புதன், 20 ஜனவரி, 2021

32 லட்சம் கோடி சொத்து’ தேசத்தின் உடைமையை பாதுகாப்போம்.

Image may contain: 1 person
Chinniah Kasi : · தீக்கதிர், ஜனவரி 20, 2021 நிதித்துறையில் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்பட்டது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாகும். ஜனவரி 19- 1956, ஆயுள் இன்சூரன்ஸ் துறை தேசியமயம் அறிவிக்கப்பட்ட நாள். 154 இந்திய இன்சூரன்ஸ் கம்பெனிகள், 16 அந்நிய கம்பெனிகள், 75 வருங்கால வைப்புநிதி சொசைட்டிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு தேசியமயமாக்க முடிவு செய்யப்பட்டது. சட்டம் இயற்றப்பட்ட மறுநாளே 42 பொறுப்பாளர்கள் அரசாங்கத்தால் இந்த கம்பெனிகளை எடுப்பதற்காக அல்லது நிர்வகிப்பதற்காக உடனடியாக நியமிக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்களின் கனவு மட்டுமல்ல; ஒரு அரசாங்கம் தன்னுடைய நாட்டு மக்களுக்கு எந்த வகையில் சேவை செய்ய வேண்டும் என்பதற்கான வாக்குறுதி ஈடேறிய நாள்.ஒரு பொதுத்துறை நிறுவனமாக இன்சூரன்ஸ் துறையை பாதுகாப்பதற்கான ஏற்பாடு அது. அரசின் ஏகபோகமாக அந்த துறை மாற்றப்பட்டது.
இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்படவேண்டும் என்ற கருத்து ஒரு நாளில் உதித்தது அல்ல. சுதந்திரப்போராட்ட காலத்திலேயே 1931 இல் நடைபெற்ற காங்கிரஸ்கராச்சி மாநாடு “சுதந்திரம் என்பது அரசாட்சி மற்றும் அரசியல் ரீதியானது மட்டுமல்ல, நலிவுற்ற லட்சக்கணக்கான மக்களின் பொருளாதார முன்னேற்றமே உண்மையான சுதந்திரம்” என்று கூறியது. இதுவே நிதித்துறை அமைப்புகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பதற்கான அடித்தளமாக அமைந்தது. இன்சூரன்ஸ் துறை தேசமயமாக்கப்படவேண்டும், அரசால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை கொண்டிருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் 1948-ல் இந்திய நாடாளுமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை கட்டமைக்கும்போது இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். 1953இல் காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதத்தில்இன்சூரன்ஸ், வங்கி, சுரங்கத் தொழில்கள் தேசியமயமாக்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
1955 இல் சென்னை ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்திய பொருளாதார முன்னேற்றம் என்பது சோசலிச பாணி சமூக முன்னேற்றமாக கட்டமைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுகள் எல்லாம் இணைந்து இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கல் என்பதற்கான ஒரு கருத்தாக்கத்தை கொண்டுவந்தது.
ரகசியமாக நடந்தது...
அதில் கூடுதல் சுவாரசியமான விஷயங்களும் உண்டு. இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்பட்டது என்கின்ற முடிவு மிகுந்த ரகசியமாக வைக்கப்பட்டது. என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிவதற்கு முன்பே மிக வேகமாக தேசியமயமாக்கல் செயல்படுத்தப்பட்டது. அதற்குமுக்கியக் காரணம், தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் அதுவரை அடித்து வந்த கொள்ளைகளே. ஒருவேளை, துறை தேசியமயமாக்கப்படுகிறது என்பதை அறிந்தால் அவர்கள் சொத்துக்களை தன்வசப்படுத்த முயல்வார்கள் என்று அரசு கருதியது. ஏற்கனவே 25 கம்பெனிகள் திவால் ஆகி இருந்த சூழலில், மேலும் 25 கம்பெனிகள் தங்களுடைய சொத்துக்களையும் வணிகத்தையும் மற்றகம்பெனிகளுக்கு மாற்றி இருந்த சூழலில், 1953- 54 நிதியாண்டில் 75 கம்பெனிகள் எந்த ஒரு லாபமும் அறிவிக்காத சூழலில் இந்த முடிவு செயல்படுத்தப்பட்டது.
ஆனால் வேடிக்கை என்னவென்றால் இத்தனை நட்டம் என்று கணக்கு காண்பித்த அனைத்து பணக்கார முதலாளிகளும் மிகுந்த வளத்துடனும், அதிக சொத்துடனும் தங்களின் மற்ற வணிகத்தை செய்து வந்தனர். ராமகிருஷ்ணன் டால்மியா, வங்கி மற்றும் இன்சூரன்ஸ் மூலமாக திரட்டப்பட்ட பணத்தை தன்னுடைய மற்ற கம்பெனிகளில் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை டிசம்பர் 1955 இல் பெரோஸ் காந்தி அவர்கள் மிக விரிவாக வெளிக் கொணர்ந்தார். இந்நிகழ்வுகளின் பின்னணியில்தான் அன்றைய நிதி அமைச்சர் சிந்தாமணி தேஷ்முக் அவர்கள், இப்படியான அதிகபட்ச ரகசியத்தோடு இம் முடிவினை அறிவித்தார். இதுகுறித்து அகில இந்திய வானொலியில் அவர் அறிவிப்பு வெளியிடும் பொழுது, இந்திய அரசாங்கத்தால் மிகச் சிறந்த முறையில் ரகசியம் காக்கப்பட்டு இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார். அவர் அகில இந்திய வானொலியில் இந்த அறிவிப்பை வெளியிடும் பொழுது அவ்வானொலி இயக்குனருக்கு கூட அறிவிப்பின் சாராம்சம் தெரியாத அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
எல்ஐசி உதயம்
1956 செப்டம்பர் 01ம் தேதி எல்ஐசி நிறுவனம் உருவாக்கப்பட்டபோது அன்றைய நிதி அமைச்சர் சிந்தாமணி தேஷ்முக், “நாங்கள் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தினை கட்டமைத்து இருக்கிறோம். அந்நிறுவனம் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் காப்பீடு வழங்கக்கூடிய நிறுவனமாகத் திகழும். அந்நிறுவனம் இந்த நாட்டு மக்களின் சேமிப்பை திரட்டக் கூடிய அமைப்பாகத் திகழும். அந்நிறுவனம் இந்த நாட்டு மக்களின் குடும்ப பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய நிறுவனமாகத் திகழும் அந்நிறுவனம் திறன்மிக்க சேவையை தரக்கூடிய நிறுவனமாகத் திகழும்” என்று குறிப்பிட்டார்.1951 இல் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உதயமான தினத்திலிருந்து தொடர்ந்து இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தத் துறை தேசியமயமாக்கப்பட்ட போது தனியார் நிறுவனங்களும், சில அரசியல் கட்சிகளும் அரசின் இந்த முடிவு தவறானது என்று கூறி வந்த சமயத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நிதி அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து செய்தி அனுப்பியது. அரசின் இந்த தைரியமான முடிவுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் நிறுவனங்களை அரசுடமை ஆக்கிட தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கூறியது.
40 கோடி பாலிசிகள்
அரசு எதிர்பார்த்தது போலவே எல்ஐசியும் அதன் நம்பகத்தன்மையை இன்றுவரை காப்பாற்றி வருகிறது. இன்று 40 கோடி பாலிசிகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. வெறும் ரூ. 5 கோடி முதலீட்டில் தொடங்கி
32,000,00,00,00,000 (32லட்சம் கோடி) சொத்து உள்ள நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி மிக உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. அனைத்து மக்களின் தேர்வாக எல்ஐசி நிறுவனம் இன்று வரை விளங்குகிறது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு ஆட்சியாளர்கள் இந்நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட முயற்சிப்பதை நாமறிவோம். ஆனால் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்த அரசின் இந்த முடிவினை ஊழியர்கள்மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இன்னும் தொடர்ந்துஎதிர்ப்பினை வலுப்படுத்துவோம். வரலாற்றினையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
கட்டுரையாளர் : ஸ்ரீகாந்த் மிஸ்ரா, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்.
தமிழில் : திருநெல்வேலி பொன்னையா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக