புதன், 27 ஜனவரி, 2021

சசிகலா விடுதலையானார் . அடுத்து இளவரசி விடுதலையாவார் சுதாகரன் தாமதமாகவே விடுதலை?

Veerakumar - tamil.oneindia.com : பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா இன்று பெங்களூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அதேநேரம், அவரோடு சிறையில் அடைக்கப்பட்ட சுதாகரன் எப்போது விடுதலை ஆவார் என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன். இவரும் ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 வருடம் சிறை தண்டனை மற்றும் ஜெயலலிதா தவிர்த்த மற்ற மூவருக்கும், தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இளவரசி ரிலீஸ் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் சசிகலா, நான்காண்டு தண்டனை காலம் முடிந்து இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தினார். இளவரசியும் அபராதத் தொகையை செலுத்தி விட்டார். அவர் பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூடுதலாக ஒரு வருடம் அதேநேரம், சுதாகரன் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தவில்லை. இதன் காரணமாக அவர் எப்போது ரிலீஸ் செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. அபராத தொகையை செலுத்தாவிட்டால் கூடுதலாக ஒரு வருடம் தண்டனை காலத்தை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக் காலம் குறைப்பு ஏற்கனவே விசாரணை காலத்தில் சுதாகரன் சிறையில் இருந்த நாட்களை கணக்கு போட்டு அவரது சிறை தண்டனை காலத்திலிருந்து 89 நாட்களைக் கழித்துக் கொள்ள கடந்த டிசம்பர் 17ம் தேதி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. அப்போது அவரது வழக்கறிஞர் முத்துக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், இன்னும் சில நாட்களில் அபராதத் தொகை செலுத்தப்படும் என்று கூறினார்.

அபராதம் செலுத்தாத சுதாகரன் இதுவரை அபராதம் செலுத்தாதது பற்றி அவரிடம் கேட்டபோது, அது பற்றி தனக்கு தெரியாது என்று அவர் பதிலளித்துள்ளார். ஆனால் சசிகலா முதலில் ரிலீஸ் செய்யப்பட வேண்டும், அதற்குப் பிறகுதான் தனது ரிலீஸ் நடைமுறையைத் தொடங்க வேண்டும் என்று சுதாகரன் விரும்புகிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் காரணம் இதன் பின்னணியில் சில அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலா தமிழகம் சென்று தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கட்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய பிறகு சிறையில் இருந்து வெளியாகும் நடவடிக்கைகளை சுதாகரன் தொடங்க திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த காலகட்டங்களில் ஜெயலலிதா சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் தனியாகவும் சுதாகரன் தனியாகவும் வருகை தருவார்கள். சுதாகரனுடனான பழக்க வழக்கங்களை அடியோடு நிறுத்திக் கொள்ளுமாறு ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருந்தார். இதை சசிகலா மற்றும் இளவரசி தொடர்ந்து பின்பற்றி வந்தனர்

சுதாகரன் ரிலீஸ் எப்போது? சுதாகரன் ரிலீஸ் எப்போது? இப்போதும், தன் வழி தனி வழி என்ற வகையில் செயல்படுவது தான் நல்லது என்று சுதாகரன் நினைப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவிக்கிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது எப்படி சசிகலா மற்றும் இளவரசி உடன் அவரது உறவினரான சுதாகரன் தொடர்பு இல்லாமல் இருந்தாரோ அதே போல இப்போதும் இருப்பது தான் சரியானது என்ற முடிவில் அவர் இருக்கிறார். எனவே சசிகலா தமிழகம் சென்று சில நாட்கள் கழித்து சுதாகரன் தரப்பு நீதிமன்றத்தில் அபராத தொகை செலுத்தும். அதன் பிறகு அவர் விடுதலை செய்யப்படுவார் என்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக