வியாழன், 17 டிசம்பர், 2020

தமிழில் அரசாணைகள் இல்லாதது ஏன்?: அரசு பதிலளிக்க உத்தரவு!

தமிழில் அரசாணைகள் இல்லாதது ஏன்?: அரசு பதிலளிக்க உத்தரவு!

minnambalam.com : தமிழக அரசின் அரசாணைகள் தமிழில் வெளியிடாதது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கொருக்குப்பேட்டையில் சேர்ந்த பழனி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் முதல் மொழியாகத் தமிழும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் என இரட்டை மொழி கொள்கை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தொன்மையான தமிழ்மொழி அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறது.   தமிழக அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் என அனைத்தும் ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்டுச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுகிறது.

 சட்டமன்றத்தில் நிதிநிலை உள்ளிட்ட அறிக்கைகள் தமிழில் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிலையில், அதே நடைமுறையை அரசாணைகள் சுற்றறிக்கை, கடிதங்கள், தயாரிக்கும்போது பின்பற்றுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தமிழக டிஜிபி அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் பிறப்பித்த உத்தரவில், கடிதங்களைத் தமிழில் தான் அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார் என்றும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அதுபோன்று அரசாணைகள், சுற்றறிக்கைகள் ஆகியவற்றைத் தமிழில் வெளியிட வேண்டும் என்று அரசுக்கு அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த மனுவை பரிசீலித்து உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசாணைகள் தமிழ் மொழியில் ஏன் வெளியிடப்படுவதில்லை என்பது தொடர்பாக அடுத்த மார்ச் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக வளர்ச்சித் துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளனர்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக