ஞாயிறு, 6 டிசம்பர், 2020

விவசாயிகள் போராடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்விவசாயிகள் போராட்டத்துக்கு ஐ.நா ஆதரவு: பின்னணி என்ன?

 விவசாயிகள் போராட்டத்துக்கு ஐ.நா ஆதரவு: பின்னணி என்ன?

minnambalam : டெல்லியில் நடக்கும் தொடர் விவசாயிகள் போராட்டம், மோடி அரசுக்கு உள்நாட்டு அளவில் மட்டுமல்ல; வெளிநாட்டு அளவிலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.   மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் போலீஸாரின் தடுப்புகளை மீறி டெல்லிக்குள் லட்சக்கணக்கான அளவில் நுழைந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரீடு டெல்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஐ.நா பொதுச் செயலாளரும் போராடும் டெல்லி விவசாயிகளுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.    “அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு. அதிகாரிகள் அவர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று ஐ.நா பொதுச்செயலாளர் அண்டானியா குட்ரஸின் செய்தித் தொடர்பாளர் இந்தியாவில் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த கனடா நாட்டு பிரதமரின் கருத்தைக் கண்டிப்பதாக இந்திய நாட்டுக்கான கனடாவின் ஹை கமிஷனரை நேரில் அழைத்து இந்திய வெளியுறவுத் துறை தனது கண்டனத்தை தெரிவித்தது. வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சில வெளிநாட்டுத் தலைவர்களின் தவறான தகவல்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதுபோன்ற கருத்துகள் தேவையற்றவை. குறிப்பாக ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்களிலும் அரசியலமைப்பிலும் தலையிடும்படியான இந்தச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாத குறுக்கீட்டாக கருதப்படும். இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், இருதரப்பு உறவுகளில் சேதத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

இந்த நிலையில்தான் ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், “விவசாயிகள் போராடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் சீக்கிய அமைப்புகள் அங்கே தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டங்களை அந்தந்த நாடுகளின் தலைமைகளுக்குக் கொண்டு சென்று இதுதொடர்பாக வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்குமாறு லாபி செய்து வருகின்றன. இதன் எதிரொலியாகவே கனடா பிரதமரின் ஆதரவு, ஐ.நா பொதுச் செயலாளரின் ஆதரவு என்று விவசாயிகளின் போராட்டங்களுக்கு சர்வதேச ஆதரவு பெருகிவருகிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக