ஞாயிறு, 10 ஜனவரி, 2021

பொதுக்குழு: இபிஎஸ்- ஓபிஎஸ் மோத வைத்த 16 ஏ! சசிகலா விவகாரமும் நியூமரலஜியும் காரணம்?

 

பொதுக்குழு: இபிஎஸ்- ஓபிஎஸ் மோத வைத்த தீர்மானம் 16 ஏ!

minnambalam :அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு, முதல்வர், துணை முதல்வர், முக்கிய அமைச்சர்கள் இரண்டரை மணிநேரம் காலதாமதமாக வந்ததற்கு, ஜோதிடமும், தீர்மானம் 16ஏ-வும்தான் காரணம் என்கிறார்கள் அதிமுகவினர்.  அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நேற்று(ஜனவரி 9), நடைபெற்றது. பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கடந்த 4ஆம் தேதியிலிருந்து ஐந்து நாட்களாக முதல்வரும் துணை முதல்வரும் ஆலோசித்து வந்தனர்.

பொதுக்குழுவில் சசிகலா சம்பந்தமாகத் தீர்மானத்தை நுழைக்க முயற்சி செய்தார் துணை முதல்வர் ஓபிஎஸ். அதற்கு முதல்வர் இபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதன் பிறகு சசிகலாவைப் பற்றி பொதுக்குழுவில் பேசவேண்டாம், தலைமை கழகத்தில் மாலையில் நடைபெற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசலாம் என்று முடிவுசெய்தனர்.

சனிக் கிழமை 9 - 10.30 ராகு காலம் என்பதால் 8.30 மணிக்கே பொதுக்குழுவைத் துவங்கிவிடலாம் என்றுதான் முதல்வர் பயணத் திட்டத்தைக் காலை 8.00 மணிக்கு கான்வாய் அலர்ட் செய்திருந்தனர் பாதுகாப்பு போலீஸார். முதல்வர் இன்னும் தயாராகவில்லை. ராகு காலம் முடிந்து 11.00 மணிக்குப் புறப்படலாம் என்று கூறிவிட்டதாக அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதன் பிறகு சாலையில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார்கள் ரிலாக்ஸ் ஆனதாகச் சொல்கிறார் சென்னை சிட்டி போலீஸார்.

முதல்வர் தனது எண்ணியல் ஜாதகப்படி கூட்டு எண் ஏழு வருவதுபோல் 16 தீர்மானங்களை முடிவுசெய்திருந்தார். அந்த நகல் ஒருங்கிணைப்பாளர் ஓ பிஎஸ் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டது, அவர் கூடுதலாக ஒரு தீர்மானத்தை இணைக்கச் சொல்லியிருந்தார்.

11பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் அதிகாரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தைத்தான் ஓபிஎஸ் வலியுறுத்தினார், இபிஎஸ் மறுத்துள்ளார், அதன் பிறகு மூத்த அமைச்சர்கள் சமரசம் செய்து தீர்மானத்தைத் தனியாக இணைத்தார்கள்.

முதல்வர் ராசிபடி 7 சிறப்பு எண், அதனால்தான் 16 தீர்மானம் தயார் செய்து பிரிண்ட் எடுத்து வைத்திருந்தார்கள். அந்த நகல்கள்தான் பலரது கைகளிலும் பரவியிருந்தது, கூடுதலாக ஒரு தீர்மானத்தை இணைத்தால் 17ஆகிவிடும், கூட்டு எண் 8 முதல்வருக்கு ஆகாத எண் என்பதால், ஜோதிடரைத் தொடர்புகொண்டு மாற்று வழி கேட்டு, தீர்மானம் 16- ஏ என்று இணைத்துக்கொண்டு, 11.00 மணி கடந்து வீட்டிலிருந்து புறப்பட்டார்கள் முதல்வரும் துணை முதல்வரும் என்றார்கள் பொதுக்குழு உறுப்பினர்கள்.

பொதுக்குழுவில் இருவரும் அண்ணன் அண்னன் என்று பேசினாலும் உள்ளுக்குள் இதுதான் உண்மை நிலை என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக