ஞாயிறு, 3 ஜனவரி, 2021

தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளரானார் நடிகர் விஜய் வசந்த்.. 32 துணை தலைவர்களை நியமித்து காங்.

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரானார் விஜய் வசந்த். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.. அதனால், அங்கு வரும் பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையமும் அறிவித்தது
இதையொட்டி, அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சீட் பெறக் கடும் போட்டி கடுமையான நிலவியது.. அந்த வகையில், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தன் தந்தையின் பாணியில் அரசியல் பயணங்களை முன்னெடுத்து வருவதால், அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 
 
"அவர் இருந்த இடத்திற்கு நீங்கள் வரணும்" என்று அவரது அபிமானிகளும் அரசியலுக்கு இழுத்து வந்தனர்.. ஆனால், இதற்கு விஜய் வசந்த் எந்தவித பதிலையும் சொல்லாமல் இருந்தார்.. கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதன் படிதான் செயல்படுவோம்.. தேர்தலில் நிற்பது தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இவர் இப்படி சொன்னாலும், ரூபி மனோகரன் அல்லது விஜய் வசந்த் இருவரில் ஒருவருக்குதான் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சீட் வழங்கும் என்று தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில்தான், விஜய் வசந்த் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக ரூபி மனோகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்களாக கோபண்ணா உள்ளிட்ட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தங்கபாலு மகன் கார்த்தி, திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்காக காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் வாக்குறுதி தயாரிக்கும் குழு தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
 தமிழக காங்கிரஸின் ஒருங்கிணைப்புக் குழுவில் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.எஸ் . அழகிரி உள்ளிட்டோர் உள்ளனர். ராமசாமி, சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர் ,செல்லகுமார், மாணிக்கம் தாகூர் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
 பெரும்பாலும் வாரிசுகளே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.. என்றாலும், அதலபாதாளத்தில் தமிழக காங்கிரஸ் தொங்கி உள்ள நிலையில், ஏகப்பட்ட உட்பூசல்கள் நிலவி வரும் நிலையில், விஜய் வசந்த் தன் பொறுப்பை சிறப்பாக செயல்படுத்துவாரா? அப்பாவின் பெயரை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக