சனி, 19 டிசம்பர், 2020

பாவ கதைகள் ... அல்ல பரிதாப கதைகள் .. வெறும் contact மட்டும் இருந்தால் போதும் ..

4 Director 4 Story #Paava Kadhaigal | பாவ கதைகள் | Tamil Anthology | movie  update - YouTube

Arun Mo : · பரிதாபக் கதைகள் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பாவக் கதைகள் இயக்குநர் எல்லாரும் பணம் இருக்கிறது ஒரு சிறு படம் எடுத்துக்கொடுங்கள் என்று சொன்னால் அந்த வடிவத்திற்கும் தளத்திற்கும் ஏற்றவாறு ஒரு கதை இல்லை எனில் முடியாது என்று மறுத்துவிட வேண்டும். சும்மா இருக்கும் நேரத்தில் பணம் வருகிறது என்று நினைத்து செய்ய இது ஒன்றும் அன்றாட வேலை அல்ல. சமூக பொறுப்புள்ள கடமை. எல்லாவற்றையும் தாண்டி கலை. வெற்றிமாரனின் பகுதியில் வந்த கதையை பிரகாஷ்ராஜ் போன்ற ஒரு நடிகர் காப்பாற்றியிருக்கிறார், ஒரு நடிகர் ஒரு படத்தை காப்பாற்றியிருக்கிறார் என்று சொல்வது அந்த படத்தின் இயக்குனருக்கு எவ்வளவு அவமரியாதை. ஆனால் அதுதான் நடந்திருக்கிறது. விக்னேஷ் சிவன் சமூக பொறுப்புள்ள ஒரு படத்தை எடுப்பதாக நினைத்து சமூக அவமதிப்புதான் செய்திருக்கிறார்.

பார்வையாளனின் பொதுப்புத்தியை தூண்டி அதன் மூலம் கிடைக்கும் கிளர்ச்சியில் அடையும் வெற்றி அறுவருக்கத்தக்கது. விச தேவடியா என்பதும் விச தேவடியாப்பையன் என்பதும் இருவேறு வார்த்தைகள், ஆனால் ஒரே கருத்துதான். பெண்ணை அவமதிக்க ஆண்கள் சொல்லும் வார்த்தை, அது வெறும் வார்த்தை மட்டுமல்ல, ஒரு கருத்தாக்கம். மானம், குடும்ப அமைப்பு என்கிற கருத்தாக்கங்களை தாங்கிப்பிடிக்கும் வார்த்தை. இன்றைக்கும் நம்மை யாராவது தேவடியாப்பையன் என்று சொன்னால் சட்டென கோபம் வருவது எதனால், பெண் எப்படி இருக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்கிற ஆண்களின் கருத்தாக்கத்திற்கு வலுசேர்க்கும் வார்த்தை அது. அதன் பின் ஒரு வரலாற்று அரசியலும் இருக்கிறது. அந்த வார்த்தையை பெண்கள் மிக கடுமையாக எதிர்க்க வேண்டும்.

ஆனால் விக்னேஷ் சிவன் படத்தில் பெண்ணே அந்த வார்த்தையை பயன்படுத்தும் இறுதிக்காட்சியில் எத்தனை பேர் கைத்தட்டி சிரித்தீர்கள். பாதிக்கப்பட்ட ஒரு இணத்திற்கு எதிராக பாதிக்கபட்ட அந்த இனத்தில் இருந்து ஒருவரையே திசை திருப்பி, அதன் மூலம் ஒரு சமூக புரட்சியை செய்து முடித்தது போல் நினைத்துக்கொள்வது பேரவலம்.
தமிழில் போதிய வசதியில்லாமல், கையில் இருக்கும் பணத்தை வைத்து எடுக்கபட்ட பல அற்புதமான குறும்படங்களை நான் பார்த்திருக்கிறேன். தமிழ் ஸ்டுடியோ அவற்றையெல்லாம் திரையிட்டு இருக்கிறது. அத்தகைய படங்களையெல்லாம் பணம் கொடுத்து வாங்கி ஓடிடி தளங்கள் வெளியிடலாம். பார்வையாளனுக்கு நல்ல சினிமா கிடைக்கும், சினிமா எடுத்த கலைஞனுக்கு தேவையான பணம் கிடைக்கும், ஓடிடி தளங்களுக்கு நல்ல பெயரும் கிடைக்கும். ஆனால் அதையெல்லாம் செய்ய தேடல் மெனக்கெடல் வேண்டும். நல்ல நிலையில் இருக்கும் கலைஞர்கள் அடுத்தடுத்து தலைமுறை கலைஞர்களுக்கு இத்தகைய வாய்ப்புகளை மடைமாற்றி கொடுக்க வேண்டும். நீ நல்ல கதை வைத்திருந்தால் படம் எடு, நான் பணம் போடுகிறேன் ஓடிடியில் விற்கலாம், என்று பாவக் கதைகள் இயக்குநர்கள் தன்னுடைய உதவியாளர்களிடம் சொல்லி அவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கி இருந்தால் நல்ல படைப்புகள் கிடைத்திருக்கலாம். Contact என்கிற ஒற்றை வார்த்தை தமிழ் நாட்டில் என்னவெல்லாம் செய்யும்! மோசமான படங்கள் எடுக்க பணம் கிடைக்கும், அதை நல்ல விலையில் வாங்க பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை கியூவில் நிற்க வைக்கும். நல்ல சினிமா எடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நிறைய Contact இருந்தால் போதும் என்று அடுத்த தலைமுறை நினைக்கும் அவலத்தை நிகழ்கால வியாபாரிகள் உருவாக்கி கொடுக்கிறார்கள். எவ்வித மெனக்கெடலும் இல்லாமல், ச்சீப்போ என்று சாதாரண குறைந்தபட்ச உழைப்பு கூட இல்லாத சுஹாசினி போன்றோரின் படங்களை பார்க்க பணம் காட்டி நாமும் பார்த்திருக்கிறோம். அதன் தொடர்ச்சிதான் இப்படி மெனெக்கெடல் இல்லாமல் குறைந்தபட்ச தேடலும் இல்லாமல் உருவாகும் படங்கள்.
தமிழ் ஸ்டுடியோ குறும்பட வட்டம் என்றொரு நிகழ்வை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியது. அதில் திரையிடப்பட்ட பல குறும்படங்களை வாங்கி ஓடிடி தளங்கள் வெளியிடலாம். அந்த குறும்படங்களை எடுத்த பலர் எல்லாருக்கும் தெரிந்த இயக்குநர் கிடையாது, நிறைய Contact இருக்கும் நபர்களும் அல்ல, நல்ல சினிமா எடுக்க தெரிந்த நிஜ கலைஞர்கள் அவ்வளவுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக