வெள்ளி, 11 டிசம்பர், 2020

கட்டு கட்டாக பணம்: சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்! .. பொறியாளர் தன்ராஜ்.

மின்னம்பலம் :மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரின் வீட்டில் கட்டுகட்டாகப் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளராக பணியாற்றி வருபவர் தன்ராஜ். நாகை ஆண்டோ சிட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டில் நாகை மற்றும் திருவாரூர் பகுதிகளில் 50 நவீன அரிசி ஆலைகள் இயங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலைகளின் உரிமத்தை புதுப்பிக்க தன்ராஜ் லஞ்சம் பெற்று வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. திருவாரூர் சாமி மடதெருவைச் சேர்ந்தவர் துரைசாமி (58). இவர் தனது ஆலை செயல்பாட்டிற்கான, காற்று மற்றும் நீர் உரிமத்தைப் புதுப்பிக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.இந்நிலையில் ஆலையின் உரிமத்தைப் புதுப்பித்துத் தருவதற்கு 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு தன்ராஜ் துரைசாமியிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த துரைசாமி திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தன்ராஜை பிடிக்கத் திட்டமிட்ட போலீசார் ரசாயனம் தடவிய 40,000 ரூபாய் பணத்தை துரைசாமியிடம் கொடுத்து அதனை தன்ராஜிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். போலீசாரின் அறிவுரையின் பெயரில் துரைசாமி 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருவதாக தன்ராஜிடம் கூறியிருக்கிறார்.

இதையடுத்து நேற்று மாலை துரைசாமியின் அரிசி ஆலைக்கு வந்த பொறியாளர் தன்ராஜ், 40 ஆயிரம் ரூபாயை பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் மற்றும் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாகக் கைது செய்தனர்.

இதையடுத்து நாகை மற்றும் சென்னையில் உள்ள பொறியாளர் தன்ராஜ்க்கு சொந்தமான இரண்டு வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், லஞ்சம் பெற்ற 62 லட்சம் ரூபாய் பணம் கட்டுக் கட்டாக சிக்கியது. மேலும் நகை மற்றும் விலையுயர்ந்த பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிப்பது தொடர்பான வழக்கில், ஊழல் அதிகாரிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால் தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரிசெய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக