செவ்வாய், 8 டிசம்பர், 2020

ஸ்வர்ணலதா! .. முதல் படத்திலேயே கலைஞர் எம் எஸ் வி பாரதியோடு .. துயரங்களின் ராணி

Maanaseegan : · வெகு சில கலைஞர்களுக்கு மட்டும்தான் அவர்களின் கலையை

வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கிற அதிசயம் வாய்க்கும்...சிலர் வலிந்து அதை உருவாக்கிக் கொள்வார்கள்..அதில் ரசமிருக்காது..கண்ணதாசனுக்குப் பிறகு ஸ்வர்னலதாவின் வாழ்வை அவர் பாடிய பாடல்களின் பாவங்களிலிருந்தும் , வரிகளிலிருந்தும் பிரிக்க முடியாது.. ஸ்வர்னலதாவின் நேர்காணல்களைப் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்..அவர் தன் கலை குறித்த எந்தப் பெருமிதமும் இல்லாத வெறும் மனுஷி..

ஆனால் அவருக்குள் இரு வேறு மனுஷிகள் உண்டு..ஒருத்தி உயிர் கசிய அழுது எல்லோரையும் கதற வைக்கிறவள்..இன்னொருத்தி இதைப் பற்றிய கவலையே இல்லாமல் பூமியிலிருந்து பல அடிகள் தன் குரலால் எம்பி காற்றில் நடனத்தை வரைகிறவள்..நிஜ ஸ்வர்னாவிற்கு அவர்கள் இருவரும் உடுக்கடித்தால் வருகிற குலசாமிகள்தான்..அதை உணர்ந்து மிகச்சரியாக உடுக்கடித்தவர்கள் ராஜாவும் , ரஹ்மானும்..

நீண்ட வாழ்க்கையும் , அனுபவங்களும் வாய்க்கப் பெற்ற ஜானகி , எஸ்பிபி, சித்ரா ஆகியோருக்கு பல தலைமுறை இசையமைப்பாளர்களிடம் பாடுகிற வாய்ப்பு கிடைத்தது அதிசயமல்ல..மிகக் குறுகிய காலமே ( இரண்டாயிரத்துக்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்து விட்டன..2007 க்குப் பிறகு பாடவே இல்லை..முழுமையாகக் கோலோச்சியது பத்து ஆண்டுகள் தான்)திரைவானில் ஒளிர்ந்து உதிர்ந்த துயரங்களின் ராணிக்கும் அது வாய்த்தது கடவுளின் கொடைதான்..
எம்.எஸ்.வி.தான் அவரை அறிமுகம் செய்தார்..முதல் பாடலே பாரதி எழுதிய ' சின்னஞ்சிறு கிளியே' ..படத்தின் கதை வசனம் கலைஞர் ( நீதிக்குத் தண்டனை)..முதல் படத்திலேயே மூன்று மேதைகளோடு தன் பயணத்தைத் தொடங்கியது அந்த அபூர்வக் குயில்..
பாட வந்து சில நாட்களிலேயே மாபெரும் சாதனையைச் செய்தார்..இந்திய அளவில் புகழ்பெற்ற 'mugal e azam' படத்தை தமிழில் 'அனார்கலி' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்தனர்..சங்கர் கணேஷ் இசையில் சொர்ணலதா பாடினார்..அது இரு பெண்கள் போட்டி போட்டுப் பாடுகிற கஜல் பாடல்..ஒரு ஆண் இருவரையும் சைட் அடித்தபடி ரோசாப்பூவோடு உட்கார்ந்திருப்பார்..அந்தப் பாடலை இந்தியில் நௌஷாத் இசையில் லதா மங்கேஷ்கரும் , சம்ஷாத் பேகமும் பாடியிருப்பார்கள்..ஆனால் தமிழில் இருவருக்கும் ஒரே குரல்தான்..ஸ்வர்னலதா தானொரு சண்டியர் என்பதை அந்தப் பாடலில் நிரூபித்திருப்பார்..நாகூர் சலீம் எழுதிய பாடலை
' எந்தன் விதியை உந்தன் சபையில்
சோதித்தே நானும் பார்த்தேனே '
என்று அவர் தொடங்குகிற போதே நாம் மயங்கி விடுவோம்..நௌஷாத் வியந்து மோதிரமெல்லாம் தந்திருக்கிறார்..
தொண்ணூறுகளில் ராஜா உருவாக்கிக் கொண்ட துள்ளல் கலந்த மெலடிக்கு ஸ்வர்னா மிகச்சரியாகப் பொருந்தினார்..
'சொல்லி விடு வெள்ளிநிலவே
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
நான் ஏரிக்கரை மேலிருந்து
காலையில் கேட்டது கோவில்மணி
காட்டுக்குயில் பாட்டுச் சத்தம்
ஆறடி சுவருதான் ஆசைய தடுக்குமா
மலைக்கோவில் வாசலில்
நீதானே நாள்தோறும் நான் பாடக்காரணம்
மாடத்திலே கன்னி மாடத்திலே'
என்று கணக்கற்ற பாடல்களுக்கு ஸ்வர்னா தன்குரலால் உயிர் கொடுத்தார்..
கிராமியத் தன்மை கொண்ட பாடல்களுக்கு அதுவரை தமிழ் இசையுலகில் இல்லாத கவர்ச்சி நிரம்பிய குரலாக ஸ்வர்னாவின் குரலை யோசித்து ராஜா நிறைய மாயாஜாலங்கள் செய்தார்..
'அடிவண்ணாத்திப் பூ பாதையிலே
ஒணத்துப் பட்டு புல்லாக்கு
குயில் பாட்டு ஓ வந்ததெங்கே இளமானே
அடி ஆச மச்சான் வாங்கித் தந்த மல்லியப்பூ
கானங்கருங்குயிலே .
மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே
ஊரடங்கும் சாமத்திலே
புன்னைவனப் பூங்குயிலே..'
தொண்ணூறுகளில் ராஜா இசையமைத்த வேகமான பாடல்களின் அடையாளமாகவே மாறியவர் ஸ்வர்னலதாதான்..
' ஆட்டமா தேரோட்டமா
மாசி மாசம் ஆளான பொண்ணு
ராக்கம்மா கையத்தட்டு
மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு'
என்பதெல்லாம் ஸ்வர்னாவின் தனி அடையாளங்கள்..
ஒரே பாடலை இருவேறு விதமாக ( போவோமா ஊர்கோலம் , நீயெங்கே என் அன்பே ) பாடவைத்து ஸ்வர்னலதாவின் அபூர்வமான ஆற்றலை ராஜா , ரசிகர்கள் உணரும்படி செய்தார்..அதற்கு மாநில அரசின் விருதும் கிடைத்தது..
ரஹ்மானின் வருகை ஸ்வர்னலதாவின் பன்முகப் பரிமாணங்களை முழுவதுமாக அனைவரையும் உணரச் செய்தது..அவர் குரலுக்குள் பெருக்கெடுக்கும் காமத்தின் பாவங்களையும் , அலட்டலான துள்ளலையும் மிகச்சரியாக உணர்ந்து கொண்ட ரஹ்மான் விதவிதமான பாடல்களைத் தந்து அவர் மாபெரும் உயரத்தை அடையும்படிச் செய்தார்..
' உசிலம்பட்டி பெண்குட்டி
ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு
‌‌. முக்காலா முக்காபலா
ஏ முத்துப் பாப்பா
முன்னேறுதான்
குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
அக்கடான்னு நாங்க உடை போட்டா
மாயா மச்சீந்ரா மச்சம் பார்க்க வந்தீரா
கும்மியடி பெண்ணே'
என்று ரஹ்மான் இசையில் அவர் ஈச்சங்காட்டு அழகியாக கம்மாங்கரையில் குளித்தபடி வாலிப பசங்களை மயக்கிய அதே நேர்த்தில் இங்கிலாந்து பார்களில் நடனமிடும் வெஸ்டர்ன் பேரழகியாகவும் சுழன்று நடனமாடியும் இதயம் கவர்ந்தார்..
துள்ளலான மெலடிகளை அமைப்பதில் தனித்தன்மை வாய்க்கப் பெற்ற ரஹ்மானுக்கு அதிலும் ஸ்வர்னா மிகச் சரியாகப் பொருந்தினார்..
' மெல்லிசையே
காதலெனும் தேர்வெழுதி
குளிருது குளிருது
லக்கி லக்கி நீயும் லக்கி
சொல்லாயோ சோலைக்கிளி '
ஆகியவை ரஹ்மான் மெலடி வரிசையில் அவர் அடித்த சதங்கள்..
இப்படிப்பட்ட பன்முகத்திறன் கொண்ட பாடகி உண்மையிலேயே அபூர்வம்தான்..ஜானகி எல்லா வகையான பாடல்களும் பாடுவார்...சில பாடல்களில் அவர் குரலை மாற்றிப் பாடுவதை உணர முடியும்..ஆனால் தன் குரலில் துளியளவும் மிமிக்ரி வந்து விடாமலே இந்தச் சாதனையை ஸ்வர்னா செய்தார்..அதே மாதிரி டி.எம்.எஸ்- சுசீலா , எஸ்பிபி - ஜானகி , மனோ - சித்ரா , ஹரிஹரன் - சுஜாதா இதுமாதிரி ஜோடிக் கணக்கெல்லாம் ஸ்வர்னாவிடம் இல்லை..அவர் முன்னால் யார் நின்றாலும் அடித்து ஆடுவார்..
தொண்ணூறுகளின் ராணி சந்தேகமே இல்லாமல் அவர்தான்..ரஹ்மான் தயவால் ரங்கீலா , டவுட் போன்ற இந்திப் படங்களிலும் பாடி வேறொரு பரிணாமத்தை அடைந்தார்..தொண்ணூறுகளின் பாடல்கள் என்றால் எந்த இசையமைப்பாளரின் ரசிகரும் ஸ்வர்னாவைத் தவிர்க்கவே முடியாது..அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் அவர் எட்டு மொழிகளில் 7500 பாடல்களைப் பாடியிருக்கிறார்..குறுகிய காலத்தில் நிகழ்ந்த மாபெரும் சாதனை இது..
அவருடைய மகத்தான பாடல்களாக நான் கருதுவது
'மாலையில் யாரோ மனதோடு பேச- இளையராஜா
என்னுள்ளே என்னுள்ளே - கார்த்திக் ராஜா
போறாளே பொன்னுத்தாயி- ஏ.ஆர்.ரஹ்மான்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் - ஏ.ஆர்.ரஹ்மான்
கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை
- ஏ.ஆர்‌.ரஹ்மான்'
இந்த ஐந்து பாடல்களையும் அவர் குரலில் இருந்து பாடவில்லை..ஆன்மாவிலிருந்து பாடியிருக்கிறார்.. சிறுவயதிலிருந்தே அவர் உணர்ந்திருக்கக் கூடும்..உடல்தான் தன் துயர் என்று..
அனார்கலி பாடலில் கூட
' துன்பத்திலே அதன் சுகத்தை
எண்ணி எண்ணி நானும் பார்த்தேனே'
என்று சில வரிகள் வரும்...உடலின் துயரத்தை குரல் வழி கடக்க முயன்ற தேவதை அவர்..'மாலையில் யாரோ மனதோடு பேச'பாடல் பேசுவது காமத்தின் தவிப்பையே..ஆனால் ஸ்வர்னாவின் குரல் தந்து விடுகிற பாவம் அதற்கு வேறொரு வண்ணத்தைத் தந்து விடுகிறது..உடலை உதற விரும்பும் துயரத்தின் சிறு இசையே அந்தப் பாடல்..
' என்னுள்ளே என்னுள்ளே ' பாடலில் பாடலுக்கும் , காட்சிகளுக்கும் சம்பந்தமே இருக்காது..விலகி நின்று காமத்தைப் பார்க்கும் பெண்துறவியின் ஆன்மீக தரிசனமே அந்தக் குரல்..
' போறாளே பொன்னுத்தாயி ' பாடலை பாடி முடித்து விட்டு அவர் அங்கேயே கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்..
' போறாளே பொன்னுத்தாயி
பொலபொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறுந் தந்த மண்ண விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழிய விட்டு
போறாளே பொட்டப் புள்ள ஊர விட்டு.
சாமந்திப் பூவா ? ஊமத்தம் பூவா ?
கருத்தம்மா எந்தப் பூவம்மா ?.
அஞ்சாறு சீமான் உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி போல
போட்டு வச்ச மூட்டை போல '
இந்த இடத்தில் அவர் எப்படி அழாமல் இருக்க முடியும்..தேசிய விருது தேடி வராமல் என்ன செய்யும் ?
'கண்ணில் ஒரு வலியிருந்தால் 'பாடலை அவர் மூன்று பாவங்களில் பாடியிருப்பார்..மூன்றிலும் அந்த துயரமே விஞ்சி நிற்கும்..
' எவனோ ஒருவன் ' பாடலை என்னால் எழுதவே முடியாது..( ரஹ்மான் தொடரில் எழுதித்தான் ஆகவேண்டும்) ..கண்ணீர் மட்டுமே என் விமர்சனம்..' அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே ' என்கிற இடத்தில் ஸ்வர்னாவின் உணர்வு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது..
பக்கம் பக்கமாக எழுத வேண்டும் என்று கை பரபரக்கிறது..எவ்வளவு எழுதியும் திருப்தி வரவில்லை.'.துயரங்களின் ராணி' இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம்..வேறென்ன சொல்வது..?
ஆன்மா அமைதியுறட்டும் என்று பிறருக்குச் சொல்வது சம்பிரதாயம். மட்டுமே...ஆனால் நிஜமாகவே ஸ்வர்னாவின் ஆன்மா அமைதியுறட்டும்..
கண்ணீரால் நம் நினைவஞ்சலி..
ஸ்வர்னலதா நினைவுநாள்
* மானசீகன் *

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக