வெள்ளி, 22 ஜனவரி, 2021

கூட்டணியில் யார், யார்? ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு! மாசெக்கள் அதிர்ச்சி!

 டிஜிட்டல் திண்ணை: கூட்டணியில் யார், யார்? ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு! மாசெக்கள் அதிர்ச்சி!

minnambalam :மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது. "திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 21ஆம் தேதி அறிவாலயத்தில் நடந்தது. அண்மையில் திமுக கூட்டணிக்குள் யாருக்கு எத்தனை சீட்கள் என்ற விவாதம் திமுகவிலும் கூட்டணி கட்சிகளிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் பிரச்சினை காரணமாக தமிழ்நாட்டிலும் அது எதிரொலிக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்... ஜனவரி 21ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி பற்றி ஸ்டாலின் சில முக்கியமான தெளிவுகளை ஏற்படுத்தி உள்ளார். மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பேசிய அவர்... 'நம்முடைய கூட்டணி இப்படியே தொடர வேண்டும் என்பதில் நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்கள். நானும் இதையே விரும்புகிறேன்....கடந்த ஐந்து வருடமாக நம்முடைய ஒவ்வொரு போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் கூட்டணிக் கட்சிகளும் நம்மோடு சேர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். போராடி வருகிறார்கள். இப்படி நம்மோடு நிற்கும் கூட்டணிக் கட்சிகளை நாம் விட முடியாது... விடக்கூடாது.... அதே நரம் திமுக கூட்டணியில் சேர்வதற்கு இன்னும் சில கட்சிகள் என்னிடம் கேட்டு வருகிறார்கள். நான்தான் அவர்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறேன்.

மாவட்டச் செயலாளர்கள் ஆகிய நீங்களும் இந்தக் கூட்டணி தொடர வேண்டும் என்கிறீர்கள். ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்டைக் குறைவாகக் கொடுங்கள் என்று சொல்கிறீர்கள்.

நாம் சீட்டுகளை எப்படி பங்கிட்டுக் கொடுத்தாலும் நம்முடைய சில மாவட்டச் செயலாளர்களுக்கு கூட சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

அப்படி உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் உங்கள் மாவட்டத்தில் இருக்கிற தொகுதிகளை ஜெயிக்க வைத்துக் கொண்டுவர வேண்டும். உங்களில் சிலர் தேர்தலில் போட்டியிடா விட்டாலும்... நம்முடைய தொகுதிகளையும் கூட்டணிக் கட்சி தொகுதிகளையும் ஜெயிக்க வைத்தால் உங்களுக்கு என குறிப்பிட்ட மார்க் போடுவேன். ஆட்சி அமைந்ததும் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பு இல்லாவிட்டாலும் வேறு வகையில் முக்கியமான பதவிகள் வழங்கப்படும். எனவே நான் போட்டியிடவில்லை; திமுகப் போட்டியிடவில்லை என்று புறக்கணிக்காமல் அனைத்து தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான் என்ற உணர்வோடு வெற்றியைக் கொண்டு வாருங்கள்.

சட்டமன்றம் முடிந்ததும் மாநாடு, விருப்ப மனு தாக்கல் என தேர்தல் பணிகள் தொடங்கிவிடும்' என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின்.

அதாவது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மாவட்டச் செயலாளர்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளும் உண்டு என்பதைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் ஸ்டாலின்" என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக