திங்கள், 4 ஜனவரி, 2021

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு - 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு - 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்
maalaimalar : பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் தங்கள் கடமையை செய்ய தவறிய 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்கவா மாகாணம் கரக் மாவட்டம் தெர்ரி என்ற கிராமத்தில் பழமையான இந்து கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை புதுப்பிக்க உள்ளூரைச் சேர்ந்த இந்துக்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர். இதை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்த கும்பல் நேற்று முன்தினம் கோவிலை இடித்து தீ வைத்து கொளுத்தியது. இதில் கோவில் முற்றிலும் சேதமடைந்தது.

இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்து கோவில் இடிக்கப்பட்டது தொடர்பாக, இந்தியாவும், பாகிஸ்தானிடம் தனது கண்டனத்தை பதிவு செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களையும் கைது செய்ய மாகாண அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்து கோவில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் தங்கள் கடமையை செய்ய தவறிய 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக