திங்கள், 25 ஜனவரி, 2021

BBC : பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க. இடம்பெறுமா?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி

முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் ": தமிழக சட்டமன்றத் தேர்தல், தனிச் சின்னத்தில் போட்டி, பா.ம.கவுடன் கூட்டணி சாத்தியமா என்பது குறித்து எல்லாம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுக்கு அளித்த பேட்டியின் இரண்டாவது பகுதி இது. பேட்டியிலிருந்து: 

கே. தி.மு.க. கூட்டணிக்குள் பாட்டாளி மக்கள் கட்சி வரக்கூடும் என்ற பேச்சுகள் தற்போது அடிபடுகின்றன. அப்படியான சூழலில் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பாட்டாளி மக்கள் கட்சி எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கும். இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துவிட்டு, இரு கட்சிகளுடனும் கூட்டணி வைப்பார்கள். நாங்களும் இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்திருக்கிறோம். ஒரு முறை அண்ணா தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். தவிர்க்க முடியாத நிலையில், அந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டியிருந்தது.

இந்தத் தருணங்களில் கொள்கை ரீதியான விமர்சனங்களை வைத்திருக்கிறோம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான விஷயங்கள் குறித்து விமர்சனங்களை வைத்திருக்கிறோம். ஆனால், தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை வைத்தது கிடையாது.

பா.ம.கவும் தி.மு.கவும் கூட்டணி வைக்கும் நிலைப்பாட்டை எடுக்கின்றன என்றால், அவரவர் கட்சி நலன் சார்ந்து அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. வி.சி.கவை உடன் வைத்துக்கொள்வதால் கிடைக்கும் ஆதாயத்தைவிட, வெற்றி வாய்ப்பைவிட பா.ம.கவை வைத்துக்கொள்வதால் கூடுதலான ஆதாயம் கிடைக்கும் என்றால் அதைத்தான் அவர்கள் தேர்வுசெய்வார்கள்.

பா.ம.க. வந்தால், வெற்றி கிடைக்கும் என்று தெரிந்தாலும்கூட, அக்கட்சியோடு கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம் என்று தி.மு.க. சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. அவர்களைப் பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தைப் பெறும் நோக்கத்தோடு தேர்தலை சந்திக்கிறார்கள். காய்களை நகர்த்துகிறார்கள். வி.சி.க. இப்போது அந்த இடத்தில் இல்லை.

ஆகவே, நாங்கள் ஒரு முடிவை எடுத்திருக்கிறோம். அதாவது, சாதீய, மதவாத சக்திகளுடன் கூட்டணி வைப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறோம். இருபது ஆண்டுகளாக நாங்கள் பேசிவரும் அரசியல்தான் இது. 2011க்கு முன்பு பா.ஜ.கவுடன் மட்டும்தான் கூட்டணி இல்லை எனக் கூறிவந்தோம். ஆனால், அதற்குப் பிறகு பா.ம.கவுடனும் கூட்டணி இல்லை என்ற முடிவை எடுத்தோம். அவர்கள் இடம்பெறும் கூட்டணியில் இடம்பெறுவதில்லை என முடிவெடுத்தோம்.

பா.ம.க., தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுமென்றால், அவர்களுடன் சேரக்கூடாது, அவர்களைச் சேர்க்கக்கூடாது என நான் சொல்ல முடியாது. சேர வேண்டுமா என்பதை பா.ம.கவும் சேர்க்க வேண்டுமா என்பதை தி.மு.கவும்தான் முடிவுசெய்யும். இதில் நாங்கள் கருத்துச் சொல்வதற்கில்லை. ஆனால், எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் முடிவுசெய்ய முடியும். பாஜக, பாமக ஆகிய இரு கட்சிகளும் இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இடம்பெறமாட்டோம் என்பது எங்கள் நிலைப்பாடு.

கே. 2011ல் பா.ம.க. இடம்பெற்றிருந்த கூட்டணியில் இருந்தீர்கள்தானே.. அதற்குப் பிறகு இந்த முடிவை எடுக்க என்ன காரணம்?

ப. 1999 தேர்தலிலேயே எங்களுக்கு எதிரான வன்முறையை அவர்கள் கட்டவிழ்த்துவிட்டார்கள். அதற்குப் பிறகு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றினோம். பிறகு வந்த தேர்தலில் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டால், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து இயங்க முடியவில்லை. நாங்களும் விட்டுவிட்டோம். 2009ல் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றிருந்தது. அந்தக் கூட்டணி தோல்வியடைந்தது. 2011ல் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றார்கள். "நாங்கள் அந்தக் கூட்டணிக்கு வருகிறோம் என்பதால் சென்றுவிட வேண்டாம்" என்று சொன்னார்கள். ஆனால், அந்த அணி முழுமையாக தோல்வியடைந்தது. பா.ம.க. 31 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் வென்றது. எங்களுக்குக் கிடைத்த 9 இடங்களிலும் தோல்வியே கிடைத்தது.

அதற்குப் பிறகு 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தர்மபுரி விவகாரத்தைக் கையில் எடுத்து, பிரச்சனையை ஏற்படுத்தினார்கள். அதற்குப் பிறகு, தலித்துகள் அல்லாத அனைத்து சமுதாயப் பேரியக்கம் என்ற ஒன்றை உருவாக்கினார்கள். காதல் திருமணங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்றன. அதற்கு எப்படி ஒரு இயக்கம் காரணமாக இருக்க முடியும்? எப்படி ஒரு கட்சித் தலைமை காரணமாக இருக்க முடியும்? பா.ஜ.க. சிறுபான்மையினர் ஓட்டே (தங்களுக்கு) வேண்டாம் என முடிவெடுத்ததைப் போல, பா.ம.க. தலித் வாக்குகளே வேண்டாமென முடிவெடுத்து இப்படிச் செய்தது. எங்கள் மீது பழிசுமத்தினார்கள்.

அந்தத் தருணத்தில், பொதுமக்கள் புரிந்துகொள்ளும்வரை அமைதிகாப்போம் என காத்திருந்தோம். எந்த சாதிக்கும் எதிராக, சமூகத்திற்கும் எதிராக நான் பேசியதில்லை. தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நடந்தால் நான் அதைக் கண்டிக்கிறேன். இடதுசாரிகள், காங்கிரஸ் என எல்லோருமேதான் கண்டிக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு எதிராக மட்டும் இயக்கத்தை உருவாக்கி செயல்படும்போது, இனி இணைந்து செயல்பட முடியாது என முடிவெடுத்தோம்.

கே. சசிகலா விரைவில் சிறையிலிருந்து விடுதலையாகவிருக்கிறார். அவருடைய வருகை தமிழக அரசியல் களத்தில் எவ்வித சலனத்தை, மாற்றத்தை உருவாக்குமென நினைக்கிறீர்கள்?

ப. தண்டனைக் காலம் முடிந்து அவர் வீட்டிற்குத் திரும்புகிறார். அது எந்த அளவுக்கு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமென என்னால் சொல்ல முடியவில்லை. "அ.தி.மு.க. என்னுடைய கட்சி, அதில் நான் உறுப்பினராக வேண்டுமென" கோரப் போகிறாரா, தனியாக கட்சி துவங்கி தி.மு.க. - அ.தி.மு.கவுக்கு எதிராக அரசியல் செய்யப்போகிறாரா, அல்லது தினகரன் தலைமையிலான அ.ம.மு.கவில் பொறுப்பெடுத்து வேலைசெய்யப்போகிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. அவர் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதை வைத்துத்தான் கருத்து சொல்ல முடியும்.

கே. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. அவர்களுடைய வாய்ப்பு எந்த அளவுக்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்..

ப. கமல்ஹாசன் முற்போக்கான கருத்துகளைச் சொல்கிறார். சினிமாவில் இருந்த பிரபலம் அரசியலில் பயன்படும் என்ற நம்பிக்கையோடு அவர் களத்தில் இறங்கியிருக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்த காலம் வேறு. அவர்கள் மீது இருந்த ஈர்ப்பு என்பது வேறு. எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் இருந்தபோதே, பெரியாரோடு, அண்ணாவோடு, கலைஞரோடு இணைந்து பணியாற்றினார்.

சினிமாவிலேயே இருந்துவிட்டு, தனக்கு அங்கு செல்வாக்கு இல்லை என்றவுடன் அரசியலுக்கு வரவில்லை. திரைப்படங்களிலேயே கறுப்பு - சிவப்பு கொடியை பிடித்தார். அண்ணாவையும் பெரியாரையும் பேசினார். திரைப்படங்களில் நடிக்கும்போதே தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். தவிர, அந்த காலகட்டத்தில் சமூகவலைதளங்கள் கிடையாது.

இப்போதிருப்பதைப் போல அரசியல் விழிப்புணர்வு கிடையாது. சினிமாவின் தாக்கம் அப்போது மிக அதிகம். இப்போது அப்படியில்லை. ஆகவே, அவர்கள் சாதித்ததைப் போல இப்போது நடிகர்கள் சாதிக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி.

ஆனாலும் கமல் நம்பிக்கையோடு களத்தில் நிற்கிறார். தனி அணி கட்ட முயற்சிக்கிறார் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்.

கே. வரவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு எந்த அளவுக்கு முக்கியமான தேர்தல்?

ப. கலைஞரும் ஜெயலலிதாவும் இல்லாத சூழலில் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அ.தி.மு.கவின் பலவீனத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய முயற்சிக்கிறது பா.ஜ.க. அக்கட்சியைப் பொறுத்தவரை, தி.மு.க. ஆட்சியைப் பிடித்துவிட்டாலும், இரண்டாவது பெரிய கட்சி என்ற நிலையை எட்ட வேண்டுமென நினைக்கிறார்கள். தி.மு.கவை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சி என்ற அந்தஸ்தை அடைய நினைக்கிறார்கள்.

அ.தி.மு.கவில் கவர்ச்சிகரமான தலைவர் இல்லை. இன்னமும் அவர்களால் பொதுச் செயலாளரை அறிவிக்க முடியவில்லை. தலைவரை அறிவிக்க முடியவில்லை. ஒருங்கிணைப்பாளருடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா இறந்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன.

இருந்தபோதும் இத்தனை ஆண்டுகளில் ஒரு உறுதியான தலைமையை உருவாக்க முடியவில்லை. உள்ளே ஆளுமைகளின் மோதல் இருக்கிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆட்சி நிர்வாகத்தில் உள்ள ஊழலை வைத்து அச்சுறுத்தி கூடுதல் இடங்களைப் பெற நினைக்கிறது பா.ஜ.க. அதன் மூலம், இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவை இல்லாமல் செய்துவிட வேண்டும்; அந்த இடத்திற்கு நாம் வந்துவிட வேண்டும்; அடுத்த தேர்தலின்போது, தி.மு.கவா, பா.ஜ.கவா என்ற இடத்திற்கு செல்ல வேண்டுமென அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆகவே இதில் பாதிப்பை சந்திக்கப்போவது அ.தி.மு.கதான். ஆனால், பா.ஜ.கவின் இலக்கு தி.மு.கதான். குளறுபடியை ஏற்படுத்தி, குழப்பத்தை ஏற்படுத்தி தி.மு.கவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவேண்டும். அதையும் மீறி தி.மு.க வெற்றிபெற்றுவிட்டால், நாம் இரண்டாவது இடத்தில் இருக்க வேண்டுமெனக் கருதி வேலை செய்கிறார்கள். அதனால், இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்.

தி.மு.கவைப் பொறுத்தவரையில், அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் சிறு வயதிலிருந்தே அரசியலில் ஈடுபட்டவர். படிப்படியாக பணியாற்றி மேலே வந்தவர். முதலமைச்சர் ஆக வேண்டுமென்ற தீவிரத்தோடு பணியாற்றுகிறார்.

இந்தத் தேர்தல் மிகச் சவாலான தேர்தல் என தி.மு.க. கருதுகிறது. இந்த தேர்தலை ஒரு கடைசி வாய்ப்பாகவே கருதி தேர்தலைச் சந்திக்க அவர்கள் தீவிரமாகத் திட்டமிட்டு பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.கவின் தீவிரம், பா.ஜ.கவின் தீவிரம், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் முயற்சிகள், அ.தி.மு.கவின் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக