திங்கள், 21 டிசம்பர், 2020

அதானி நிறுவனத்துக்குப் பயிற்சியா?: மின்துறை அமைச்சர் தங்கமணி பதில்!

minnambalam.com :தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களைத் தனியார் மூலம் ஒப்பந்த ஊழியர்களை நிரப்புவது தொடர்பான ஒப்பந்தப் புள்ளிகளைத் தேர்வு செய்வதற்கு மின்வாரியம் ஒப்புதல் அளித்து, அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதன் மூலம் ஐடிஐ முடித்தவர்கள் மின் வாரியத்தில் வயர்மேன் வேலைக்கு நேரடியாகச் சேர முடியாது என்று கூறப்பட்டது.எனவே இதற்கு எதிர்க்கட்சிகளும், மின்துறை தொழிற்சங்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், “புதிய துணை மின் நிலையங்களைத் தனியாருக்கு 2 ஆண்டுக்கால ஒப்பந்தத்தில் தாரைவார்த்துள்ள ஆட்சியாளர்கள், தமிழகம் முழுவதும் உள்ள 650 மின் விநியோக உட்கோட்டங்களில் உள்ள பணிகளுக்கு, அவசர அவசரமாக ஒரு கோட்டத்திற்கு 1 கோடியே 80 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய்க்கு உள்நோக்கத்துடன் ஒப்பந்தம் போடுவது, மின்சாரத் தாக்குதலுக்கு ஒப்பான அதிர்ச்சியை அளிக்கிறது.

மின்வாரியத்தில் ஏற்கெனவே பணியில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்ட 380 ரூபாய் தினக்கூலியைத் தர மறுக்கும் தமிழக அரசு, தனியாரிடம் தினக்கூலிக்கு அளிக்க வேண்டிய தொகை ரூ.412 என அதிகப்படுத்தி ஒப்பந்தம் போடவேண்டிய அவசியம் என்ன? தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவில் மண் அள்ளிப்போடும் இதுபோன்ற செயல் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று, கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பும், சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்திலும் ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த உத்தரவை திரும்ப பெறுவதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், “மின்சார வாரியத்தை தனியார்மயம் ஆக்கிவிடுவார்கள் என்று கூறுகின்றனர். ஆனால் எந்த சூழ்நிலையிலும் மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்படாது. இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தேன். 2 மணி நேரமாகக் காத்திருந்தும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. விபத்து இல்லாத, தடை இல்லாத மின் விநியோகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக 50 சதவிகித காலி பணியிடங்கள் உள்ள இடத்தில், அங்கிருக்கும் அப்பகுதியில் இருக்கும் ஆட்களை வைத்து பணியை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தோம். இதைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றாலும் அன்று பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “கேங்மேன் தேர்வுக்கு 5000 பேரை எடுப்பதாக அறிவித்திருந்தோம். ஆனால் முதல்வர் உத்தரவின் பேரில் அது 10,000 இடமாக அதிகரிக்கப்பட்டது. இதற்காகத் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றம் சென்று தடை வாங்கியுள்ளனர். தொழிற்சங்கங்கள் இந்த வழக்கை திரும்பப்பெற்றார்கள் என்றால் இந்த வாரத்திலேயே 10,000 பேருக்கு பணிகள் வழங்கப்படும். ஐடிஐ படித்தவர்கள் 2,900 பேரை எடுக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டார்.

மேலும், “தொழிற்சங்கங்கள் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். தனியார்மயமாக்க அதானி நிறுவனத்துக்குப் பயிற்சி கொடுத்து வருகிறோம் என்று பரப்புகின்றனர். அதானிக்குத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து ஒரு நபர் மட்டுமே சோலார் பயிற்சி எடுத்து வருகிறார். இது தனியார்மயமாக்கும் நோக்கமல்ல. ரூ.40,000 செலுத்தினால் யார் வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம்” என்று கூறியுள்ளார்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக