வியாழன், 28 ஜனவரி, 2021

செங்கோட்டைக்குள் கொடியேற்றியவர் மோடியோடு இருப்பது எப்படி?- விவசாய சங்கங்கள் கேள்வி

செங்கோட்டைக்குள்  கொடியேற்றவர் மோடியோடு இருப்பது எப்படி?- விவசாய சங்கங்கள் கேள்வி
Minnambalam& ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்யில் நடந்த விவசாயிகளின் டிராக்டர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்குக் காரணம் மத்திய அரசின் சதிதான் என்று விவசாயிகள் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. செங்கோட்டையில் ஏறி கொடியேற்றியவர் பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.  ஜனவரி 27 ஆம் தேதி இரவு டெல்லி-சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் செய்தியாளர் கூட்டத்தில் மூத்த பஞ்சாப் விவசாயிகள் சங்க தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் பேசினார்.

“ ஒப்புக் கொள்ளப்பட்ட அணிவகுப்பு வழியிலிருந்து விலகி செங்கோட்டையை நோக்கி செல்ல விவசாயிகளை தொழிற்சங்கத் தலைவர்கள் தூண்டியதாக டெல்லி போலீஸார் கூறுவது தவறு. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய மற்றும் அணிவகுப்புகளுக்கான நிபந்தனைகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பல விவசாய சங்கத் தலைவர்கள் நான் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள்.

உண்மை என்னவெனில்... அமைதியான முறையில் நடந்து வந்த விவசாயிகள் போராட்டம், டிராக்டர் அணிவகுப்பு ஆகியவை அரசுடைய சதித்திட்டத்துக்கு பலியாக்கப்பட்டுவிட்டது. .

செங்கோட்டையில் கொடியேற்றிய நடிகர் தீப் சித்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்.எஸ்.எஸ்) தொடர்பு கொண்டுள்ளவர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் அறிமுகமானவர்.அவர்தான் , செங்கோட்டையில் கொடியை ஏற்றி வன்முறையைத் தூண்டியவர்.

2 லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களைக் கொண்ட லட்சக்கணக்கான விவசாயிகளின் வரலாற்று அணிவகுப்பாக இது அமைந்திருந்தது. , 99.9% விவசாயிகள் அமைதியாக இருந்தனர்" என்று ராஜேவால் கூறினார்,

முன்னதாக இந்தக் கூட்டமைப்புடன் தொடர்பு இல்லாத இரு விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தன.

இதற்கிடையில் டெல்லி போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், “தேசிய நினைவுச் சின்னமான செங்கோட்டைக்குள் அவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்படி நுழைந்தார்கள்? யார் அவர்களை உள்ளே அனுமதித்தனர், யார் வாயிலைத் திறந்தார்கள்? செங்கோட்டை காவல்துறையினரால் மட்டுமல்ல, ஆயுதப்படைகளாலும் பாதுகாக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், ”என்று கேள்விகளை எழுப்பினார்.

"எங்கள் போராட்டத்தால் அரசாங்கம் மிகவும் கவலையாக இருந்தது என்பது மிகவும் தெளிவாக உள்ளது, இது பல மாதங்களாக அமைதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு பஞ்சாப் தொழிற்சங்கம், கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி மற்றும் முன்னர் பாஜகவுடன் தொடர்பு கொண்டிருந்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து ஆகியோருடன் போலீஸ் நடத்திய சதித்திட்டத்தில்தான் குடியரசு தின டிராக்டர் அணிவகுப்புகளின் போது செயற்கையாக வன்முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டின் போது நாடாளுமன்றம் நோக்கி பேரணி செய்வதை ரத்து செய்துள்ளோம். அமைதியான முறையில் எங்கள் போராட்டம் தொடரும்”என்று விவசாய சங்கக் கூட்டமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக