வெள்ளி, 18 டிசம்பர், 2020

எம்ஜிஆர் ஆட்சியின் நீட்சியாக ஜானகி,ஜெயலலிதா,ஒ.பிஎஸ்,இ.பி.எஸ் ஆட்சிகளை அனுபவித்து நொந்தது போதாது என்று ஆளாளுக்கு .. நொந்தது போதாது என்று

 சாவித்திரி கண்ணன் : · அராஜக எம்ஜிஆர் ஆட்சிக்கு ரஜினி, கமல், பாஜக எதற்கு …? மாற்று அரசியலைப் பேசும் ரஜினியும் ’’எம்.ஜி.ஆர் ஆட்சி தருவேன்’’ என்கிறார் ஊழலற்ற நேர்மையான ஆட்சியைப் பேசும் கமலஹாசனும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுகிறார்! திராவிட கட்சிகளை ஒழிப்பதே இலக்கு என்ற பாஜகவும் எம்.ஜி.ஆரை கொண்டாடுகிறது..! இதை, ’’சுயமாக ஒரு ஆட்சியை தருவதற்கு எங்களுக்கு துப்பில்லை’’ என்பதற்கான அவர்களின் ஒப்புதல் வாக்கு மூலமாகவே நாம் பார்க்கவேண்டும்!

எம்.ஜி.ஆர் எந்த மாதிரியான ஆட்சியை தந்தார் என்பதை கீழே பட்டியலிட்டுள்ளேன். இதை நமது இளம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, மக்களுமே கூட குறித்து வைத்துக் கொண்டு ஆக, ‘’இப்படிப்பட்ட படுமோசமான ஆட்சியைத் தான் தரப் போகிறீர்களா..?’’ என்று முகத்திற்கு நேராக சம்பந்தபட்டவர்களிடம் கேளுங்கள்!
எளியவர்களிடம் இரக்கம், ஏழைகளுக்கு உதவி,வள்ளல், மனிதரில் புனிதர்…என்றெல்லாம் எம்.ஜீ.ஆரைப் பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்திற்கும்,எம்.ஜி.ஆரின் ஆட்சிக்கும் சம்பந்தமே இல்லை என்பது அவருடைய ஆட்சிகாலத்தில் வாழ்ந்த பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்ல,துன்பத்திற்கு ஆளான பலதரப்பட்ட மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
# தமிழகத்திலேயே அதிகமான போலீஸ் அடக்குமுறைகளையும்,துப்பாக்கி சூட்டையும் நிகழ்த்தியது எம்.ஜி.ஆர் ஆட்சி தான்!
# மாணவர்கள் மீதே காவல்துறை வன்முறையை பிரயோகப்படுத்தி பல கண்மூடித்தனமான தாக்குதல்களை நிகழ்த்தியது எம்.ஜி.ஆர் ஆட்சி!
# விவசாயிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் அனேகம்! அதில் ஒருமுறை 14 பேரும்,மற்றொரு முறை ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.
# சென்னை மெரினாவில் மீனவர்கள் மீது நிகழ்த்தபட்ட துப்பாக்கிசூட்டில் 14 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
# வட ஆற்காடு,தர்மபுரி பகுதிகளில் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடிய ஏழை,எளிய இளைஞர்களை நக்சலைட்டுகள் என்று முத்திரைகுத்தி, குருவிசுடுவதைப் போல சுட்டுதள்ளியதில் சுமார் 25 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்!
# இடஒதுக்கீடு போராட்டம் நடத்திய வன்னியர்கள் மீதான துப்பாக்கிசூட்டில் 21 வன்னியர்கள் படுகொலைக்கு ஆளாயினர்!
# போராடும் தொழிலாளர்கள் மீது ஆயிரக்கணக்கான பொய்வழக்குகள்,கைதுகள்,சித்திரவதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன!
# சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளின் மரணம் அதிகரித்தது!
# போராடுபவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர் அடிக்கடி சொன்ன புகழ்பெற்ற வாசகம் ’’பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்’’ என்பதாகும். அப்படிச் சொன்னால், போலீஸ் அல்லாத அடியாட்களின் தாக்குதலை போராட்டக்காரர்கள் சந்திக்க வேண்டும் என்பது அனுபவங்கள் தந்த பாடமாகும்!
# அதிமுகவினர் பாதுகாப்பிற்கு கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று எம்.ஜி.ஆர் பேசி, முதலமைச்சர் இப்படி சொல்லலாமா..? என்ற பெரிய சர்ச்சை எழுந்ததும் பின்வாங்கிவிட்டார்!
# திருச்செந்தூர் சுப்பிரமணியபிள்ளை கொலையில் பால்கமிஷன் ரிப்போர்ட்டையே மறைத்து அரசு ரெக்கார்டுகளிலேயே பொய் எழுதிய ஆட்சி எம்.ஜி.ஆருடையது தான்!
# சாராய சாம்ராஜ்யத்தை மிகப்பெரிய அளவில் கட்டமைத்து, அதில் கட்சிக்காரர்கள் கல்லா கட்டும் கலையை கற்றுத்தந்தார்! எம்.ஜி.ஆரின் எரிசாராய ஊழலுக்கு ரே கமிஷனே சாட்சி!
# மதுபான உற்பத்தியாளர்களுக்கு கலால் வரியிலிருந்து விலக்களித்த ஒரே ஆட்சியாளர் இந்தியாவிலேயே எம்.ஜி.ஆர் தான்!
# பால்டிகா கப்பல் நிலக்கரி பேர ஊழல் தொடங்கி ராபின்மெயின் மர்மங்கள் வரை எம்ஜி.ஆர் ஆட்சி ஊழல்களுக்கு பேர்போன ஆட்சி தான்!
# தமிழகத்தில் அரசு பள்ளி,கல்லூரிகளை அலட்சியப்படுத்தி,தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல் போல தோன்றி, கல்வி வணிகமய சுரண்டல் வடிவம் கண்டதும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான்!
# பனை வளத்தில் தன்னிகரற்று செழித்தோங்கிய தமிழகத்தில் பனை ஏறுவதை குற்றச்செயலாக சட்டமாக்கி, பனைஏறிகள் 12 லட்சம்பேரின் வாழ்வாதரத்தையும், பனைவளத்தையும் முற்றாக சிதைத்தார்- சாராய ஆலைகளின் நலனுக்காக!
# அதிரடி சட்டத்தின் மூலமாக பாரம்பரியமுறையில் செயல்பட்டு வந்த கிராமஅதிகாரிகளை ஒரே நாளில் பணி நீக்கம் செய்து, கிராம நீர் நிலைகள், பொதுப் பயன்பாட்டு நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்கள் ஆக்கிரமிக்க காரணமானவர்!
# உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல், உள்ளாட்சி அமைப்புகள் சிதையக் காரணமானவர்.
# இன்று மோடியிடம் எடப்பாடியும்,பன்னீரும் பணிவதைவிட அதிகமாக இந்திராகாந்தியிடம் பணிந்து, சோரம் போகும் அடிமைத்தனத்தை அரசியலில் அறிமுகப்படுத்தியவர்.
# எதிலும் சந்தேகம், குழப்பம்,மர்மம், ஜனநாயகத்தை நிர்மூலமாக்கிடும் தனிமனித சர்வாதிகாரம் ஆகியவற்றின் ஆகச்சிறந்த அடையாளமாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஏகப்பட்ட இலவசதிட்டங்களின் மூலமும், ஜால்ரா பத்திரிகையாளர்கள் வழியாகவும் தனக்கான போலிபிம்பத்தை சிறப்பாக உருவாக்கி தன்னை நிலை நாட்டிக் கொண்டவர்!
# ’ஏழைகளின் நாயகன்’ என்ற பிம்பம் தந்த பாதுகாப்பில் அரசியல் தளத்திலும்,சமூகத் தளத்திலும் மாபியாக்களின் ஆதிக்கம் தோன்ற வழிவகுத்தவர் எம்.ஜி.ஆர்! எதிர்கட்சியினரையும் கூட அவ்வப்போது தனது ஊழலில் பங்குதாரர்களாக்கி, பக்குவமாக பல ஊழல்கள் வெளியேவராமல் தடுத்த தந்திரசாலி!
இப்படிப்பட்ட ஆட்சி இன்றைய தகவல் தொழில் நுட்பங்கள் வளர்ந்த டிஜிட்டல்யுகத்தில் துளியும் சாத்தியமேயில்லை என்பதை உணராமல் ரஜினி,கமல்,பாஜகபிரமுகர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆட்சி தருவதாக சொல்லி வருகின்றனர்!
எம்ஜிஆர் ஆட்சியின் நீட்சியாக ஜானகி,ஜெயலலிதா,ஒ.பிஎஸ்,இ.பி.எஸ் ஆட்சிகளை நாம் அனுபவித்து நொந்தது போதாது என்று ஆளாளுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவோம் என்றால்,அதற்கு தமிழக மக்கள் ஏமாளிகளல்லர் என உணர்த்த வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக