வியாழன், 10 டிசம்பர், 2020

சித்ராவின் மரணத்தில் ..... போயும் போயும் இப்படி ஒருவனுக்காக நீ இறந்திருக்க கூடாது

  Neelamegam S
: சித்ராவின் மரணத்தில் இத்தனை பேருக்கு பங்குண்டா.?! இதோ தற்கொலைக்கு உண்மை காரணம்.?! - #செய்திப்புனல் சானலின் அதிகாரப்பக்கத்தில் நான் எழுதியது. நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தான் தற்போது பலராலும் பேசப்படுகின்ற பரபரப்பான விஷயமாக உள்ளது.
மிகவும் தைரியமாக, தெளிவாக சிந்திக்க கூடிய பெண் சித்ரா எதற்காக அவர் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத மர்மமாக உள்ளது. நேற்று சித்ராவின் தோழி ரேகா நாயர் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சித்ராவின் காதலன் ஹேமந்த் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
ஹேமந்த் அவரது தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் எப்படி இருந்தார் என்பதை விட, சித்ராவுடனான உறவில் அவர் எப்படி இருந்தார் என்பதை ரேகா நாயர் கூறியது தான் தற்போது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். பெரும்பாலும் காதலிக்கும் பல பெண்களும் சந்திக்கும் விஷயம் தான் இது. ஆண் நண்பரால் உரிமை, காதல், பொறாமை என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்படும் அதிகார வன்முறைகள்.
ஹேமந்த் சித்ராவின் பல சுதந்திரங்களுக்கு தடையாக இருந்துள்ளார். குறிப்பாக அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் போன்கால், வீடியோ கால் என்று எங்கே இருக்கிறாய்? என்ன செய்கிறாய்? யாருடன் இருக்கிறாய்? என்று போன் கால் மூலமாக அவரை எப்பொழுதும் பின் தொடர்ந்துள்ளார்.
ஒரு பெண்ணால், இது போன்று இரு ஜோடி கண்கள் தன்னை கவனிப்பது போன்ற உணர்வோடு எப்பொழுதும் நிம்மதியாக இருக்க முடியாது. எப்பொழுதும் காதலனோடு பேசிக்கொண்டே இருப்பதும் முடியாது. அதிலும், சினிமாத்துறையில் சித்ரா மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர். அவர் ஆடை விஷயம் மற்றும் பட காட்சிகள் என்று அனைத்திலும் ஹேமந்த் குடும்பம் தலையிட்டு அவருக்கு குடைச்சலை கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டு காலமாகவே, அவரை பழைய சித்ராவாக பார்க்கவில்லை என்று அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர்.
அதிலும், நிச்சயதார்த்தத்திற்கு பின்னான சித்ரா எப்பொழுதும் பரபரப்பாக போனும், கையுமாகவே காணப்பட்டதாகவும் ஷூட்டில் ஸ்பாட்டில் நடிக்கும் நேரம் போக மற்ற நேரங்கள் மிகவும் டல்லாக போன் பேசிக்கொண்டும், ஹேமந்த்துடன் சண்டை போட்டுக்கொண்டும் இருப்பர் என்று நேற்று ரேகா நாயர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரேகா நாயரின் பேட்டியில் அவர், போயும் போயும் இப்படி ஒருவனுக்காக நீ இறந்திருக்க கூடாது. இவன் இல்லன்னா இன்னொருத்தன்., சித்ரா ஏன் இப்படி பண்ணினா என்று ஆவேசமாக தெரிவித்தார். இன்று பலரும், இதை தான் கூறுகின்றனர். அனைத்திற்கும் தற்கொலை ஒரு தீர்வு இல்லை. பிடிக்கவில்லை என்றால் விலகி இருக்கலாம் என்று இறந்த பெண்ணிற்கு அறிவுரை கூறும் பலரை சமூக வலைத்தளத்தில் காணலாம்.
பிடிக்கவில்லை., ஒத்துவரவில்லை என்று சித்ரா விலகி வேறொரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தால் எத்தனை பேர் பாராட்டுவார்கள்? இன்று சித்ராவை பிடிக்கலைன்னா விலகிருக்கலாம் என்று கூறும் இதே மனிதர்கள் வேறொரு வாழ்வை அவர் தேர்ந்தெடுத்தால் அவரது நடத்தை குறித்து பல வாதங்களை எழுப்பி இருப்பார்கள்.
அதற்கு உதாரணம் நடிகை நயன்தாரா. தனக்கு ஒத்துவராத நபரை விலக்கிவிட்டு, பிடித்தவருடன் வாழ முடிவெடுத்தவர் அவர். தற்கொலை செய்து கொள்ளாமல் தைரியமாய் வாழும் அவரை எத்தனை பேர் பாராட்டினீர்கள்.? அல்லது நடிகை வனிதா விஜயகுமாரை தான் எத்தனை பேர் பாராட்டினீர்கள்.? சக நடிகரான ராதாரவியே சீதை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்ததற்கு இழிவாக பேசியவர் தானே.? என்ன தான் பெண்ணியம், சமுதாயம் முன்னேறி விட்டது என்று கூறினாலும் இது போன்ற விஷயங்கள் எலைட் ஆட்களையும் காவு வாங்கி தான் விடுகிறது.
சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது காதலன் அல்ல. இந்த உறவில் இருந்து விலகி வந்தால் சமுதாயத்தின் கேள்விகளுக்கு என்ன பதில் என்ற பயம் தான் அவரை கொலை செய்து இருக்கிறது.
இந்த உணர்வு கொலைகளுக்கும், பெண் மீது ஆணால் ஏவப்படும் வன்முறைகள் எல்லாம் பெரியாரோ, பாரதியாரோ பெண்ணியம் பேசுவதால் முடிவுக்கு வந்துவிடாது. இது அன்றாட வாழ்வியல் பிரச்சனை. காதலனோ, கணவனோ, தந்தையோ, தாயோ ஒரு தனி நபரின் வாழ்வை குறிப்பாக ஒரு பெண்ணின் வாழ்வில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதை எப்பொழுது உணர்கிறோமோ., இது போன்ற உணர்வு கொலைகள் அப்பொழுது தான் முடிவுக்கு வரும்.
இப்போது கூட, எனது கிராமத்தில் பெண்களை வீட்டை விட்டே வெளியே அனுப்பக்கூடாது என்று கூறுவது இதற்காக தான் என்று சித்ராவின் மரணம் குறித்து விமர்சிக்கும் ஆட்களை நான் பார்க்கிறேன். இவர்களுக்கு தாங்கள் நிகழ்த்தும் அதிகார வன்முறைகள் குறித்து எப்பொழுது தான் புரியும்? என்று கணத்த மனதுடன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக