வியாழன், 31 டிசம்பர், 2020

காவல் நிலையத்திலேயே திருட்டு: பெண் போலீஸ் கைது!

minnampalam :பொதுவாக வெளியில் எங்கேயாவது திருட்டு சம்பவம் நடந்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்... ஆனால் காவல் நிலையத்திலேயே திருடு போனால் எங்கே சென்று புகார் அளிப்பது....
காவல் நிலையத்திலேயே திருட்டு: பெண் போலீஸ் கைது!

கூடங்குளம் காவல் நிலையத்தில் திருடிய பெண் போலீஸ் தனது கணவருடன் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கூடங்குளம் காவல் நிலையத்தில் இருந்து திருட்டு போனதாக புகார் எழுந்தது.

காவல் நிலையத்திலேயே திருடு போவது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில் வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமயசிங் மீனா மேற்பார்வையில் கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.    கூடங்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரிடமும், அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட தினங்களில் இரவு பணியிலிருந்த இரண்டாம் நிலை பெண் காவலரான கன்னியாகுமரியைச் சேர்ந்த கிரேசியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவருடன் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இரவு பணியில் இருக்கும் போது தன்னுடைய கணவர் அன்புமணி உதவியுடன் காவல் நிலைய வளாகத்திலிருந்த மோட்டார் சைக்கிள், செல்போன், கைதிகளின் வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை திருடியது தெரியவந்தது.

கிரேசியா பணியிலிருந்தபோது அங்கிருந்த சிசிடிவி படக்கருவியை ஆப் செய்துவிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கிரேசியா மற்றும் அவர் கணவர் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்து போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அன்புமணி மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக