புதன், 9 டிசம்பர், 2020

பாஜக அலுவலகங்கள் முற்றுகை: விவசாயிகளின் அடுத்த கட்டப் போராட்டம்!

minnambalam :மத்திய அரசின் வேளாண் பண்ணை சட்டங்களை எதிர்த்து 14 ஆவது நாளாக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள், இன்று (டிசம்பர் 9) மத்திய அரசு வேளாண் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறியதை நிராகரித்தனர்.

நேற்று விவசாய சங்க பிரதிநிதிகள் அதிகாரபூர்வமற்ற வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் இன்று (டிசம்பர் 9) சட்டங்களை திருத்துவதற்கான வரைவு முன்மொழிவுகளை அரசுத் தரப்பு விவசாய சங்கத்தினருக்கு அனுப்பியது.    அதைப் பெற்ற சில மணி நேரங்களுக்குள், உழவர் தொழிற்சங்கங்கள் அதை தெளிவற்றவை என்று கூறி நிராகரித்தன. மேலும் போராட்டங்களைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர். டிசம்பர் 12 ஆம் தேதி ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையைத் தடுப்போம் என்றும் விவசாய சங்கத்தினர் கூறியுள்ளனர்.

விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிவ்குமார் சுக்கா இன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறோம். அரசோ தெளிவில்லாத திருத்த முன் வரைவுகளை எங்களுக்கு அனுப்பி வைக்கிறது. இனியும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. டெல்லிக்கு வரும் ஒவ்வொரு சாலையையும் தடுப்போம்.

டிசம்பர் 12 ம் தேதி விவசாயிகள் ஆக்ரா-டெல்லி அதிவேக நெடுஞ்சாலையைத் தடுப்போம். அன்று ஒரு நாள் நாட்டில் எந்தவொரு டோல் பிளாசாவிலும் அந்த நாளில் கட்டணம் செலுத்தமாட்டோம்”என்று கூறிய அவர், “விவசாயிகள் நாடு முழுதும் அடுத்த கட்ட போராட்டமாக டிசம்பர் 14 ஆம் தேதியன்று பாஜகவின் அலுவலங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம். அதானி, அம்பானி நிறுவனங்கள் தொடர்புடைய சட்டங்களை விவசாயிகள் புறக்கணிப்போம்” என்றும் கூறினார்.

இதற்கிடையில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் தோமர் அவசரமாக இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்துக்குச் சென்று விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக