ஞாயிறு, 13 டிசம்பர், 2020

எல்லா நாடுகளும் பருவநிலை அவசரநிலை அறிவிக்க வேண்டும் - ஐ.நா... கொரோனா முடியும் முன்பே அடுத்த சிக்கலா?

BBC -மேட் மெக்ராத் - சுற்றுச்சூழல் செய்தியாளர் : உலகில் உள்ள எல்லா நாடுகளும் பருவநிலை அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார் ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ். கொரோனா வைரஸ் உலகை அலைகழித்து வருகிறது. இந்நிலையில் அடுத்து உலகை அச்சுறுத்தும் பெரிய சிக்கலாக பருவநிலை மாற்றம் இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்தப் பின்னணியில் ஐ.நா. விடுத்துள்ள அறைகூவலைப் புரிந்துகொள்ளவேண்டும். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் 5ம் ஆண்டு தினத்தை ஒட்டி நடந்த ஒரு முக்கியமான உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பேசும்போது அன்டோனியா குட்டரெஸ் இந்த வேண்டுகோளை விடுத்தார். இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர். 38 நாடுகள் ஏற்கெனவே பருவநிலை அவசர நிலையை அறிவித்துள்ளன. இதே போன்ற அவசர நிலையை உலகில் உள்ள எல்லா நாடுகளும் அறிவிக்கவேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் தெரிவித்த குட்டரெஸ், கார்பன் நியூட்ராலிட்டி என்ற நிலையை எட்டும் வரை இந்த அவசர நிலை தொடரவேண்டும் என்றும் கூறினார்.

பணக்கார நாடுகள் மீது குற்றச்சாட்டு

பணக்கார நாடுகள் தங்கள் கொரோனா மீட்பு நிதியில் இருந்து செலவு செய்யும்போது, கார்பன் குறைவாக உமிழும் ஆற்றல் முறைக்கு செலவிடுவதைப் போல பெட்ரோலியம், நிலக்கரி போன்ற புதைபடிவ ஆற்றல் முறைக்கு 50 சதவீதம் அதிகம் செலவிடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

இத்தகைய செலவு முறை என்பது எதிர்காலத் தலைமுறையிடம் இருந்து கடன் வாங்கி செலவு செய்வது போன்றதாகும் என்றார் அவர்.

பூமியை நாசமாக்கி, எதிர்காலத் தலைமுறையை சுமையில் தள்ளும் கொள்கை முடிவுகளில் நாம் சிக்கிக் கொள்ளும் வகையில் நாம் செலவிடக்கூடாது என்றார் அவர்.

பிரிட்டன், பிரான்ஸ், ஐ.நா. ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த உச்சி மாநாட்டில் 70 உலகத் தலைவர்கள் பேசுவதாக இருந்தது.

இன்றைய கூட்டத்துக்கு கார்பன் உமிழ்தலை கட்டுப்படுத்துவதற்கான புதிய இலக்குகள், திட்டங்களோடு வந்திருந்த நாடுகளை அவர் பாராட்டினார்.

அதிக அளவில் கார்பன் உமிழும் நாடுகளின் பட்டியலில் உள்ள ஆஸ்திரேலியா, சௌதி அரேபியா, ரஷ்யா, மெக்சிகோ ஆகியவை இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவர்களது பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் போதிய அளவில் இல்லை.

வெளிநாடுகளில் புதைபடிவ எரிபொருள் திட்டங்களுக்கு செலவிடுவதை நிறுத்தப்போவதாக பிரிட்டன் அறிவித்தது. அத்துடன் பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய செயல்திட்டம் ஒன்றையும் அந்நாடு ஐ.நா.விடம் அளித்தது.

அன்டோனியா குட்டரெஸ்
படக்குறிப்பு,

குட்டரெஸ்.

பிரிட்டன் இப்படிச் செய்வது இதுவே முதல் முறை. ஏனெனில் முன்பு அதன் பருவநிலை மாற்றக் கடமைகளை ஐரோப்பிய ஒன்றியம் வரையறுத்தது.

இந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்திருக்க வேண்டிய கான்ஃபரன்ஸ் ஆஃப் பார்ட்டிஸ் என்ற இந்தக் கூட்டம், தள்ளித் தள்ளி வைக்கப்பட்டு, இணைய வழியாக இன்று நடந்தது.

அறிவியல் ரீதியாக நம்பிக்கை அளிக்கும் ஆண்டு

உலகத் தொற்று தொடங்கி 12 மாதங்களில் தடுப்பூசி முதியோரின் கைகளில் போடப்படுவதைப் பார்க்கிறோம். அதனால், இந்த ஆண்டு அறிவியல் ரீதியில் ஒரு நம்பிக்கை அளிக்கும் ஆண்டாக முடிவை எட்டுகிறது என்று கூறினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

"கொரோனாவைவிட மோசமான, அதைவிட அதிகம் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு சவாலுக்கு எதிராக, நமது புவிக் கோளினை, உயிர்ச்சூழலை காப்பாற்றுவதற்கு அறிவியல் முன்னேற்றத்தை நாம் இணைந்து பயன்படுத்தலாம். (கிரேக்க மாவீரன்) புரோமித்யசைப் போன்றதொரு கண்டுபிடிப்பு ஆற்றலை புவி வெப்பமடைதல் என்ற பேரிடருக்கு எதிராக புவியைக் காப்பதற்கு நாம் பயன்படுத்தலாம்" என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

என்ன சொன்னார் நரேந்திர மோதி?

இந்தக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் பேசினார். 2022ம் ஆண்டு 175 கிகா வாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தித் திறன் என்ற இலக்கை நோக்கி இந்தியா செல்கிறது என்று குறிப்பிட்ட அவர், 2030ம் ஆண்டு வாக்கில் இதனை 450 கிகா வாட் என்ற அளவுக்கு மேம்படுத்த இலக்கு வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் தரப்பட்ட இலக்குகளை இந்தியா தாண்டிச் செல்லவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சூறாவளி.
படக்குறிப்பு,

அமெரிக்காவை இந்த ஆண்டு சூறையாடிய ஒரு சூறாவளியின் தாக்கம்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை அதிபர் டிரம்ப் வெளியேற்றினார் என்றாலும், மாசாசூசெட்ஸ் மாகாண குடியரசுக் கட்சி ஆளுநர் சார்லி பேக்கர், மிஷிகன் மாகாண ஜனநாயக கட்சி ஆளுநர் கிரெட்சன் விட்மர் ஆகியோர் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியதை செய்வதாக குறிப்பிட்டு அறிக்கைகள் அனுப்பியிருந்தனர்.

கார்பன் உமிழ்வற்ற நிலையை அடைய வாடிகன் இலக்கு வைத்திருப்பதாக போப்பாண்டவர் பிரான்சிஸ்கூட தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக