செவ்வாய், 12 ஜனவரி, 2021

சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்" - விவசாயிகள் திட்டவட்டம் BBC

Image may contain: 2 people, text that says 'Iா தி.மு.க தாக்கல் செய்த ரிட் மனுவில், என்னுடைய வாதத்தை கேட்ட பின்பு வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இது தி.மு.க மற்றும் நாட்டின் அத்தனை விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி. பி.வில்சன் எம்.பி.,'
விவசாயிகள் போராட்டம்
BBC :இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை இடைக்காலமாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நடவடிக்கையை பெரும்பாலான விவசாயிகள் வரவேற்றாலும், சட்டங்களை திரும்பப்பெறும் தங்களின் கோரிக்கையில் அவர்கள் உறுதியுடன் காணப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் உத்தரவு பிறப்பித்த சில நிமிடங்களில் டெல்லியின் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பிபிசி செய்தியாளர் அரவிந்த் சாப்ரா பேசினார். அதில் பலரும் "விவசாயிகள் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்ற உத்தரவை, தங்களுக்கு கிடைத்த பாதி வெற்றியாக கருதுகிறார்கள். சர்ச்சைக்குரிய அந்த சட்டங்கள் முழுமையாக திரும்பப் பெற்றால்தான் அது தங்களுக்கு கிடைத்த 100 சதவீத வெற்றி ஆக கருத முடியும்," என்று தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழு விவசாயிகளின் நலன்கள் குறித்து பேசினால் பரவாயில்லை, ஆனால், அது அரசுக்காக பேசுவதாக இருந்தால் அதனுடன் எங்களுக்கு எந்த வேலையும் இல்லை என்று களத்தில் உள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, வேறு சில விவசாயிகள் தரப்பு உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்றனர். ஆனால், சட்டங்கள் திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடர வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

விவசாயிகள் போராட்டம்

இதற்கிடையே, 40 விவசாயிகள் சங்கங்களை உறுப்பினராகக் கொண்டுள்ள சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அமைப்பு, நீதிமன்ற உத்தரவுக்கு பிந்தைய நிலவரம் குறித்து விவாதிக்க தமது உறுப்பு சங்கங்களுடன் ஆலோசனையை தொடங்கியிருக்கிறது.

ஐக்கிய கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் தலைவர் அபிமன்யு கொச்சார், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக பிபிசி செய்தியாளரிடம் கூறினார்.

மற்றொரு தலைவரான ஹரிந்தர் லோக்வால், சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் முழுமையாக திரும்பப்பெறப்படும்வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

இந்திய விவசாயிகள் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாய்த், "விவசாயிகளுக்கு சாதகமான அணுகுமுறையுடன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகளின் கோரிக்கை, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் இந்த மிகப்பெரிய இயக்கம் நடந்து வருகிறது. எனவே, எங்களுடைய கோரிக்கை நிறைவேறும்வரை இந்த போராட்டம் தொடரும்," என்று கூறினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து புதன்கிழமை தீர்மானிப்போம் என்று ராகேஷ் திகாய்த் தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம்

உச்ச நீதிமன்றம் என்ன கூறியது?

மத்திய அரசு சமீபத்திய நிறைவேற்றிய மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் கடந்த 49 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வந்த வழக்குகளை ஒன்றாக விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) உத்தரவிட்டது.

மேலும், மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்புகளுக்கு இடையே பல கட்டங்களாக நீடித்து வரும் பேச்சுவார்த்தை தொடர்ந்து பலனளிக்காத நிலையில், பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல நான்கு நபர்கள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

பி.எஸ். மன், பிரமோத் குமார் ஜோஷி, அசோக் குலாட்டி மற்றும் அனில் தன்வந்த் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்புகள் என இருதரப்பினரிடமும் கலந்துரையாடி அது குறித்த அறிக்கையை இந்த குழுவினர் உச்ச நீதிமன்றத்திடம் அளிப்பர். அதை முதலாக கொண்டு இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் ஆஜராகி வாதிட்ட அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், "மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு அவசரகதியில் கொண்டு வரவில்லை," என்று கூறினார்.

"நீதிமன்ற நடவடிக்கையை யாராலும் தடுக்க முடியாது"

இருப்பினும் நீதிபதிகள், "இந்த பிரச்னையை தீர்க்கவே நீதிமன்றம் விரும்புகிறது. ஒரு வகையில் இது வெளிப்படை சூழலுக்கு கிடைத்த வெற்றியாக இருக்கலாம். யாருடைய நிலமும் விற்கப்படாது என கூறுவதில் நீதிமன்றத்துக்கு எந்த சிரமமும் இல்லை. புதிய வேளாண் சட்டங்களை ஆராய குழு அமைக்கும் நீதிமன்றத்தின் முடிவில் யாரும் நீதிமன்றத்தை தடுத்து நிறுத்த முடியாது," என்று குறிப்பிட்டனர்.

"இது விவசாயிகளுக்கு வாழ்வா சாவா பிரச்னை. நாங்கள் அரசு கொண்டு வந்த சட்டங்கள் குறித்து கவலை கொள்கிறோம். அந்த சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர், உடைமைகள் குறித்து கவலைப்படுகிறோம். அந்த வகையில், எங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும்வரை நிறுத்தி வைக்கிறோம்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் பிரதமர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படவில்லை. இது ஒன்றும் அரசியல் கிடையாது. அரசியல் செயல்பாடுகளுக்கும் நீதித்துறை செயல்பாடுகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் நடத்தில் விவசாயிகள் போர்வையில் காலிஸ்தானி தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் அதை விசாரிக்கிறோம். இதற்கிடையே, விவசாயிகள் பாதுகாப்பாக போராட்டம் நடத்த விரும்பினால் டெல்லி காவல்துறை ஆணையருக்கு முறைப்படி மனு அளித்து ராம் லீலா அல்லது வேறு பாதுகாப்பான இடத்தில் போராடுவது குறித்து முடிவெடுக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவில் உள்ளவர்கள் யார்?

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழுவில் இடம்பெற்றவர்கள் வேளாண் பொருளாதார வல்லுநர்களாக அறியப்படுபவர்கள். குலாட்டி, இந்திய பொருளாதார உறவுகளுக்கான கவுன்சிலின் இன்ஃபோசிஸ் இருக்கைக்கான பேராசிரியராக இருப்பவர். 2015ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பிரமோத் ஜோஷி, சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசியாவுக்கான முன்னாள் இயக்குநராக இருந்தவர். தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநராகவும் அவர் இருந்துள்ளார். பூபிந்தர் சிங் மன், பாரதிய கிசான் யூனியனில் உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராக இருந்தவர். அனில் கன்வத், ஷேத்காரி சங்கதன் என்ற வேளாண் தொடர்புடைய அமைப்பின் தலைவராக இருப்பவர். இவரது அமைப்பு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறது.

இரு வாரங்களுக்கு முன்பு மத்திய அரசுடன் நடந்த ஆறாம் சுற்று பேச்சுவார்த்தையின்போது வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று கூறிய மத்திய அரசு, தேவைப்பட்டால் அது குறித்து ஆராய குழு அமைக்கலாம் என்று விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தது.

ஆனால், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருந்தது. இந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றமே வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆராய குழு அமைத்திருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் விவசாயிகள் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக