வெள்ளி, 25 டிசம்பர், 2020

இந்தி நடிகர் சோனு சூட்டின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்..? அவிழும் மர்மங்கள்!

Image may contain: 1 person
சாவித்திரி கண்ணன் : · சோனு சூட்டின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்சா..? அவிழும் மர்மங்கள்! இந்தியாவின் உச்சபட்ச ஸ்டார்களுக்கு இல்லாத ஒரு மிகப் பெரிய மதிப்பும், மரியாதையும் நடிகர் சோனுசூட்டுக்கு உருவாகிக் கொண்டுள்ளது! இருபது வருடங்களாக திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய ஹீரோ இல்லை! பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்கள் தான்! அதுவும் எண்ணி 71 படங்கள் தான்! தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்ட துபதண்டா ஆதிவாசிகள் சோனு சூட்டுக்கு கோயில் கட்டியுள்ளனர்!
ஆந்திராவில் ஒரு சரத்சந்திரர் பெயரிலான ஒரு பெரிய கல்வி நிறுவனம் பல்கலை கழகம் தொடங்கி கல்லூரி வரை ஒரு துறையின் பெயரையே சோனுசூட் என்று பெயரிட்டுள்ளது. ஏன்? எதற்கு என விடை தெரியவில்லை.
வெல்டிங் கடை தொடங்கி ஓட்டல் வரை சோனுசூட் பெயர் சூட்டப்பட்டு வருகிறது.
எளிய புலம் பெயர் தொழிலாளி குடும்பம் ஒன்று பிறந்த குழுந்தைக்கு சோனுசூட் பெயர் வைத்துள்ளது!
ஒரு இளைஞன் சோனுசூட் உருவத்தை பச்சை குத்திக் கொண்டுள்ளான்!
இப்படி இந்தியா முழுவதும்பரவலாக சோனுசூட் மக்களால் கொண்டாடப்படுகிறார்!
இதன் விளைவு தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சமீபத்தில் வில்லனான சோனுசூட்டை கிழே தள்ளி காலால் மிதிப்பது போன்ற காட்சியில், ’’நான் நடிக்க மாட்டேன். அவ்வாறு அவரை நான் அடித்தால் மக்கள் என்னைத் தான் துஷ்டனாகப் பார்ப்பார்கள்’’ என்று மறுத்த சம்பவம் நடந்துள்ளது!
ஆக, வாழ்க்கையில் நிஜமாகவே ஒரு ஹீரோ அந்தஸ்த்தை மக்கள் சோனுசூட்டிற்கு வழங்கியுள்ளனர் என்பது கண்கூடான மறுக்க முடியாத உண்மையாகும்!
இந்த அந்தஸ்த்தை அடைவதற்கு அவர் செய்த கொடைகளின் ஒரு சில துளிகளை பட்டியலிடுவது அவசியம் என்று தோன்றுகிறது.
# 25,000 க்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒரு மாதம் உணவளித்து காப்பாற்றி பிறகு அவர்களை அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது!
# மும்பையில் உள்ள தனது ஸ்டார் ஓட்டலில் தூய்மை தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் இலவசமாக தங்கவும், உண்ணவும் இடமளித்தது!
# கொரானா ஊரடங்கில் 39,389 புலம்பெயர் தொழிலாளர்களை ரயிலில் நேரடியாக கவுண்டர் டிக்கெட் எடுத்து அனுப்பியது! மேலும் 27,890 பேரை தக்கலில் டிக்கெட் எடுத்து அனுப்பியது!
# 14,344 புலம்பெயர் தொழிலாளர்களை பல்வேறு மாநிலங்களில் இருந்து அவரவர் இடங்களுக்கு பேருந்தில் ஏற்றி அனுப்பியது!
# இந்தியாவின் பல்வேறு இடங்களில் தவித்த ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களை அவரவர் ஊர்களுக்கு விமானத்தில் அனுப்பி வைத்தது!
# இதில் ஒரு முறை ஆகான்விகான் என்ற ஒரு தொண்டு நிறுவனம் புலம்பெயர் தொழிலாளர்களை ரயிலில் அனுப்ப வந்த போது எதிர்பாராவிதமாக கூடுதல் புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிலில் முட்டிமோதி ஏற வந்துவிட்டனர். உடனே ரயிவே நிர்வாகம் சோனுசூட்டுக்கு போன் செய்து விபரம் கூறியதும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ஆகட்டும் அடுத்த 24 மணி நேரத்தில் கூடுதலாக வந்துவிட்ட 1,270 பேரை அனுப்புங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தார்!
# உதவுவதற்கென்றே ’வெல்விஷர் டீமை’ ரெடி பண்ணிவைத்துள்ள வகையில் கொரானாவால் வேலை இழந்த சுமார் மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரப் போவதாக அறிவித்துள்ளார்!
இப்படி பட்டியல் போட்டுக் கொண்டே போனால்,ரொம்ப அதிகமாக போய்கிட்டே இருக்கும்.ஏனெனில்,விபத்தில் அடிபட்ட ஏழை பெண்ணின் கால்களுக்கு அறுவை சிகிச்சை செய்தது,ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கித் தந்தது,கொரானாவில் வேலை இழந்த சிலருக்கு வேலை ஏற்பாடு செய்தது…என்பதோடு தற்போது தெலுங்கானாவை சேர்ந்த மூன்று குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்!
ஆகவே, சோனுசூட் மீது மக்களுக்கு அபரிமிதமான அன்பு ஏற்பட்டுள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம்! அவருடைய மாபெரும் சேவைகளை நாமும் போற்ற எந்த தயக்கமுமில்லை!
உண்மையிலேயே பிரமிப்பாகத் தான் உள்ளது. ரஜினி,கமலோடு ஒப்பிட்டால் அவங்க சம்பாதிச்சதுல பத்துல ஒரு பங்கு கூட இவர் சம்பாதித்திருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்!
அதே சமயம் சில அடிப்படையான சந்தேகங்கள் மனதில் எழுந்தது! எப்படி இவ்வளவு நற்காரியங்கள் செய்ய இவருக்கு பணம் வந்தது? இந்த தேடலில் இறங்கிய போது அவர் கேட்ட வேண்டுகோளின்படி ஏராளமான தனி நபர்கள் நிறைய பணத்தை அள்ளித் தந்துள்ளனர். அத்துடன் பெப்சி,கோத்ரெஜ் உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அவருக்கு நிறையவே தந்து உதவியுள்ளனர். ஆக, இதுவும் நல்ல விசயம் தான்! நல்லதை செய்ய ஒருவன் களம் இறங்கினால் அதை தாங்களே இறங்கி செய்யமுடியாத பலர் ஆதரித்து உதவுவது இயற்கை தான்! அதிலும் தவறில்லை!
ஆனால்,அதற்கு பின்னணியில் ஆளும் பாஜக அரசு இயங்கி கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகளை வட இந்தியாவின் முன்னணி பத்திரிகையாளர்கள் சிலர் சொல்லி வருகின்றனர். 2019 பொது தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவான கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட பாஜகவிடம் பணம் பெற்ற நடிகர்களில் ஒருவர் தான் சோனுசூட் என கோப்ரா போஸ்ட் ஆதாரங்களுடன் கூறுகிறது!
பாஜக பிரபலங்கள் மத்திய அமைச்சர் அமித்ஷா, ஸ்மிருதி இரானி உட்பட பலர் சோனுசூட்டை புகழ்ந்து வருகின்றனர். உண்மையில் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பையும் பல மாநிலங்களில் ஆளும் வாய்ப்பையும் பெற்றுள்ள பாஜக செய்யத் தவறியதை தான் சோனுசூட் என்ற தனி நபர் செய்துள்ளார். இதில் அவரை புகழ என்ன இருக்கிறது? வெட்கி தலைகுனிய வேண்டியர்கள் ஏன் புகழ வேண்டும்?
இதில் ராஜேந்திர சுக்லா என்ற மத்திய பிரதேசத்தின் பாஜக எம்.எல்.ஏ சோனுசூட்டிடம் புலம்பெயர் தொழிலாளர்கள் சிலரை அனுப்ப உதவி கேட்டுள்ளார்! மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சியின் எம்.எல்.ஏ ஆட்சியாளர்களிடம் எடுத்து சொல்லி பெற்றுத் தர வேண்டிய உதவியை தனி மனிதரிடம் கேட்பானேன்?
எத்தனையோ சமூக சேவகர்களெல்லாம் கள வேலையில் தீவிரம் காட்டி வந்த நிலையில் மகாராஷ்டிராவின் கவர்னர் சோனுசூட்டை மட்டும் அழைத்துப் பேசியது ஏன்?
சோனுசூட்டைப் போலவே ஷாருகான், ஸ்வர்ணபாஸ்கர் போன்ற திரைக் கலைஞர்கள் செய்த உதவியெல்லாம் ஏன் முக்கியத்துவம் பெறவில்லை?
புலம்பெயர் தொழிலாளர்களை ஆயிரம் பேருந்துகளில் ஏற்றி, அவரவர் ஊர்களுக்கு அனுப்ப பிரியங்கா காந்தி முயன்றபோது அதற்கு பேருந்துகளின் பிட்னஸ் சர்டிபிகேட் உள்ளிட்டவைகளை கேட்டு நிர்பந்தித்து கடைசி வரை அதில் ஏறிச் செல்ல அனுமதிக்காத உ.பி உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் சோனுசூட் சொன்னதும் உடனுக்குடன் எந்த தடையும் செய்யாமல் ஒத்துழைப்பு செய்தது எப்படி?
இந்த கேள்விகள் அரசியல்வாதியல்லாதவர்களால் எழுப்பட்டவை! தற்போது சிவசேனாவின் முக்கிய தலைவரான சஞ்சய் ராத் கட்சியின் அதிகாரபூர்வமான சாம்னாவில் 2019 தேர்தலில் சோனுசூட் பாஜகவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பரவலில் ஈடுபட்டத்தை சுட்டிக்காட்டி, சோனுசூட் திடிரென்று மகாத்மாவாக உருவகப்படுத்தப்படுவதன் பின்னணியில் பாஜக இருப்பது விரைவில் அம்பலபடுத்தப்படும் என்று கூறியுள்ளார்!
இவை ஒருபுறமிருக்க எனக்கும் சில அடிப்படை சந்தேகங்கள் உள்ளன! கொரானா காலத்தில் சோனுசூட்டை மனமாற புகழ்ந்து எழுதியவர்களில் நானும் ஒருவன்! அதில் மாற்றமில்லை. ஆனால்,இந்த உதவும் குணம் நாற்பத்தியேழாவது வயதில் தான் திடீர் என்று ஏற்படுமா? அது பிறவி குணமல்லவா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
மேலும் தற்போது அவர் மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவேன் என்று எந்த தைரியத்தில் கூறுகிறார்? சோனுசூட்டின் கூடவே உள்ள சங்கர்பவார் என்ற இந்தித்துவ பிரமுகர் மோடி,அமித்ஷா வரை நேரடி செல்வாக்கு உள்ளவர், அந்த தைரியமா?
அடுத்ததாக கடந்த 18 நாட்களாக பஞ்சாப் விவசாயிகள் கொட்டும் பனியில் நடுரோட்டில் இரவும்,பகழும் போராடி வரும் போது அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு கூட ஏன் சோனுசூட்டின் கரங்கள் உதவ முன்வரவில்லை. அட, ஆதரவாக ஒரு கருத்தாவது சொல்லி இருக்கலாம் அல்லது உதவிகள் மட்டும் செய்திருக்கலாம்! ஆனால் பஞ்சாபில் பிறந்து வளர்ந்த சோனுசூட் டிவிட்டரில் ’விவசாயிகள் என் கடவுள்’ என்று மட்டுமே சொல்லி அமைதி காத்துக் கொண்டார்.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சோனுசூட்டை பஞ்சாபின் அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது! பாஜக ஆதரவான ஒரு கலைஞருக்கு தேர்தல் ஆணையம் இவ்வாறு முக்கியத்துவம் தந்து செயல்படுவதன் நோக்கம் என்ன?
இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக சோனுசூட்டை பேச வைத்துள்ளது. அதை இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஒளியும், ஒலியும் செய்ய உள்ளதாம்! ஆகவே, மற்றொரு அண்ணா ஹாசாரே போன்றதொரு ஆளுமையை கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் இது போன்ற தந்திரங்களில் ஈடுபடுவதாகவே தோன்றுகிறது.
சோனுசூட் ஒரு ஆச்சாரமான அந்தணர் குலத்தில் பிறந்தவர் என்பதும், அவர் கல்லூரி படிப்பை நாக்பூரில் படித்த போது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தததையும் இணைத்துப் பார்த்தால், அவருக்கு பின்னணியில் இருந்து கொண்டு ஒரு ஒளிவட்டம் சூழல ஆர்.எஸ்.எஸ் கொரானா காலகட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டது என சந்தேகப்படுவதில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை!
ஏனெனில், இன்றைய நிலவரப்படி பாஜக விரும்பாவிட்டால் ஒருவன் என்ன தான் சேவை செய்தாலும் அவனை அவர்கள் அங்கீகரிக்கமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, சமயம் வரும்போது பாய்ந்து குதறவும் தயங்கமாட்டார்கள் என்பதற்கு தமிழக திரைக் கலைஞர் சூர்யாவே உதாரணம் என்பதை கவனத்தில் கொண்டால் நான் சொல்வதில் உள்ள யாதார்த்தங்கள் புரிபடும்!
-சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக