சனி, 5 டிசம்பர், 2020

மோடி அனைத்துக் கட்சிக் கூட்டம் . டி.ஆர்.பாலுவின் மைக்ரோ போன் ம்யூட் செய்யபப்ட்டது.

minnambalam : பிரதமர் மோடி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்ற டி.ஆர்.பாலுவின் மைக் ம்யூட் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி பற்றிய கொள்கை முடிவெடுப்பதற்காக பிரதமர் மோடி நேற்று (டிசம்பர் 4) காணொலி மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்தில் தடுப்பூசி பற்றியும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை குறித்தும் பல கட்சித் தலைவர்கள் பேசினார்கள். அப்போது தடுப்பூசி வியூகத்தைப் பற்றி சொல்லிவிட்டு தற்போது நடக்கும் விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் முன் பிரச்சினையைக் கிளப்பினார் திமுக சார்பில் பேசிய அக்கட்சியின் பொருளாளரும், மக்களவை திமுக தலைவருமான டி.ஆர்.பாலு. அப்போது அவரது மைக் ம்யூட் செய்யப்பட்டது.

சிவசேனா சார்பில் பேசிய எம்பி விநாயக் ரவுத், “ மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் நிலையில், மாநில அரசுகளின் பங்கை நிறுத்த எந்த காரணமும் இல்லை. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும்” என்று வற்புறுத்தினார்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டினார் தேசியவாத காஙகிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்.அதேநேரம் பொருளாதாரத்தை காப்பாற்றுவதில் அதிக தலையீடு தேவை என்று வலியுறுத்தினார்.

திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட சுதீப் பந்தோபாத்யாய், “ மேற்கு வங்க அரசு நிதி உதவி கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை”என்று குற்றம் சாட்டினார்.

9தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகள் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தின.

திமுக சார்பில் பேசிய டி.ஆர்.பாலு இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு நிவாரண தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டு கண்காணித்து மருந்து தயாராகி வரும் நிறுவனங்களுக்கு அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டு ஊக்குவித்ததையும் வெகுவாகப் பாராட்டினார்.

மேலும், “தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பலகட்ட சோதனைகளைக் கடந்து பயன்பாட்டுக்கு விரைவில் வெளிவர இருக்கும் நிலையில், நாம் எவ்வித தாமதத்துக்கும் இடம் தராமல், இந்திய மக்கள் 130 கோடி பேருக்கும் தடுப்பு மருந்து செலுத்த வேண்டும், அதற்கான ஆயத்தங்கள் திட்டமிடப்பட வேண்டும். தடுப்பூசிக்கான செலவின் அளவைப் பார்த்து அரசு மலைத்து போகக் கூடாது. இது, அரசு இந்திய மக்களாலான மனிதவளத்தின் மீது செய்யப்படும் முதலீடு என்று தான் கருத வேண்டும். கொரோனா காரணமாக கடும் வீழ்ச்சிக்கு ஆளான இந்தியப் பொருளாதாரம் மீளத் தொடங்கிவிட்டதைத் தெரிவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் இவ்வாண்டு அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஒரு லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. எனவே, அரசு தேவைப்பட்டால், ஏனைய தவிர்க்கக் கூடிய செலவினங்கள் அனைத்தையும் ஒத்திவைத்து, கொரோனா தடுப்பூசி செலவுக்கு ஒதுக்கீடு செய்வது அவசியம்”என்று பேசிய டி.ஆர்.பாலு, தன் உரையின் முடிவில் விவசாயிகள் போராட்டம் பற்றிப் பேசினார்.

“தலைநகர் டெல்லியில் பல நாட்களாக உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வெட்ட வெளியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து குவிந்துள்ளனர். முதியோர், வயது முதிர்ந்த தாய்மார்கள் எனக் கண்பார்வை செல்லும் இடமெல்லாம் நிறைந்து போராடி வரும் வரும் இவர்கள் கோரிக்கை உங்களுக்குத் தெரியாததல்ல. அண்மையில் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயப் பெருமக்களுக்கு எவ்வித நன்மைகள் பயக்காது என்பதால் அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் ஒரே கோரிக்கை. 130 கோடி மக்களுக்கு உணவு வழங்கிடும் நாட்டின் விவசாயிகளை இதுபோன்ற கடுங்குளிரில் நாட்கணக்கில் போராட வைப்பது கொஞ்சமும் நியாயம் அல்ல. ஆகவே, பிரதமர் அவர்கள் போராடும் விவசாயிகளை உடனடியாக அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும்” என்று டி.ஆர். பாலு பேசிக்கொண்டிருக்கும்போதே...

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி குறுக்கிட்டு, கூட்டத்தின் தலைப்பைப் பற்றி மட்டுமே பேசுமாறு டி.ஆர்.பாலுவிடம் கூறினார். அப்போது டி.ஆர். பாலு, “விவசாயிகள் கடந்த பத்து நாட்களாக சாலைகளிலே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது” என்று பதிலளித்தார். அமைச்சருக்கும் டி.ஆர்.பாலுவுக்கும் இடையே இது தொடர்பாக விவாதங்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து டி.ஆர்.பாலுவின் மைக்ரோ போன் ம்யூட் செய்யபப்ட்டது. அதாவது பாலு பேசுவது பிரதமர் உட்பட வேறு யாருக்கும் கேட்காதவாறு முடக்கப்பட்டது என்று ஆங்கில நாளேடு தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் பற்றி பேசிய ஒரே கட்சி திமுகதான் என்பது குறிப்பிடத் தக்கது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக