ஞாயிறு, 27 டிசம்பர், 2020

ரஜினியின் விளம்பர மோகம்! சோவின் தர்ம சங்கடம்! flashback news

Image may contain: 2 people, text that says 'துக்ளக் து எ க் kkky.m'

சாவித்திரி கண்ணன் : · ரஜினியின் விளம்பர மோகம்! சோவின் தர்ம சங்கடம்! ‘’இந்தாங்க..ரஜினிகாந்த் வந்தப்ப கொடுத்துட்டு போனாரு’’ ன்னு கையில ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்தார் துக்ளக் தலைமை துணை ஆசிரியர் மதலை! அதை வாங்கி பார்த்தப்ப சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்த ’பாபா’படப் பாடல்களின் ஆடியோ கேசட் என புரிய வந்தது! ‘’ரஜினிகாந்த் குடுத்தாரா..?’’ என்றேன் புருவத்தை உயர்த்தியபடி! ‘’ஆமா,அவர் தான் நம்ம சாரை பார்க்க வந்த போது இங்கே நம்ம இடத்திற்கும் வந்து ஒவ்வொருவராக தேடி வந்து இதை கொடுத்துட்டு, இன்னும் யாராவது விடுபட்டு இருக்காங்களான்னு கேட்டு, உங்களுக்கும் சேர்த்து கொடுத்துட்டு போனாரு..’’ வாங்கி வைத்துக் கொண்டேன்! மாலை நேரம் சோ சார் எடிட்டோரியல் ரூமிற்கு வந்தார். ’’இதென்ன இவர் ஏதோ தமாஷா சொல்றாரான்னு தான் நான் நெனைச்சேன். மனுஷன் நிஜமாவே..கேட்குறார்னு இப்ப தான் தெரியுதுன்னார்..’’
‘’என்ன சார் சொல்றீங்க…?’’ன்னு மதலை கேட்டார்.
‘’இன்னைக்கு ரஜினி வந்தப்ப..என்கிட்ட, ‘’சார் பாபா பற்றி எல்லா பத்திரிகைகளிலும் எழுதறாங்க..ஆனா, அது பற்றி துக்ளக்கில் தான் எதுவும் எழுதமாட்டேன்கிறீங்க.. அப்படின்னார்! இதை முன்னமேகூட சிலமுறை சொல்லி இருக்கிறார் என்றாலும்..,சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றாருன்னு விட்டுட்டேன்! ஆனா இன்னைக்கு என்னடான்னா, சார் நான் உங்க ஆபீசுல எல்லாருக்கும் பாபா ஆடியோ கேசட் ஒன்னு கொடுத்திருக்கேன்.. இதையாவது ரஜினிகாந்த் எங்க ஆபீஸ் வந்தார். எல்லோருக்கும் பாபா கேசட் கொடுத்தார்..’ அப்படின்னாவது செய்தி போடுவீங்களா..’’ன்னு கேட்கிறார். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. நம்ம என்னத்த போடறது..?’’
‘’ஆமா, எல்லா பத்திரிகைகளும் ரஜினி பற்றியும் அவர் புதுசா நடிக்கிற படம் பற்றியும், ஏதேதோ எழுதறாங்க.., நாம தான் எதுவும் அத மாதிரி எழுதறது இல்லை..’’ என்றார் மதலை.
பொதுவாகவே தற்போது நாம் சினிமா செய்திகளை அறவே போடுவதில்லை. அதனால் எனக்கு அவர் பாபா படம் பற்றி அடிக்கடி என்னை தேடி வந்து பேசறது எதையும் எனக்கு எழுதணும்னு தோணலை. அதுவும் அவர் கதை கேட்டது தொடங்கி பூஜை போட்ட நிகழ்வுகளில் இருந்து, படம் ஒவ்வொரு ஸ்டெப்பாக போய்கிட்டிருக்கிறது வரை தொடர்ந்து என்கிட்ட பேசிக்கிட்டு இருக்கிறார்…என்னிடம் தனிப்பட்ட முறையில் அவர் பகிர்ந்துகிட்டதை பகிரங்கபடுத்தி, என்கிட்ட இவ்வளவெல்லாம் ரஜினி வந்து ’குளோசா’ பேசறார்ன்னு சொல்றது சரியாகப்படலை…’’
‘’அது சரி, எப்பவுமே எவ்வளவு பெரிய வி.ஐ.பி கூட நீங்க பழகிறதையும்,பேசறதையும் பொதுவெளியில் சொல்லி பெருமைபட்டுகிறதில்ல தான். ஆனா,பாவம் அவரே ரொம்ப ஆசைப்படறார்ன்னா ஏதாவது எழுதலாமான்னு பாருங்க..’’ என்றார்.
‘’துக்ளக் பொதுவா ஒரு பொலிடிகல் கிரிடிக் மேகஸின்..இதுல பாபா படத்தை பற்றி..எழுதுறது எப்படின்னு தான் புரிபடல…’’ என்றார்.
இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த நான்,
‘’பாபா படம் பற்றி எழுதுவதற்கு எனக்கொரு யோசனை இருக்கு சார்’’ என்றேன்.
’’என்ன சொல்லுங்க..?’’
’’இப்ப இந்த படத்தை பற்றி ஆளாளுக்கு எழுதியும் பேசியும் ’ஹைக்’ பண்ண வேண்டிய அவசியம் என்ன வந்தது? நானும் பார்க்கிறேன். இந்த பாபா படம், ரஜினிகாந்த் இவை தவிர்த்து உலகத்துல பேசுறதுக்கு ஒன்னுமேயில்லைங்கிற அளவுக்கு மீடியாவில ஓவரா பண்றாங்க..இதுக்கு பின்னாடி இருக்குற வணிக சூதாட்டத்தை கேள்விக்கு உள்ளாக்கணும்..’’
நான் பேசி முடித்த பிறகு தான் கவனித்தேன். சோ சார் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை!
அவர் சற்றும் தாமதிக்காமல் சொன்னார். ‘’போச்சு..எனக்கும், ரஜினிக்குமான நட்பையே இவர் ‘குளோஸ்’ பண்ணிடுவாரு போல! சாவித்திரி கண்ணன் எது எழுதினாலும் என் கவனத்திற்கு வராமல் போயிடக் கூடாது! இவர்பாட்டுக்கு ஏதாவது ஏடாகூடமாக எழுதிடப்போறாரு’’ என்றார்.
மதலை கலவென சிரித்தார். சோ அங்கிருந்து நகர்ந்தார்.
எவ்வளவு தான் புகழின் உச்சத்தை பார்த்த போதிலும், தான் எப்போதுமே, எல்லா இடங்களிலுமே ஒரு பேசுபடு பொருளாக இருக்க வேண்டும் என்ற தணியாத பேராவல் ரஜினியிடம் தொடர்ந்து இருந்து வந்தது என்பதற்கான சான்றாக இந்த சம்பவம் என் மனதில் பதிந்தது!
அப்படி தன்னை ஒரு பேசுபடு பொருளாக்கி கொள்ள, அவர் வீசிய தூண்டில் தான் அரசியலில் அவர் ஈடுபடப் போவதாக எழுதப்பட்ட வசனங்கள், சொல்லாடல்கள்…!
அது சமூகத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும்?, பொது மக்களிடமும், ரசிகர்களிடமும் என்ன மாதிரியான ஆவலை உருவாக்கும்..? என்பதை ஆரம்பத்தில் யோசிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், போகப்,போகப் அந்த எதிர்பார்ப்புகள் விஸ்வரூமமெடுத்த போதாவது, அவர் தன்னை தெளிவுற தெரிவித்திருக்கலாம்! அப்போதும் தான் மேன்மேலும் பேசப்படுவதில்,விவாதிக்கப்படுவதில்..அவர் மனதிற்குள் அளவிலா ஆனந்தம் கொண்டார்! ரசித்து புளகாங்கிதப்பட்டுக் கொண்டார்! அது அவரது படங்களின் வணிக வெற்றிக்கும் கை கொடுத்தது. ஊடகங்களின் விற்பனை நோக்கத்தினாலான விவஸ்த்தையற்ற போக்குகளுக்கு மேன்மேலும் தீனிகள் போட்டு, அவரும் தன் அற்ப விளம்பர அரிப்பை தீர்த்துக் கொண்டார்! இதில் அதிக அளவு ரசிகர்கள் தான் ஏமாந்தனர். 30 வருடங்களாக ரஜினியை முதலமைச்சராக வரவேற்று போஸ்டர் ஒட்டி முதுகெலும்பு தேய்ந்தது தான் கண்ட பலன்!
சோ சாரைப் பொருத்தவரை ரஜினியை அணுக்கமாக புரிந்து வைத்திருந்ததால், மற்ற பத்திரிகைகளைப் போல வணிக நோக்கத்திற்காக ரஜினியை பற்றிய மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை துக்ளக்கில் எழுதவில்லை!
அதே சமயம் ரஜினி குறித்த யதார்த்தங்களை சோ பொதுதளத்தில் வெளிப்படுத்தாது மட்டுமல்ல, துக்ளக் ஆண்டுவிழாவில் ரஜினி அரசியலுக்கு வரவாய்ப்புள்ளது என்ற தோற்றத்தையும் கூட சில நேரங்களில் ஏற்படுத்தினார் என்பதும் கவனத்திற்குரியது!
புகழ் விளம்பர போதை என்ற மதுவை மனிதன் சுவைக்க தொடங்கிவிட்டால், அந்த தேவைக்காக அவன் எந்த தர்ம நியாயங்களையும் கடந்து போய்க்கொண்டே இருப்பான் என்பதற்கு ரஜினி ஒரு உதாரணம்! அவர் வீசிய தூண்டில் பல்லாயிரம் இளைஞர்கள் வாழ்க்கையை சூறையாடிவிட்டு, தற்போது அவரையே இரையாக கேட்கிறது!
https://aramonline.in/2518/cho-rajinikanth-thugluk-baba-
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்

 

கா.சு. வேலாயுதன் : எம்.ஜி.ஆரும் தன்னை பற்றியே பத்திரிகைகள் எழுதும்படி பார்த்துக் கொண்டார். கோவையில் எம் ஜி ஆரை கூட்டத்தில் கிட்டத்தில் நெருங்க முடியாத ஓர் இளைஞர் தன் கையிலிருந்த மலர் மாலையை அவரை நோக்கி வீசி விட்டார். அதில் அவர் தொப்பி கழன்று விட, ஒரு பத்திரிகை புகைப்படக்காரர் போட்டோ எடுத்து, சிட்டாகப் பறந்து விட்டார். அவரைத் துரத்தினவர்கள், அந்த புகைப்படத்தை எக்காரணம் கொண்டும் பிரசுரிக்கக் கூடாது (எம் ஜி ஆர் இமேஜ் கெடும் என்பதால்) என்று சம்பந்தப்பட்ட பத்திரிகையை மிரட்டினர். அவர்கள் காது கொடுக்கவில்லை. விளைவு, அப்பத்திரிகை அலுவலகமே சூரையாடப்பட்டது... 

 Kittappa Dalmia : சோ தன்னை எப்பொழுதும் நடுநிலை வாதியாக காட்டிக்கொள்கிற சந்தர்ப்பவாதி. ரஜினியை உசுப்பி விட்டதே அந்த பார்ப்பன குசும்புதான். கலைஞருக்கு எரிச்சல் வர வேண்டும் என்பதற்காகவே ரஜினியை தட்டிவிட்ட கோமாளிதான் சோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக