புதன், 9 டிசம்பர், 2020

இலங்கை வல்லிபுரம் புத்தர் சிலை! திராவிட பாரம்பரியம்... வல்லிபுரம் பொன்னேடு Vallipuram Gold Plate தமிழ் பௌத்ததின் ஆதிமூலமா?

இலங்கை வடமராட்சியில் பருத்திதுறைக்கு அருகாமையில் உள்ள வல்லிபுரம் பிரதேசத்தில் 1902 ஆம் ஆண்டுவரை இங்கே காணப்படும் இந்த புத்தர் சிலை இருந்திருக்கிறது . அதன் பின்பு இந்த சிலை யாழ்ப்பாண பழைய பூங்காவில் உள்ள ஒரு அரச மரத்தின் கீழே வைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் 1906 ஆம் ஆண்டு அப்போதைய கவர்னர் சர் ஹென்றி பிளேக் என்பவரால் சியாம் (தாய்லாந்து) மன்னரின் விருப்பத்திற்கு ஏற்ப அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது. அதற்கு பின் இந்த சிலை பற்றி மக்கள் மறந்தே விட்டார்கள் .. அப்போதெல்லாம் இலங்கையில் சிங்கள பௌத்தம் என்பதாக அல்லாமல்.வெறும் பௌத்தம் என்றே கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இது பற்றி சுவீடனை சேர்ந்த பேராசியர் திரு பீட்டர் ஷாக் அவர்கள் ஆய்வு செய்துள்ளார் இது பற்றிய நிகழ்ச்சிகளையும் அவர் முன்னெடுத்தது வருகிறார்!

Vallipuram Budhdha in Thailand
 இலங்கையில் சிங்கள, பௌத்த வரலாறு பற்றியும் பல ஆய்வுகளை முன்வைத்துள்ளார். இவர் வல்லிபுரம் புத்தர் உருவச்சிலை வைக்கப்படுள்ள தாய்லாந்து விகாரைக்கு சென்று (1994, 1996) ஆய்வினை மேற்கொண்டு ஒரு கட்டுரையினை சமர்ப்பித்துள்ளார் 

vallipuram temple
("The Vallipuram Buddha Image 'Rediscovered'- Journal of the institute of Asian studies, vol 12 (Sep 1994) ). இப் புத்தர்சிலை ஒரு ஆளுயரத்தில் அரை தொன் கனதியில் சுண்ணாம்புக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் வலது கை அபய முத்திரையினை காட்டி நிற்கின்றது. ஆனால் இந்த வலதுகை பழைய பூங்காவில் இச்சிலை இருந்தபோது உடைந்து இல்லாதிருந்தது.   பின்னர் அது புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்போது சிங்கள மேலாதிக்க சிந்தனையோடு சிறு மாற்றத்தினை செய்துள்ளனர். அதாவது அபய முத்திரை ( அக்ஷய முத்திரை அபய முத்திரையில் இருந்து சற்று வேறுபட்டது. அதுவே அனுராதபுர புத்தர் சிற்பங்களின் தனித்துவமான அடையாளம்) காட்டும் புத்தர் சிலை மரபு அனுராதபுர கலை பள்ளிக்குரியதாகும்.        ஆனால் வல்லிபுரம் புத்தர் சிலை அதற்கும் முந்திய அமராவதி சிற்ப மரபை சார்ந்ததாகும். எனவே உண்மையான சிலையில் அபய முத்திரை இருக்க வாய்ப்பில்லை எனவும் ஏனைய அம்சங்களை அமராவதி மற்றும் அனுராதபுர கலை மரபுகளோடும் ஒப்பிட்டு இது அனுராதபுர சிங்கள புத்தரிலிருந்து வேறுபட்ட தனித்துவமானது என பேரா Peter Schalk நிறுவுகின்றார். 


எனவே இனத்துவ- சிங்கள- பௌத்த சிந்தனையின் ஆரம்பமாக இதனை கொள்ளமுடியும்.      தாய்லாந்து விகாரையில் வைக்கப்பட்டுள்ள வல்லிபுரம் புத்தர் சிலை, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற எதுவித குறிப்புக்களும் இன்றி அங்குள்ள வழிகாட்டி மற்றும் தேர ர்களுக்கும் இதன் பூர்வீகம் தெரியாத நிலையே காணப்படுகிறது. அத்துடன் யாத்திரீகர்களின் பார்வைக்கேற்ப தகுந்த இடத்தில் வைக்கப்படாது விகாரையின் பின்பக்க மூலையில் தனித்துவிடப்பட்டுள்ளது. 

 

இதில் " சிலோன் தீவிலிருந்து பேய்களை(evil) போக்கும் புத்தர்" என எழுதப்பட்டுள்ளது. கி.மு 230 - கி.பி 3 ஆம் நூற்றாண்டுகளில் சாதவாகன வம்சத்தவரும் தொடர்ந்து இஸ்வாகு (Lksvaku) வம்சத்தவர்களும் ஆந்திராவில் ஆட்சிபுரிந்தனர். 

3ஆம் நூற்றாண்டின் பிற்பட்ட காலப்பகுதியை சேர்ந்த கல்வெட்டொன்றில் இலங்கையின் விகாரை பற்றிய குறிப்புள்ளது. வல்லிபுர கலையம்சத்தினை இதனோடு பொருத்திப் பார்க்கும்போது அக் குறிப்பு வல்லிபுரம் பற்றியது எனலாம். 


கி.பி முதலாம் நூற்றாண்டுகளில் வல்லிபுரத்தில் ஒரு இராச்சியம் இருந்துள்ளது. ஈழத்தின் கிழக்குவரை நீளும் கடல் வழிப் பாதையை கொண்டு வர்த்தகர்களுக்கும் யாத்திரீகர்களுக்குமான கேந்திர போக்குவரத்து துறையாக இருந்துள்ளது. ஆந்திராவுடன் நெருக்கமான தொடர்புகளை பேணும் விதத்தில் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அண்மித்தே வல்லிபுரம் அமைந்துள்ளது. 

வல்லிபுரம் புத்தர் சிலை அமராவதி- திராவிட கலைமரபை தெளிவாக காட்டிநிற்கிறது. திராவிட கலை மரபின் மையமாக கி.மு 2 - கி. பி 3 நூற்றாண்டுகளில் ஆந்திரா இருந்துள்ளது. 

வல்லிபுரம் சிலை ஏறத்தாழ கி.பி 3ஆம் 4ஆம் நூற்றாண்டினை சார்ந்தது என கொள்ளமுடியும். இக் காலப்பகுதியிலேயே தனித்துவமான அமராவதி புத்தர் சிற்பங்கள் வளம்பெற்றன. இதன்போதே இக்கலை மரபு தமிழகத்திற்கும் ஈழம் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியது. ஆனால் அனுராதபுர பள்ளி ( Anurathapuram school) கலைமரபு இரு பிரிவாக பார்க்கப்படுகிறது. முதலாவது காலகட்டம் கி.பி 459 வரையாக தாதுசேன மன்னனுடன் முடிவுறுவது. இரண்டாவது காலம் என்பது அனுராதபுர இராச்சியத்தினை கைவிடும் வரையாக கி.பி 10 நூற்றாண்டு வரையானது. முதலாவது கால கட்டத்தில் இலங்கையில் கிடைத்த சிற்பங்களில் ( maha llupallama, Metavacciya) எவ்வித தனித்துவமும் இல்லாமல் தமிழகம், நாகதீவு( ஈழம்) மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து வெறும் இறக்குமதி செய்யப்பட்ட கலையினையே காணமுடிகிறது. 

 

தற்போது உள்ள சிங்கள-பௌத்த அனுராதபுர கலைமரபு இரண்டாவது காலத்ததாகும். எனவே வல்லிபுர புத்தர், சிங்கள பௌத்த மரபிலிருந்து வேறுபட்டு தமிழ் பௌத்ததின் ஆதிமூலமாக கொள்ளவேண்டியிருக்கிறது. 

 

1936 இல் அகழ்வின்போது வல்லிபுரக் கோவிலடியில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வல்லிபுர பொன்னேடு (Vallipuram gold plate) இங்கு ஒரு சிங்கள இராச்சியம் இருந்ததை உறுதிப்படுத்துகின்றதா? புத்தர் சிலையும், வட இந்தியாவில் பௌத்த தூபிகளுக்கு அடியிலே புதைத்து வைக்கப்படும் மன்னனின் கொடை பற்றிய குறிப்பினை ஒத்த வல்லிபுர பொன்னேடும் வல்லிபுரத்தில் ஒரு விகாரை இருந்தமைக்கு போதுமான சான்றுகளாகும். 

அவ்வாறாயின் எப்போது விகாரை விஷ்ணு ஆலயமானது? உண்மையில் அந்த மண்ணை எம் உயிரிலும் மேலாக மதிக்கும் நாங்கள் வந்தேறிகளா? என் உயிர்கூடு சூடேறி பிரளயமாய் கேள்விகள் நெஞ்சை பிளக்கின்றன. புராதன நாகதீபம் எனப்படும் யாழ்ப்பாணம் புத்த மதத்தின் புனித பூமியாகவும் சிங்களவர்களின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசமாகவும் இருந்துள்ளது என மகாவம்சம் முதற்கொண்டு இன்றைய சிங்கள மேலாதிக்க சிந்தனைகொண்ட நவீன வரலாற்றாசிரியர்களது ஆய்வுகள்வரை குறிப்பிடுகின்றன. இதனை நிரூபிப்பதற்காக இத்தகைய ஆய்வாளர்கள் முன்வைக்கும் சான்றுகளுள் வல்லிபுர புத்தர்சிலையும் வல்லிபுர பொன்னேடும் காலத்தால் முந்திய காத்திரமான வரலாற்று- தொல்லியல் ஆதாரங்களாகும். வல்லிபுர புத்தர்சிலை கி.பி 3ஆம் 4ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்ததாகும். அத்துடன் சிங்களவர்களின் தொன்மை கலைமரபான அனுராதபுர பள்ளி கலைமரபிலிருந்து வேறுபட்டு அதற்கு முன்னோடியாகவும் அமராவதி- திராவிட கலைமரபின் தொடர்ச்சியாகவும் அவ் வல்லிபுர புத்தரின் கலையம்சம் தனித்துவம் பெறுகின்றது போன்ற விடயங்களை கடந்த பதிவில் விளக்கியுள்ளேன். 

 

யாழ்ப்பாணத்தில் கிடைக்கப்பெற்ற வரலாற்று சாசனங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது வல்லிபுர பொன்னேடாகும் ( Vallipuram Gold Plate). இதுவே ஈழத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட ஒரேயொரு பொன்னேடாகும். 

 

அத்துடன் யாழ்ப்பாண புராதன வரலாற்றினை அறிவதற்கான அரிய சான்றுகளை இதிலிருந்தே பெறவேண்டியுள்ளது போன்ற காரணங்களால் இது முக்கியத்துவம் பெறுகின்றது. 

இலக்கிய ஆதாரங்களைவிட சாசன சான்றுகளே வரலாற்று ஆய்வுகளில் நம்பகத்தன்மை கூடியவையாக, காலத்தால் திரிபடையாதவையாக கொள்ளப்படுகின்றன. அதேவேளை பிற ஆதாரங்கள் இல்லாதபோது, அல்லது போதிய தகவல்கள் சாசனங்களிலிருந்து கிடைக்காதபோது கிடைக்கின்ற ஒருசில சாசனங்களிலிருந்து அதிக தகவல்களை பெறவேண்டிய நிலைவரும்போது அச் சாசனங்களின் வரலாற்று முக்கியத்துவம் மிகைப்படுத்தப்பட்டுவிடுகிறது. வல்லிபுர பொன்னேட்டின் தகவல்களை பின்னாளில் பயன்படுத்திய முறையை நோக்கின் மிகைப்படுத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவமோ என எண்ணத் தோன்றுகிறது. வல்லிபுர பொன்னேடு 1936 ஆம் ஆண்டளவில் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது. வல்லிபுரமாழ்வார் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் பழைய கட்டடமொன்றின் அத்திவாரத்தின் கீழ் இப் பொன்னேடு கண்டெடுக்கப்பட்டது. 

 

பின்னர் அது வரலாற்று- தொல்லியல் பேரா.செ. பரணவிதான அவர்களிடம் ஆய்வுக்காக வழங்கப்பட்டு மீண்டும் மீளப் பெறப்பட்டு அதன் சொந்தக்காரரிடம் வழங்கப்பட்டுள்ளது. இப் பொன்னேடு 3 9/16 அங்குல நீளமும், 1 அங்குல அகலமும், 69 1/2 கிறெயின்ஸ் நிறையும் உடையதாகும். இதில் பிராகிருத மொழியில் பிராமிலிபியில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ளது. சித்தம் என்ற மங்கலச் சொல்லுடன் அதில் எழுதப்பட்டுள்ள விடயம் ஆரம்பிக்கின்றது. இது கி.பி இரண்டாம் நூற்றாண்டிலே அனுராதபுரத்தில் இருந்து ஆட்சிபுரிந்த வசப மன்னனின் ( கி.பி 136- 170) காலத்தை சேர்ந்ததாகும். இச் சாசனம் பழைய சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது என வாதிடும் பேரா பரணவிதான அதனை பின்வருமாறு ஆங்கிலத்தில் மொழிபெயர்கின்றார். Hail! In the reign of the great king vaha and when the minister Isigiraya was governing Nagadiva, Piyaguka Tisa caused a vihara to be built at Badakaraa tana. அதாவது, மகாராசா 'வஹய' இன் ஆட்சியில் ' இஸிகிறய(யா) என்பவன் 'நகதிவு' இனை நிர்வகிக்கும் போது ' பத கற அதனவில்' ' பியகுக திஸ' என்பவன் விகாரையை அமைப்பித்தான் என்பதாகும். இங்கு 'வஹய' என்பது வசப மன்னனாகும். 'நகதிவு' என்பது நாகதீவு (யாழ்ப்பாணம்) ஆகும். கி.பி 2ஆம் நூற்றாண்டளவில் யாழ்ப்பாணம் அனுராதபுர மன்னர்களின் கீழ் ஒரு மாகாணமாக இருந்து அம் மன்னர்களின் அமைச்சர்களால் ஆளப்பட்டு வந்துள்ளது என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது. 

 

இங்கு ' இஸிகிறய' என்பவன் ஒரு அமைச்சனே. ' பத கற அதன' என்பது வல்லிபுரத்தின் பழைய பெயராக இருக்கவேண்டும் என பேரா பரணவிதான போன்ற வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இச்சாசனம் புலோலியை சேர்ந்த ராஜா என்பவரிடம் இருந்ததாக அறியப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ள ஏனைய எல்லா தொன்மைச் சாசனங்களிலும் காலத்தால் முந்தியதான இது மறைக்கப்பட்டுள்ளமை எம் துரதிஷ்டமாகும். வல்லிபுர பொன்னேட்டிலிருந்து பின்வரும் சில தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். (அ) இச் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசன்,கி.பி 2ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் ஆட்சிசெய்த வசபன் என கொள்வோமாயின் நாகதீபம் எனப்படும் யாழ்ப்பாணம் அக்காலப்பகுதியில் அனுராதபுர ஆட்சியின்கீழ் அரசனால் நியமிக்கப்பட்ட அமைச்சரால் நிர்வகிக்கப்பட்டுள்ளது என ஏற்றுக்கொள்ளவேண்டும். (ஆ) இச் சாசனம் பழைய சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது என பரணவிதான குறிப்பிடுவதன் ஊடாக இப் பிரதேசமெங்கும் அக் காலத்தில் சிங்களவர்களே வாழ்ந்துள்ளனர் என்பதையும் பௌத்த விகாரை பற்றிய குறிப்பாக இது உள்ளதால் பௌத்த மதமே வடக்கு உட்பட இலங்கை முழுவதும் நிலவியது என்பதையும் நிறுவ முயல்கின்றனர். 

 

(இ) இதில் குறிப்பிடப்படும் 'பியகுக' -Piyangu (dvipa) எனும் இடத்தினை பேரா பரணவிதான குறிப்பிடுவது போன்று தற்கால 'புங்குடுதீவு' என கொள்வோமாயின் இதுவே புங்குடுதீவு எனும் இடப்பெயர் பற்றிய முதற் குறிப்பினைத்தரும் சாசனம் என கணிப்பிடவேண்டும். பொதுவாக வட இந்தியாவில் பௌத்த தூபிகளுக்கு (Stupas) உள்ளே பொன்னிலோ அல்லது செப்பிலோ அதனை அமைத்தவரின் அல்லது பராமரிப்பவர்களின் விபரங்களையும் பெருமையினையும் நீண்டகாலம் நிலைத்திருக்க பொறித்துவைப்பது வழமை. இதனடிப்படையில்தான் வல்லிபுர புத்தர் சிலையினையும் பொன்னேட்டினையும் இணைத்துப் பார்க்கவேண்டியுள்ளது. 

 

கி.பி முதலாம் நூற்றாண்டுகளில் வல்லிபுரம் மட்டுமே யாழ்ப்பாணத்தில் ஒரேயொரு விகாரை என்றிருக்கவில்லை. பல்வேறு இடங்களில் கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சான்றுகள் மற்றும் இலக்கிய ஆதாரங்கள் ஊடாக யாழின் பல்வேறு இடங்களில் நீண்ட காலமாக பௌத்த மதம் செழிப்புற்று இருந்தமையை அறியமுடிகிறது. மொத்தமாக ஒன்பது இடங்களில் யாழில் பௌத்தம் பின்பற்றப்பட்டுள்ளது என பேரா ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார். 

 

ஆயினும் வல்லிபுரமும் கந்தரோடையுமே ( இங்கு பிராமி எழுத்து சாசனமும் பல தொல்பொருள் எச்சங்களும் 1970 களில் அமெரிக்காவை சேர்ந்த குழுவுடன் இணைந்து வரலாற்றாசிரியர் போல் பிரிஸ் அவர்கள் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது கிடைக்கப்பெற்றன) மிகவும் அறியப்பட்டனவும் இன்றும் பேசப்படுபனவுமாகும். இலங்கையின் வடக்கில் அனுராதபுர சிங்கள மன்னர்களின் ஆதரவுடன் பௌத்தம் புழக்கத்தில் இருந்துள்ளதை மகாவம்சம், சூளவம்சம் போன்ற பல இலக்கிய சான்றுகள் காட்டுகின்றன.

 

 தேவநம்பிய திஸ்ஸ மன்னன் ( கி.மு 250- 210) காலத்தில் அனுராதபுர இராட்சியத்தவர்கள் கிழக்கிந்தியாவுக்கு செல்வதற்கு பயன்படுத்தியது பிரதான துறைமுகம் யாழ்ப்பாணத்து ' ஜம்புகோள பட்டினமாகும் ( தற்கால சம்புத்துறை). இங்குதான் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் அசோக சக்கரவர்த்தியின் மகளான சங்கமித்தா தேரியை வரவேற்றான். அவன் இங்கு ஜம்புகோள விகாரையையும் 'ஸமுத்த பண்ண ஸாலா 'என்ற மண்டபத்தினையும் அமைப்பித்தான். * மஹல்லகநாக (136-143) எனும் அனுராதபுர மன்னன் 'ஸாலி பப்பத' விகாரையை கட்டுவித்தான். * கனிட்ட திஸ்ஸ ( 157-186) எனும் அனுராதபுர மன்னன் யாழில் ஒரு கோவிலை ( Ghara) திருத்தியமைத்தான். * வொஹொரிக திஸ்ஸ (209- 251) எனும் மன்னன் யாழில் இருந்த திஸ்ஸ விகாரையை சுற்றி மதில் (pakara) அமைப்பித்தான். * இதற்கு பிற்பட்ட காலத்தில் 2ஆம் அகபோதி ( 604-614) எனும் அனுராதபுரத்து மன்னன் யாழில் இருந்த 'உண்ணலோமகரக் கோவில்' என்ற நிறுவனத்தை 'ராஜாயதன தாது" எனும் விகாரைக்கு கட்டுவித்துக் கொடுத்தான். அத்துடன் ' அமலசேதிய' எனும் சைத்தியத்திற்கு ஒரு குடையை தானமளித்தான். * முதலாவது விஜயபாகு (1055-1110) மன்னன் பத்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து தொடங்கிய சோழர்களது படையெடுப்புக்களை முறியடித்து யாழ்ப்பாணத்தின் புராதன விகாரையாகிய ஜம்புகோள விகாரையை புதுப்பித்தான். இந்த கால ஒழுங்கில் ஒரு விடயம் தெளிவாக புலனாகிறது. அதாவது வொஹொரிக திஸ்ஸவுக்கும் 2ஆம் அகபோதிக்கும் இடையில் ஏறத்தாள 400 வருடங்கள் யாழ்ப்பாண வரலாற்றில் ஒரு மௌனித்த காலமாக ( Period of Silence) - சிங்கள பௌத்த தலையீடற்ற காலமாக உள்ளது. 

 

இதற்கு பின்னரான மத்திய காலம்( Mediaeval period) முழுவதும் தமிழர் வரலாற்றில் குறிப்பிடக்கூடிய காலப்பகுதிகளாகும். இக் காலப்பகுதியிலேயே நாகதீப- யாழ் மக்கள் தமக்கான சமய கலாச்சாரத்தையும் ஆட்சியதிகாரத்தையும் பாதுகாக்க முன்வந்துள்ளனர் என ஊகிக்க முடியும். ஆயினும் 13ஆம் நூற்றாண்டிற்கு பின்பே வடக்கில் சுதந்திர இராச்சியமொன்று மலர்ந்தது என்பதை வரலாற்றுக்கு உட்பட்ட கால ஆதாரங்கள் காட்டுகின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் சுதந்திரமான, வளமான நாக இராச்சியம் இங்கு நிலவியதை மஹாவங்க போன்ற பழைய பாளி நூல்களும், பிற்கால சிங்கள வரலாற்று நூல்களும், மணிமேகலை போன்ற அயல்நாட்டு இலக்கியங்களும் இம் மண்ணின் மக்கள் மத்தியில் நிலவிய கர்ணபரம்பரை கதைகளும் கூறிநிற்கின்றன. 

 

கி.பி 6ஆம் நூற்றாண்டளவில் சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை காப்பியத்திலும் 'நாகநாடு' என்பது குறிப்பிடப்படுகிறது. காவியத்தலைவியான மணிமேகலை நாகநாட்டில் இருந்த மணிபல்லவம் எனும் பௌத்த தலத்திற்கு வந்தாள் என கூறப்பட்டுள்ளது. கி.பி 5-6ஆம் நூற்றாண்டுகளிலேயே மணிமேகலையும் மகாவம்சமும் எழுதப்பட்டுள்ளன. ஆக சிங்கள மக்களது இலக்கியங்களிலும் தமிழ் இலக்கியத்திலும் யாழ்ப்பாணத்தில் வரலாற்றின் தொடக்க காலத்தில் பௌத்தம் செழிப்புடன் இருந்துள்ளதற்கு நிறைய சான்றுகள் உண்டு. ஆனால் அம் மதம் சிங்களவர்களுக்கேயான சிங்கள பௌத்தமா என்பதே ஆய்வுக்குரியது. தமிழ் மக்களும் பௌத்ததை தம் மார்க்கமாக கைக்கொண்டிருந்தனர் என்பதற்கு மணிமேகலை நல்ல சான்று. ஈழ தமிழ் நிலத்துடன் நெருங்கிய கலாசார உறவை கொண்டுள்ள தென்னிந்தியாவிலும் கி.பி 3-6 நூற்றாண்டுகளில் சமணமும் பௌத்தமும் மிக செல்வாக்கு பெற்றிருந்தமையை சங்கம் மருவிய கால இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. எனவே வல்லிபுரம் உள்ளடங்கலான தமிழர் தேசத்தில் நிலவிய பௌத்தத்தை சிங்களவர்களுக்குரியது என பார்க்க முடியாது. அது அறத்தையும் அகிம்சையினையும் தூய துறவையும் காட்டிய தமிழ் பௌத்தம்  

 

வரலாற்றில் வல்லிபுரம் நீண்டு பரந்து மூன்று புறமும் சூழ்ந்த ஆழ் கடலும், வயல் விளையும் புலங்களும், உயர்ந்த திடலான தரவை நிலங்களும், சிறு காடுகளும், வரண்ட பகல் பொழுதும், குளிர்ந்த இரவும் என்பதாகவே எம் ஈழ தேசத்தின் பௌதீக முகம் இருக்கின்றது. வருட இறுதியில் மட்டுமே மழையை காணும் எம் தாய் நிலத்தின் வாழ்வும் வளமும் பனையை அண்டியே இருந்திருக்கின்றது. பனை மரங்கள் நிறைந்த நாடு என்பதாலேயே யாழ்ப்பாணமும் அதனை அண்டிய வட நிலப் பரப்பும் ஈழம் என பெயர் பெற்றது. கி.பி முதலாம் நூற்றாண்டு நூலான பட்டினப்பாலை இல் முதன்முதலாக ஈழம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அக் காலத்திலேயே தென்னிந்தியாவில் ஈழம் எனும் நாடு நன்கு அறிமுகமாகி இருக்கிறது எனலாம். தமிழ்ச் சாசன வழக்கில் பல்லவர் காலத்திலேயே ஈழம் பற்றிய குறிப்புள்ளது. அது "ஈழம்பூட்சி" எனும் கூட்டுச் சொல்லாக இடம்பெற்றுள்ளது. ஈழம்பூட்சி என்பது கள்ளினை உற்பத்தி செய்வோர் மீதான ஒருவகை வரி முறைமையாகும். அவர்கள் ஈழவர் என அழைக்கப்பட்டனர். " தெங்கும் பனையும் ஈழவர் ஏறப்பெறாதவராகவும்" என சாசனங்களில் குறிப்புண்டு. ஈழம் எனும் ஒரு நாட்டுக்கே உரித்தான பெயர் பற்றிய தகவல்களை எழுதியுள்ள பேரா சி. பத்மநாதன் அவர்கள், ஒரு மேலை நாட்டு அறிஞர் ஒருவர் ஈழம் தொடர்பாக ஆழமான ஆய்வினை மேற்கொண்டு அச் சொல் தமிழ் மொழிக்கே உரித்தானது என்பதுடன் அது பனையோடு தொடர்புடையது என்பதையும் குறிக்கும் என்ற ஆய்வின் முடிவை மேற்கோள்காட்டுகின்றார்.    விக்கிபீடியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக