திங்கள், 11 ஜனவரி, 2021

அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளைக் கேட்கிறது பாமக.

தைலாபுரம் தோட்டத்தில் அமைச்சர்கள்: ராமதாஸ் கேட்டது எத்தனை?

minnambalam : அதிமுக கூட்டணியில் பாமக தற்போது வரை இடம்பெற்றுள்ள நிலையில், இன்று (ஜனவரி 11) பகல் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை இரண்டாம் முறையாக சந்தித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அமைச்சர்கள் கே.பி.அன்பழகனும் தங்கமணியும் ராமதாசை சந்தித்தனர். இப்போது அடுத்த கட்டமாக அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும் ராமதாசை சந்தித்துள்ளார்கள்.  முதலில் நடந்த அமைச்சர்கள் சந்திப்பின்போதே, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து ராமதாஸ் எழுப்பி வரும் கோரிக்கை குறித்து முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று ஒரு வாரத்துக்குள் தீர்வு சொல்வதாக சொல்லிச் சென்றிருந்தனர். ஆனால் முதல்வர் பிரச்சாரம், அதிமுக பொதுக்குழு போன்ற காரணங்களால் ஒரு வாரத்துக்குள் மீண்டும் ராமதாசை அவர்கள் சந்திக்கவில்லை.

இதற்கிடையே கடந்த ஜனவரி 8 ஆம் தேதி நடந்த பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தில், “மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீடு வன்னியர் சங்கம் போராடி, பல தியாகங்களை செய்து பெற்றது என்றாலும், அந்த இட ஒதுக்கீட்டை கடந்த 32 ஆண்டுகளாக அனுபவித்து வரும், பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு கொஞ்சம் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. 

அந்த நல்லெண்ணத்துடன் 20% இட ஒதுக்கீட்டில் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு ஒரு பகுதியையும், வன்னியர்களுக்கு பெரும் பகுதியையும் ஒதுக்கீடு செய்யும் வகையில் தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை சற்று தளர்த்திக் கொண்டு, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒப்புதல் அளித்தார்”என்று கூறப்பட்டிருந்தது.

2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வரும்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார். ஆனால் அப்போது ராமதாஸ் இதுகுறித்து ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இன்று ராமதாஸே வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பெரும்பகுதியை உள் ஒதுக்கீட்டாக வழங்கவேண்டும் என்ற திட்டத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார். இதை திமுக தேர்தல் களத்தில் எழுப்ப நிறைய வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில் இன்று அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியும் சந்தித்தபோது வன்னியர் இட ஒதுக்கீட்டோடு, பாமகவுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம், “அதிமுக கூட்டணியில் வட மாவட்டங்களில் கணிசமான தொகுதிகள் உட்பட 40 தொகுதிகளைக் கேட்கிறது பாமக. ஆனால் அதிமுகவுக்கு 170 தொகுதிகள் போக மீதியிருக்கும் 64 இடங்களில்தான் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு என முதல் கட்ட முடிவில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எனவே, பாமக கேட்ட 40 தொகுதிகள் பற்றி உடனடியாக பதில் சொல்லாத அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளரிடமும், இணை ஒருங்கிணைப்பாளரிடமும் கேட்டுச் சொல்வதாகக் கூறியுள்ளனர்.

மேலும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது என்பது ஒரு நீண்ட செயல் திட்டமாக இருக்கும். வன்னியர்களுக்கு அதில் பெரும்பகுதியைக் கொடுத்துவிட்டால் ஒட்டுமொத்த வன்னியர் வாக்குகளும் அதிமுக அணிக்கு வந்துவிடப் போவதில்லை. அதேநேரம் வன்னியர் தவிர அந்த பட்டியலில் இருக்கும் தமிழகம் முழுக்க பரவலாக வசிக்கும் பிரமலைக் கள்ளர், மறவர், முத்தரையர், தொட்டிய நாயக்கர், போயர் உள்ளிட பிற சமுதாயத்தினரின் அதிருப்தியையும் எதிர்ப்பையும் அதிமுக தமிழகம் முழுவதும் எதிர்கொண்டாக வேண்டும்.

மேலும், ராமதாஸ் எதிர்பார்க்கும் வண்ணம் 20% ஒதுக்கீட்டில் பெரும்பகுதியை உள் ஒதுக்கீடாக வன்னியர்களுக்குக் கொடுக்கும் பட்சத்தில் வட தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் அதிருப்தியையும் அதிமுக எதிர்கொண்டாக வேண்டும். இதையெல்லாம் கணக்கிட்டுதான் இந்த விஷயத்தை முடிவு செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாசிடம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. விரைவில் இதற்குத் தீர்வு காணப்படும்” என்கிறார்கள்.

இந்த சந்திப்பு பற்றி அதிமுக, பாமக இரு தரப்பில் இருந்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக