திங்கள், 14 டிசம்பர், 2020

நடிகை சித்திரா குளித்துவிட்டு தாயாரிடம் பேசியுள்ளார் ... ஹேமந்த்தைக் காப்பாற்ற பெரிய பட்டாளமே போராடிக் கொண்டிருக்கிறது

tamil.oneindia.com : சித்ரா இறப்பதற்கு முன்பு, தன் அம்மா விஜயாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த அன்று ஷூட்டிங்கில் இருந்து வந்த சித்ரா, ஹேம்நாத்தை வெளியே அனுப்பிவிட்டு, குளித்து விட்டு டிரஸ் மாற்றி கொண்டுள்ளார்... அந்த சமயத்தில்தான், தன்னுடைய அம்மாவுடன் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது 

மின்னம்பலம் : சின்னத்திரை நடிகை சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அடுத்தடுத்து விசாரணைகள் தொடர்கின்றன.

சித்ரா தற்கொலை: அதிகரிக்கும் அழுத்தம் - தப்பிக்கும் ஹேமந்த்?

இது தொடர்பாக சித்ரா விவகாரத்தில் அமைச்சர்களின் மகன்கள் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியில், சித்ராவின் காதல் கணவன் ஹேமந்த் பற்றியும், அவரது கடந்த கால மோசடிகள் பற்றியும் விளக்கியிருந்தோம். அந்தச் செய்தியை வலுப்படுத்தும் வகையில், போலீஸ் விசாரணையில் சிக்கிய ஹேமந்த்தைக் காப்பாற்ற பெரிய பட்டாளமே போராடிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

“ஹேமந்த்துக்கு ஆதரவாக அவரைக் காப்பாற்ற சட்டம் படித்த டீம் ஒன்று நேரடியாக இறங்கியது. அரசியல் அதிகாரம் படைத்த குடும்பத்தினர் சிலரும் காவல் துறை அதிகாரிகளிடம் வழக்கின் தன்மையைப் பற்றி விசாரித்துவிட்டு, ‘வாய்ப்புகள் இருந்தால் காப்பாற்றுங்கள்’ என்று அழுத்தம் கொடுக்கிறார்கள்.

கடந்த காலங்களில் பொதுவாகவே ஹேமந்த்துக்கு ஒரு பிரச்சினை என்றால் சுமார் 20 வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி விடுவார்கள். முடியாதபட்சத்தில் அரசியல்வாதிகள் மூலமாக அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து தப்பித்துவிடுவார் ஹேமந்த்.

சித்ரா வழக்கில் முதலில் சித்ராவின் தாய் மீதே திசை திருப்ப முயற்சி செய்தார்கள் ஹேமந்த் ஆதரவாளர்கள். ஆனால், இந்த வழக்கை இணை ஆணையர் மகேஷ்வரி மேற்பார்வையில் துணை ஆணையர், இன்ஸ்பெக்டர் விஜயராகவன் உள்ளிட்ட டீம் தீவிரமான விசாரணை செய்ததில்... சந்தர்ப்பச்சூழல் எல்லாமே ஹேமந்த் மீதான குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை திரட்ட ஏதுவானதாக இருக்கிறது. இதை அறிந்தவுடன் இப்போது பெரிய இடத்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

அதாவது திருமணமாகி ஏழு வருடத்துக்குள் மனைவி தற்கொலை செய்துகொண்டால் 174(3) Cr Pc அடிப்படையில் காவல் துறை விசாரணைக்கு முன்னதாக ஆர்.டி.ஓ (கோட்டாட்சியர்) தான் விசாரணை செய்ய வேண்டும். ஆர்.டி.ஓ விசாரணை முடிந்த பிறகே போலீஸ் விசாரணை செய்ய வேண்டுமென்று அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீஸாரால் விசாரிக்கப்பட்ட ஹேமந்த் நான்கு நாட்கள் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

சித்ரா தற்கொலை செய்துகொண்ட பகுதியை உள்ளடக்கிய ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ டிசம்பர் 14ஆம் தேதி திங்கட்கிழமை முதல் விசாரணையைத் தொடங்க உள்ளார். அவர் சித்ரா - ஹேம்நாத்தின் குடும்பத்தினரிடம் இருந்து விசாரணையை ஆரம்பிக்க உள்ளார். ஆர்.டி.ஓ விசாரணை சில மாதங்கள் நீடிக்கலாம். ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கை தாக்கல் செய்த பிறகே அதன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குள் அனைத்தும் தலைகீழாக மாற்றப்பட்டுவிடும்” என்கிறார்கள் அதிரவைக்கும் வகையில்.

ஆர்.டி.ஓ திவ்யாஸ்ரீயும் ஒரு பெண் என்பதால் சித்ரா என்ற பெண்ணுக்கு நீதி வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு சித்ரா குடும்பத்தினரிடையேயும், சித்ராவின் அபிமானிகளிடையேயும் இருக்கிறது. அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக