வெள்ளி, 18 டிசம்பர், 2020

சூத்திரர்கள் புரிந்து கொள்வதில்லை’ –பிரக்யா சிங் தாக்கூர்:.. சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.பி

BBC :பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் நால்வர்ணம் குறித்து தெரிவித்த கருத்தால் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோரில் நடந்த ஒரு நிகழ்வில், இந்து மத நூல்களில் உள்ள நான்கு வர்ணங்கள் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) குறித்து பேசியபோது அவர் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. “ஒரு சத்திரியரை சத்திரியர் என்று அழைத்தால் அவர் தவறாக நினைப்பதில்லை; ஒரு பிராமணரை பிராமணர் என்று அழைத்தால் அவர் தவறாக நினைப்பதில்லை; ஒரு வைசியரை வைசியர் என்று அழைத்தால் அவரும் தவறாக நினைப்பதில்லை; ஆனால் ஒரு சூத்திரரை சூத்திரர் என்று அழைத்தால் அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் புரிந்து கொள்வதில்லை,” என்று பிரக்யா தாக்கூர் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து அவர் இதற்கு முன்னரும் செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.  செப்டம்பர் 2008ல் மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பிரக்யா சிங் தாக்கூர். ஏப்ரல் 2017 முதல் அவர் பிணையில் வெளியே உள்ளார்.


2016-இல் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில், சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மீது மகாராஷ்டிரா திட்டமிடப்பட்ட குற்றங்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் பதிவான குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டன.

எனினும், மும்பையில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அவர்களைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரித்து வருகிறது. இவர் 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கை வீழ்த்தி 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

“நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்”

நாதுராம் கோட்சே
படக்குறிப்பு, நாதுராம் கோட்சே

கடந்த ஆண்டு மக்களவையில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் அவர் மகாத்மா காந்தியை கொலை செய்த “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்” என்று குறிப்பிட்டது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

நவம்பர் 2019இல் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய தி.மு.க மக்களவை உறுப்பினர் ஆ. ராசா, “நாதுராம் கோட்சே அவர் கொண்டிருந்த சித்தாந்தத்தின் காரணமாக மகாத்மா காந்தியின் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்தார். அதனால்தான் அவரைக் கொல்வதற்கு முடிவெடுத்தார்,” என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட பிரக்யா சிங் தாக்கூர், “தேசபக்தரை நீங்கள் உதாரணமாக குறிப்பிடக்கூடாது” என்று பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் மக்களவையிலேயே அவர் அதற்கு மன்னிப்பு கோரினார்.

“அதற்கு அவர் மன்னிப்பு கோரி இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நான் என்றும் அவரை மன்னிக்கப் போவதில்லை,” என்று பிரதமர் நரேந்திர மோதி அந்த சமயத்தில் தெரிவித்திருந்தார்.


மக்களவைத் தேர்தல் நடந்தபோது, போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நேரத்திலும் பிரக்யா சிங் தாக்கூர், ‘நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘மேற்கு வங்கத்தில் இந்து ராஜ்ஜியம் அமையும்’

மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ற வாகனம் சமீபத்தில் தாக்குதலுக்கு உள்ளானது. அதுகுறித்து சீஹோரில் ஞாயிறன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியை பிரக்யா சிங் தாக்கூர் விமர்சித்தார்.

“இது இந்தியா பாகிஸ்தான் அல்ல என்பதை தற்போது மமதா பானர்ஜி புரிந்து கொண்டுள்ளார். இந்தியாவை பாதுகாக்க இந்துக்கள் தயாராக உள்ளனர். அவர்கள் மம்தாவுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெறும். மேற்கு வங்கத்தில் இந்து ராஜ்ஜியம் அமையும் என்று செய்தியாளர்களிடம் பிரக்யா தாக்கூர் தெரிவித்தார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

“தனது ஆட்சிக் காலம் முடியப் போகிறது என்பதை நினைத்து மமதா பானர்ஜி வெறுப்பில் இருக்கிறார்,” என்று பிரக்யா தாக்கூர் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக