செவ்வாய், 26 ஜனவரி, 2021

பேரணி.. கண்ணீர் புகை குண்டு.. தடியடி.. 144 தடை... தலைநகரை திணறடித்த விவசாயிகள் போராட்டம்

tamil.news18.com  : டிராக்டர் பேரணி நடத்த டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடையை மீறி செங்கோட்டையில் விவசாயிகள் கொடியை ஏற்றினர்.

டெல்லிக்குள் நுழையும் பிரதான எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிபூர் வழியாக லட்சக்கணக்கான விவசாயிகள் தடைகளை அகற்றி பேரணியை காலையில் தொடங்கினர். குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின்னர் பேரணியை நடத்த போலீசார் அறிவுறுத்தியிருந்த நிலையில், கர்னல், காசிபூர் பகுதியில் 10 மணியில் இருந்தே விவசாயிகள் வாகனங்களிலும், டிராக்டர்களிலும் அணிவகுத்து சென்றனர்.
ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்குள் வராததால் சாலைகளில் கண்டெய்னர் லாரிகளை நிறுத்தியும், தடுப்புகளை அமைத்தும் போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். காசிப்பூர் எல்லையில் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி விவசாயிகளை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றனர்..... காசிபூர் எல்லையில் இருந்து பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பாண்டவ் நகர் பகுதிக்குள் விவசாயிகள் நுழைந்து போராட முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதனால் போலீசார் தடியடி நடத்தி விவசாயிகளை கலைத்தனர். பிரதான சாலைகளில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் மோதல் நடந்த நிலையில் அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் விவசாயிகள் அணி அணியாக சென்றனர்........ டிராக்டர் பேரணியின்போது நடந்தே வந்திருந்த பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கைகளில் போர்வாள்களை கொண்டு போலீசாரை தாக்க முயன்றதால் போலீசார் தற்காப்புக்காக பின்வாங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. பாண்டவ் நகர் பகுதியில் 5க்கும் மேற்பட்ட போலீசாரை ஒரே நபர் கையில் வாளுடன் எதிர்கொண்ட வீடியோவும் கவனம் ஈர்த்திருக்கிறது.

41 விவசாய சங்கங்களைச் சேர்ந்தோர் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில் பங்கேற்கச் சென்ற ஒரு டிராக்டர் சில்லா எல்லையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குதிரைகள், வாகனங்களில் சுமார் 11 லட்சம் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்றனர்.

டெல்லி போலீசார் அமைத்திருந்த தடைகளை டிராக்டர்களை கொண்டு தகர்த்த விவசாயிகள், ஐடிஓ பகுதியில் சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த மாநகராட்சி பேருந்தை கூட்டமாக சேர்ந்து அகற்றினர்.

ஐடிஓ அருகே சாலையை பேருந்துகளை கொண்டு மறித்த போலீசாரை போராட்டக்காரர்கள் ஓட ஓட விரட்டியடித்தனர். அப்போது தனியாக சிக்கிக்கொண்ட போலீஸ் ஒருவரை விவசாயிகள் தாக்க முயன்றபோது, விவசாயிகளில் ஒரு தரப்பினர் அவரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்சென்றனர்.

லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைந்துள்ளதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் வெறும் 10 ஆயிரம் போலீசார் திணறி வருகின்றனர். உச்சநீதிமன்ற வளாகம் அருகே போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியை அடுத்து டெல்லியின் ஐடிஓ பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டது. மேலும் தடியடி நடத்த முயன்ற போலீசார் மீது விவசாயிகள் சிலர் டிராக்டர்களை மோதுவதைப்போல இயக்கியதால் பரபரப்பு நிலவியது. டிராக்டர் மோதலில் இருந்து தப்பிக்க போலீசார் சிதறி ஓடிய காட்சியும் வெளியாகியுள்ளது.

நகரின் பல்வேறு பகுதிக்கும் சென்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி செங்கோட்டையை அடைந்தது. செங்கோட்டையின் சிறிய கோபுரத்தில் ஏறி விவசாயிகள் கொடி ஏற்றினர்.

செங்கோட்டையை சுற்றி 500க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கே அசாதாரண சூழல் நிலவியது.

இதனிடையே டிராக்டரில் சென்ற விவசாயி ஒருவர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவர் சென்ற டிராக்டரும் கவிழ்ந்து கிடந்தது. போலீசாரின் துப்பாக்கிச்சூட்டால்தான் உயிரிழந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு ஏதும் நடத்தவில்லை என்றும், கண்ணீர் புகைகுண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் விபத்தில் விவசாயி உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் வன்முறை காரணமாக டெல்லியில் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக