ஞாயிறு, 6 டிசம்பர், 2020

ஆ.ராசா பேசுகிறாரா..? ஆமாம் பேசுவார்..! துணிவிருந்தால் எதிர்வாதம் வையுங்கள் இல்லயெனில் பொத்திக்கொண்டிருங்கள்..!

Muruganantham Ramasamy : ஆ.ராசா கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்திலிருந்து புழுதியை சிலுப்பிக்கொண்டெழுந்த அரசியல் ஆளுமை..! அவரின் பொருளியல் பின்னணியிலிருந்து நோக்கினால் அது காமராசர் மற்றும் ் கருணாநிதி இருவரின் வருகைக்கு ஒப்பானது.. சமூக பின்னணியிலிருந்து நோக்கினால் அது அவர்களுடையதை விடவும் கடினமானது. நான் மிகச்சரியாக அவர் சர்ச்சையில் சிக்கிய காலகட்டத்திலிருந்து எப்போது பொதுச்சமூகம் அவர்மீது ஒவ்வாமையை கக்க ஆரம்பித்ததோ அப்போதிருந்து அணுக்கமாக கவனிக்க துவங்கினேன்.. அவர் 2ஜி எனும் பிரம்மாண்ட அரசியல் சதிவலையில் பலியிடப்பட்டபோது திகைப்பில் நின்ற காங்கிரஸ், தி.மு.க இரண்டு கட்சிகளும் இதைக்கையாள தடுமாறிய போது கடுமையான கொந்தளிப்பிற்கு ஆளானேன்.. இதன்மூலம் இக்கட்சிகள் தங்களுக்கு குழிவெட்டுபவர்களுக்கு துணைபோகிறார்கள் என உள்ளுணர்வின் தூண்டலால் நிகழ்ந்த கொந்தளிப்பே அது..! இதை அணுக்கமாக பேசும் நண்பர்களிடம் சொல்லவும் செய்தேன்.. ஆனால் பொது வெளியில் அரசியல்சரிநிலை கருதி அமைதிகாக்கவும் செய்தேன். அரசியல் கூர்நோக்கும் நடைமுறைச்சூழலும் இணைந்து தரும் நெருக்கடி இது..
ஆனால் கலைஞர் கருணாநிதி என்கிற ஆளுமை அவரை மற்றவர்களைப்போல நைச்சியமாகவோ என்னைப்போல அமைதிகாத்தோ கைவிடவில்லை.
தனது கேள்விக்கப்பாலான ஆதரவை அவர் ஆ.ராசாவிற்கு உறுதிப்படுத்தினார்.
பொதுப்புத்தியில் பெரும் பிரச்சாரப்படையால் வெறிகொண்டு நிறுவப்பட்ட கருத்தை அஞ்சாமல் எதிர்த்து நிற்கும் துணிவு என்பது அரசியல் செயல்பாட்டின் உச்சபட்ச ஆகிருதி..!
அதை கலைஞர் கருணாநிதி ஆ.ராசாவிற்கு அளித்தார்.
கிட்டத்தட்ட நெருப்பு சூழ நின்றிருந்த காலங்களில் அவர் நிதானமாகவும் அழுத்தமாகவும் தனது தரப்பை பேசியிருக்கிறார்..
பல்லாயிரக்கணக்கான சொற்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் தன்மீதான மொண்ணை அவதூறுகளுக்கு மறுமொழி அளித்திருக்கிறார். அப்போது அவர்தரப்பின் நியாயங்களை நேர்கொண்டு கேட்டோர் மிக சொற்பம்.. நான் அவை அனைத்தையும் கேட்டிருக்கிறேன்..
சூதிற்பணயமாய் துரியோதனின் அவைக்கு இழுத்துவரப்பட்ட பாஞ்சாலி தனது நெடிய புலம்பலுக்கு மத்தியில் ஒரு கேள்வியை வைப்பாள் ..
"தன்னை இழந்த பிறகு என்னை இழந்தாரா..? இல்லை என்னை இழந்த பிறகு தன்னை இழந்தாரா..? "
சூதில் இலக்கணங்களுக்கு உட்பட்டே இதை கேட்பாள்..! தன்னையே இழந்தவன் என்னை எப்படி பணயமாக்க முடியும் என..!
ஆனால் அந்த அவை அதை கண்டுகொள்ளாமல் அமைதிகாக்கும்..
இதற்கொப்பானது ஆ.ராசாவின் அத்தனை நியாயங்களையும் கேட்காமல் கண்டும் காணாமல் இருந்தது.
ஆனால் இன்று எடப்பாடி போன்ற ஒரு கீழான வழியில் அதிகாரத்தை அடைந்த அற்பம் மீண்டும் அந்த புளித்துப்போன பொய்களில் பயணித்து அதிகாரத்தை நீட்டித்துக்கொள்ள முனையும் போது ஆ.ராசா எதிர்வினையாற்றினால் நேருக்கு நேர் விவாதிக்க வா என அழைத்தால் அதற்கு துணிவற்ற எடப்பாடிக்கு மரியாதையாக மறுமொழியளிக்க வேண்டும் எனச்சொல்பவர்கள் பாஞ்சாலியை துகிலுரிகையில் பொத்திக்கொண்டு நின்றவர்களுக்கு ஒப்பானவர்கள்..!
தனது சபதத்தை முடிக்க துரியோதனின் தொடைகளை பிளக்க வேண்டும்.. அது போர் நெறிகளுக்கு முரணானதுதான்.. ஆனால் பீமன் அதைச்செய்தான்..!
அதைச்சொன்னதும் நீங்கள்தான்..!
கண்ணன் குரு சேத்திரத்தில் அர்ச்சுனனுக்கு சொன்னது எது தேவையோ அதுவே தர்மம்..!
ஆ.ராசா பேசுகிறாரா..? ஆமாம் பேசுவார்..! துணிவிருந்தால் எதிர்வாதம் வையுங்கள் இல்லயெனில் பொத்திக்கொண்டிருங்கள்..!
நீங்க பேசுங்க ராசா..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக