சனி, 5 டிசம்பர், 2020

சூரப்பாவின் நேர்மை பிடிச்சிருக்கு!- கமல்ஹாசன்

minnambalam : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சூரப்பா மீது தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்திருக்கும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று டிசம்பர் 5-ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்... "அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்ட போது இந்த பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் தமிழ்நாட்டில் இல்லையா என்று நாமும் கேள்வி எழுப்பினோம்.
சூரப்பாவின் நேர்மை பிடிச்சிருக்கு!- கமல்ஹாசன்

வந்தவரோ வளைந்து கொடுக்காதவர். தமிழகத்தின் பொறியியல் கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்த முனைந்தவர். அதிகாரத்தின் முன்பு நெளிந்து போகாதவர். பொறுப்பார்களா ஊழல் திலகங்கள்?     வளைந்து கொடுக்கவில்லை என்றால் முடிப்பது தான் அவர்கள் பழக்கம். எவனோ அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஒரு பேடி எழுதிய கடிதத்தை அடிப்படையாக வைத்து விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறார்கள். மொட்டையில் முடி வளராததால் அவர் மீது புகார்கள் இருக்கிறதாஎன்று விளம்பரம் செய்து கடை விரித்துக் காத்திருக்கிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடாக தங்கியிருந்தவர்களை, பல்கலைக்கழக வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியவர்களை விசாரணை செய்தீர்களா? ஊழல் புகார்கள் மலிந்து கிடக்கும் துறைகள் பற்றி விசாரணை செய்தீர்களா?

சூரப்பாவின் கொள்கைகளிலும் அரசியல் நிலைப்பாடுகளிலும் நமக்கு மாற்றுக் கருத்துகள் உண்டு. ஆனால் நேர்மையாக இருக்கிறார் என்ற காரணத்திற்காக ஒருவர் வேட்டையாடப்படுவதை ஏற்க முடியாது. சகாயம் முதல் சந்தோஷ் பாபு வரை பட்டியல் நீளுகிறது. பேரதிகாரிகளே விருப்ப ஓய்வு பெற்று செல்லும் நிலை என்றால்... சாமானியர்களின் கதி என்ன?

ஊழலுக்கும் நேர்மைக்குமான இந்த போரில் கமல்ஹாசனான நான் நேர்மையின் பக்கம் இருக்கிறேன். நேர்மையாளர்கள் வாய்மூடி இருக்காமல் ஊழலை எதிர்த்துப் பேச வேண்டும். இனி ஒரு நம்பி நாராயணன் உருவாகக் கூடாது" என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார் கமல்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக