சனி, 16 ஜனவரி, 2021

அதிமுக- அமமுக இணைப்பு: குருமூர்த்திக்கு ஜெயக்குமார் .. கங்கை. சாக்கடை என்று சொல்லியிருப்பது அறிவிலி

அதிமுக- அமமுக இணைப்பு: குருமூர்த்திக்கு ஜெயக்குமார் பதில்
minnambalam : பொங்கல் தினத்தன்று சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் அதன் ஆசிரியரான குருமூர்த்தி, “வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த சசிகலாவும், அதிமுகவும் இணைய வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

“எரிந்துகொண்டிருக்கும் வீட்டை அணைப்பதற்கு கங்கை நீரை தேடிக் கொண்டிருக்காமல் கையில் கிடைக்கும் சாக்கடை நீராக இருந்தாலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்”என்று அவ்விழாவில் பேசியிருக்கிறார் குருமூர்த்தி.    ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வத்தை தானே தர்மயுத்தம் செய்யத் தூண்டியதாக கூறியவர் குருமூர்த்தி. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வெல்ல வேண்டுமானால் அதிமுகவும், அமமுகவும் சேர வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் அரசியல் அரங்கில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.    இந்நிலையில் இதுகுறித்து ஜனவரி 15 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருக்கிறார். 

“குருமூர்த்தி தன்னை ஏதோ கிங்மேக்கர் என்றும், பிதாமகன், சாணக்யன் என்றும் நினைத்துக் கொண்டு பில்டப் செய்து வருகிறார். இதெல்லாம் தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம். வேறு எங்காவது போய் வைத்துக்கொள்ளட்டும்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுக அரசை தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டார்கள். இது நிதர்சனமான உண்மை. இந்நிலையில் கங்கை. சாக்கடை என்று உவமை சொல்லியிருப்பது அறிவிலித் தனமானது. இங்கே வீடும் பற்றி எரியவில்லை. அணைக்கவும் தேவையில்லை. குருமூர்த்தி வேண்டுமானால் அமெரிக்காவில் தற்போது வீழ்ந்த டிரம்ப்புக்கு போய் ஆலோசனை சொல்லலாம்”என்றவர்,

“:தினகரனிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு, சம்பளத்தை வாங்கிக் கொண்டு குருமூர்த்தி இதுபோன்று கருத்துகளைக் கூறுகிறாரா? யாராக இருந்தாலும் நா காக்க வேண்டும்” என்று கடுமையாக பதிலளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

மேலும், “அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. உரிய நேரத்தில் தலைமை அறிவிக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக