சனி, 12 டிசம்பர், 2020

சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் காலமானார்! அம்மா உணவகத் திட்ட முன்னோடி மனிதநேயர் சுப்பிரமணியன்

Pugazharasi S = GoodReturns Tamil: கோயமுத்தூர்: இன்றைய காலகட்டத்தில் சாதரணமாக ஒரு தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும் என்றால் கூட நாம் 20 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் இன்றும் வெறும் 5 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் கோயமுத்தூர் மக்களுக்கு உணவு வழங்கிய வள்ளல் தான் சாந்தி கியர்ஸ் அமைப்பின் நிறுவனர். 

சொல்லப்போனால் தமிழகத்தின் அம்மா உணவகத்தின் முன்னோடி இவர் என்றே கூறலாம். ஏனெனில் அம்மா உணவகம் எல்லாம் ஆரம்பிக்கும் முன்பே, மக்களுக்காக இப்படி ஒரு மாபெரும் சேவையை வழங்கியவர். அப்படிப்பட்ட சாந்தி கியர்ஸ் பற்றி அறியாமல் இருக்க முடியாது. அதிலும் நீங்கள் கோயமுத்தூர் என்றால் அறியாமல் இருக்க முடியாது. ஏனெனில் இந்த காலத்தில் இப்படியொரு நிறுவனமா? என்று கேட்கும் அளவுக்கும், பிரமிக்கும் அளவுக்கும் உள்ள நிறுவனம். இந்த நிறுவனத்தின் கேன்டீன் மிகப் புகழ் பெற்றது கோவையின் சின்னம் சாந்தி கியர்ஸ் சொல்லப்போனால் தமிழக அரசு கூட அம்மா உணவகத்தை கடந்த 2013ல் தான் செயல்படுத்தியது. ஆனால் இந்த சாந்தி கியர்ஸ் தனது சேவையை கடந்த 2010லேயே தொடங்கி விட்டது. அதிலும் உணவு பொருட்களின் விலை அதிகரித்த வண்ணமே உள்ள நிலையிலும் கூட, சாந்தி கியர்ஸ் கேண்டீனில் வெறும் 5 ரூபாய்க்கு டிபனும், 10 ரூபாய்க்கு மீல்ஸூம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.



மக்களுக்கு தரமான உணவு சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தான் பி சுப்பிரமணியம். சாந்தி சோஷியல் சர்வீசஸ் என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவி, அதன் மூலமே இந்த சாந்தி சோஷியல் சர்வீசஸ் (Shanthi Social Services) கேண்டீனை நடத்தியும் வருகிறது. தரத்திலும், சுவையிலும் உயர்தர சைவ ஹோட்டல்களுக்குச் சவால்விடும் சாந்தி கேன்டீன், சுற்று வட்டார பகுதிகளில் பல இளைஞர்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. இங்கு தரம் மிக அதிகம். ஆனால் விலையோ மிக மிகக் குறைவு தான்.


எல்லாமே விலை குறைவு தான் இந்த கேண்டீனில் டிபன் வகைகள் வெறும் 5 ரூபாய் தான், இதுவே மீல்ஸ் வெறும் 10 ரூபாய் தான். சாதாரணமாக சென்னை போன்ற நகரங்களில் ஒரு காபி 15 ரூபாய் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இங்கு தோசை, உப்புமா, கிச்சடி, பூரி, இட்லி செட் உள்ளிட்ட பல உணவு வகைகள் வெறும் 5 ரூபாய் தான். இது மட்டும் அல்ல இன்னும் பற்பல உணவுகளுக்கு ரூ.5 முதல் 15 ரூபாய்க்குள் தான் விலை.


கோவையின் வரப்பிரசாதம் கோவையின் வரப்பிரசாதமாக கருதப்படும் சாந்தி கியர்ஸ், கோவை சிங்காநல்லூரில் இயங்கி வருகிறது. கோவையில் பணிபுரியும் இளைஞர்கள் பெரும்பாலும் சிங்காநல்லூர் அதை சுற்றியுள்ள பகுதிகளிலேயே வசித்து வருகிறார்கள் எனில், அதற்கு காரணம் இந்த சாந்தி கியர்ஸ் கேண்டீன். மாதம் முழுக்க சாப்பிட்டாலும் கூட 1500 ரூபாயை தாண்டாது பில்

பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒன்று ஒரு புறம் பொருளாதார பிரச்சனை நிலவி வந்தாலும், குடும்பத்தோடு வெளியில் சென்று, வாரத்தில் ஒரு நாளாவது குடும்பத்துடன் உணவருந்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு முறை குடும்பத்துடன் சென்றாலும் 1000 - 2000 ரூபாய் என செலவாகும் நிலையில், சாந்தி கியர்ஸில் குடும்பத்துடன் சென்று மூக்கு பிடிக்க சாப்பிட்டாலும் 100 ரூபாய்க்கும் மேல் சாப்பிட முடியுமா என்பது தெரியவில்லை.

தரம் எப்படி? இப்படி விலைக் குறைவாக உள்ளதே? தரம் எப்படி இருக்கும் என்று கேட்கலாம். ஆனால் இங்கு முழுக்க முழுக்க தரமான உணவுகளை மட்டுமே வழங்கி வருகிறது இந்த சேவை குழுமம். இங்கு ராகி பால், சத்து மாவு பால், கோதுமை பரோட்டா என மிக சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க

ஜிஎஸ்டி இல்லை கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அமல்படுத்திய போது, மற்ற உயர்தர உணவகங்கள் எல்லாம் அதை அப்படியே வாடிக்கையாளர்கள் மீது சுமத்தின. ஆனால் சாந்தி கியர்ஸ் நிறுவனமே வாடிக்கையாளர்களின் ஜிஎஸ்டி வரியை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி பிறகு பல ஹோட்டல்களில் விலை அதிகரிப்பு செய்தாலும், இந்த கேண்டீனில் மட்டும் விலை அதிகரிப்பு செய்யப்படவில்லை. அதோடு மற்ற உணவகங்களில் நீங்கள் செலுத்தும் ஜிஎஸ்டி கட்டணத்திலேயே இங்கு உணவருந்தி விடலாம்.


மருந்து விலையும் குறைவு தான் சாந்தி கியர்ஸ் நிறுவனம் மருத்துவ சேவையிலும் சாதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம் உள்ளது. எம்ஆர்பி-யில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. மேலும் விற்பனை விலை மீதான வரி அறக்கட்டளையால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, அதுமட்டும் அல்ல 15 முதல் 20 கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரியும் உண்டு.

வெளியூர்காரர்களுக்கு சலுகை சாந்தி மருத்துவ ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே, உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, 50 சதவீதத்தும் மேல் விலை குறைவு தான். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் சாந்தி மருத்துவமனையில் மருத்துவருக்கான கட்டணமும் வெறும் 30 ரூபாய் மட்டுமே. இதை பற்றிய முழு விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இரத்த வங்கியும் உண்டு இரத்த வங்கியும் உண்டு டயாலிசிஸ் - முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்பட்டும் வருகிறது. இங்கே, 500 ரூபாய்க்கு மின் மயானம், நாளொன்றிற்கு 10,000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி சென்டர், ரத்த வங்கி, பெட்ரோல்பங்க் என பல சேவைகளை அதிரடியாக செயல்படுத்தி வருகிறது இந்த சேவை நிறுவனம்.

ஓரு புறம் அதிரடியான பல சேவைகளில் ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வருகிறது. இப்படியொரு அக்கறைகொண்ட சாந்தி சோஷியல் சர்வீசஸ் அறக்கட்டளைக்கும், அதை நிறுவியவர் தற்போது நம்முடன் இல்லை என்னும்போது உண்மையில் கண்கலங்கித் தான் போகிறது. இப்படி பட்ட ஒரு நல்ல சேவை மனப்பான்மை கொண்ட சிறந்த தொழிலதிபதிருக்கு கோவை மக்களின் சார்பாக மட்டுமல்லங்க, தமிழ்நாட்டின் சார்பாக ஒரு சல்யூட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக