ஞாயிறு, 13 டிசம்பர், 2020

சிவாஜியின் கர்ணன் பட தலைப்பை திருடிய தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணி .. ரசிகர்கள் கடும் எதிர்ப்பு


 minnambalam :தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படத்தின் தலைப்பை பயன்படுத்த சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.   மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கர்ணன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் நடைபெற்றது.

ஏற்கனவே சிவாஜி நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால், தனுஷ் படத்தில் கர்ணன் என்ற பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது சிவாஜி சமூக நலப்பேரவைபேரவையின் நிறுவனர் சந்திரசேகர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நடிகர் திலகம் சிவாஜியின் லட்சோப லட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் ‘கர்ணன்’ என்றாலே நினைவில் நிற்பது நடிகர் திலகத்தின் கர்ணன் திரைப்படம்தான் என சுட்டிக்காட்டினார்.

ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி சில திரைப்படங்களின் பெயர்கள் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில், அந்தப் பெயர்களே திரைப்படத்தின் கதைக்களத்தைத் தாங்கி கால காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும் என்றவர், தனுஷ் நடித்த திருவிளையாடல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது, உத்தமபுத்திரனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காததை சுட்டிக்காட்டினார்.

“கர்ணன் என்றாலே கொடுப்பவன், கொடைவள்ளல்தான். ஆனால், தாங்கள் நடிக்கும் திரைப்படத்தின் கதையோ உரிமைக்காகப் போராடும் ஒருவருடைய கதை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மகாபாரதக் கதையையே மீண்டும் உருவாக்குகிறோம். அதில் ‘கர்ணன்’ கதாபாத்திரம் வருவதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்றால் பரவாயில்லை. ஒரு சமூகத் திரைப்படத்திற்கு கர்ணன் என்று பெயரிட்டு அதில் தாங்கள் நடிப்பது ஏற்கத்தக்கதல்ல” என்று கூறினார்.

இது லட்சோபலட்ச நடிகர் திலகம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனதையும் புண்படுத்தக்கூடியதாக அமையும். எனவே. ‘கர்ணன்’ என்ற தலைப்பினை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக