனில் தனி சின்னத்தில் நிற்க வாய்ப்பு கொடுத்துவிட்டு அதிமுகவின் வெற்றியை உறுதிப்படுத்த திமுக தயாராக இல்லை. எனவே உதயசூரியன் சின்னம் என்றால் சீட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தனிச் சின்னம் என்றால் மூன்று தான்’ என்பதே வைகோவுக்கு திமுக அனுப்பி வைத்த செய்தி.

இந்த பின்னணியில்தான் கடந்த ஓரிரு நாட்களாக சென்னை ஆளுநர் மாளிகையில் இருக்கும் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை ஜனவரி 2ஆம் தேதி இரவு தேடிச் சென்று சந்தித்துள்ளார் வைகோ. அந்த போட்டோவையும் வெளியிட்டு, 'இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா (நாயுடு) அவர்களிடம் வேளாண் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்க மாநிலங்களவையை உடனே கூட்ட வலியுறுத்திய தருணம் - தமிழக ஆளுநர் மாளிகையில்’ என்று தகவல் குறிப்பு கொடுத்திருக்கிறார் வைகோ.

வெங்கையா நாயுடு டிசம்பர் கடைசி வாரத்தில் இருந்தே பெங்களூரு, விஜயவாடா என்று முகாமிட்டு டிசம்பர் 31ஆம் தேதியே சென்னை ராஜ்பவனுக்கு வந்துவிட்டார். ஜனவரி 1ஆம் தேதி வெங்கையா நாயுடுவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அடுத்த நாள் ஜனவரி 2ஆம் தேதி திடீரென வெங்கையா நாயுடுவை வைகோ சந்தித்திருக்கிறார். வெங்கையா நாயுடு இப்போது குடியரசுத் துணைத் தலைவராக இருந்தாலும்... ஏற்கனவே அவர் தீவிர அரசியலில் இருந்தவர். அதுவும் குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான தமிழ்நாட்டு அரசியல் நிலவரத்தை மாற்றியமைத்ததில் வெங்கையா நாயுடுவுக்குப் பெரும்பங்குண்டு. இன்றைக்கு அவர் அரசியலைத் தாண்டிய அரசமைப்பு சட்ட பதவியை வகித்து வந்தாலும், வைகோ வெங்கையா நாயுடுவின் சந்திப்பில் அரசியல் இல்லாமல் இல்லை என்கிறார்கள்.

திமுகவோடு தொகுதிகளின் எண்ணிக்கை, சின்னம் ஆகியவற்றில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் வைகோ, கடந்த இரு நாட்களாக வெங்கையா நாயுடு சென்னையில் இருக்கும் தகவலை அறிந்துகொண்டு உடனடியாகச் சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது வேளாண் சட்டங்கள் பற்றி விவாதிக்க மாநிலங்களவையைக் கூட்டுமாறு அதன் தலைவர் என்ற முறையில் வெங்கையா நாயுடுவை வலியுறுத்தியதாக வைகோ தெரிவித்தாலும் திமுக தலைமை இதை வேறு வகையில் பார்க்கிறது.

கடந்த சில தேர்தல்களாகவே... தேர்தல் நேரத்தில் ஒரு நீண்ட கால கூட்டணியில் இருந்து சர்ச்சைக்குள்ளான முறையில் வெளியே செல்வதை ஒரு வழமையான உத்தியாக வைத்திருக்கிறார் வைகோ. அதேபோல இம்முறையும் ஏதாவது நடக்குமோ என்று பதற்றத்தில் இருக்கிறது திமுக தலைமை. இந்தப் பதற்றத்தை உண்டுபண்ணி திமுக தலைமையிடம் தனது கோரிக்கையை நிறைவேற்ற வைகோ முயற்சி செய்கிறார் என்றும் திமுக தரப்பில் பேசிக் கொள்கிறார்கள்.

மதிமுகவைப் போலவே சிறுத்தைகள். ஐஜேகே கட்சிகளும் சின்னம் விஷயத்தில் திமுக தலைமையோடு வேறுபடுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக