ஞாயிறு, 20 டிசம்பர், 2020

அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

நிலத்தில் எதைப் பயிரிட வேண்டும்; எந்த உரத்தை போட வேண்டும், என்ன விலையைத் தீர்மானிக்க வேண்டும் போன்ற அனைத்து உரிமைகளையும் விவசாயிகளிடமிருந்து பறித்து கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுப்பதே வேளாண் திருத்தச் சட்டம்.

 vinavu.com  - வினவு செய்திப் பிரிவு : ஆயிரம் ஆயிரமாய் அணிவகுத்து இந்திய தலைநகர் டெல்லியில் இலட்சக்கணக்கான  விவசாயிகள் முற்றுகையிட்டு நிற்கின்றனர். பல்லாயிரக்கணக்கான  ட்ராக்டர் வாகனங்களில் அணி அணியாய் விவசாயிகள் டெல்லியை நோக்கி போர்ப்பரணி பாடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி மோடி அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண்மை திருத்த சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைத்து விடும் என்று மிகப்பெரும் அச்ச உணர்வு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உலகமயத்தின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் இந்திய விவசாயிகளின் தலையில் பேரிடியாக இந்த சட்டம் அமைந்துள்ளது.

உலகமயம் – தனியார்மயம் – தாராளமயக் கொள்கைகளால் விவசாயம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இடுபொருள்கள் விலை உயர்வு, விவசாயத்துறைக்கு அளித்துவந்த அரசு மானியங்கள் அளவை குறைப்பது,  இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் விளைபொருள் வீழ்ச்சி, வங்கிக்கடன் மறுப்பு, விவசாயத் துறைக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு நிதியை குறைப்பது. இவற்றின் விளைவாக விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகி விட்டது.

கடன் நெருக்கடி, வேலையின்மை, பட்டினிச் சாவுகள் – இதுவே இன்றைய கிராமங்களின் அவல வாழ்வு. கடன் நெருக்கடி தாங்காமல் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆறு ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2019-ல் மட்டும் 10 ஆயிரத்து 281 விவசாயிகளின் தற்கொலை மரணம் நிகழ்ந்துள்ளன. 30 நிமிடத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

மூன்று வேளாண்மை அவசரச் சட்டங்களை 2020, ஜூன் மாதம் மோடி அரசு பிறப்பித்தது. 1955 ஆண்டு உருவாக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தங்களை செய்து ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து கொண்டுவரப்பட்ட இந்த அவசரச் சட்டம் யாருடைய நலனுக்காக? இந்த சட்டத்தால் ஆதாயம் அடையப் போவது யார்? இந்திய விவசாயத்தில் வேளாண் சட்டங்கள் 2020 அமுல்படுத்துவதால் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன?

விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பு சட்டம்) 2020.

இச்சட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்படுகிறது என்று கூறப்படுகிறது. விவசாய உற்பத்திப் பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்துகொண்டு நல்ல விலையை பெறுவார்கள் என்று இச்சட்டம் கூறுகிறது.

இந்தச் சட்டங்கள் தனியார் முதலீடுகளை கொண்டுவரும் என்கிறது மோடி அரசு. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கரங்களில் விவசாயத்தை மொத்தமாக ஒப்படைப்பதற்கான ஒரு ஏற்பாடுதான் இச்சட்டம். சட்டம் நாடாளுமன்ற அவையில் நிறைவேறுவதற்கு முன்பாகவே மோடியின் பேரன்பை பெற்ற கார்ப்பரேட் முதலாளி அதானி குழுமம் உணவு கொள்முதல் நிலையங்களை பிரம்மாண்டமான முறையில் கட்டி அமைத்ததன் மர்மம் என்ன?

அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்திய விவசாயத்தை காவு கொடுக்க கார்ப்பரேட் நலன் காக்கும் மோடி அரசு முடிவு செய்துவிட்டது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளின் பின்னே அம்பானி, அதானி கார்ப்பரேட் குழும முதலாளித்துவ கொள்ளைக் கும்பலின் நலன் ஒளிந்திருக்கிறது.

வயலில் பயிர்கள் வளரும் நிலையிலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் விலையை தீர்மானித்து விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும். நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு தானியங்களை அறுவடை செய்து கொள்ளும். ஆனால் அதைவிட பலமடங்கு கொள்ளை லாபத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்றுக் கொள்ளும்.

நிலம் மட்டுமே விவசாயிகளிடம் இருக்கும்.  நிலத்தில் எதைப் பயிரிட வேண்டும்; எந்த உரங்களை,  எந்த பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை கார்ப்பரேட்டுகளே தீர்மானிக்கும். விவசாய கருவிகள், இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் அனைத்தையும்  கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவெடுக்கும். தீர்மானிக்கப்பட்ட விலைப்படி,  உற்பத்தியும் கணக்கிட்டு, செலவுகளை கழித்துக்கொண்டு மீதி உள்ளதை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கும்.

உற்பத்திப் பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெறுகின்ற பொழுது, அதற்கான காலம், விலை, விளைபொருட்களின் தரம் இவற்றை பற்றி மூன்றாவது நபர் சான்றிதழ் வழங்குவார்கள். தரம் இல்லை என்று உற்பத்திப் பொருள்கள் கொள்முதல் செய்வதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மறுப்பதற்கான வாய்ப்பு இதில் உள்ளது.

இயற்கையின் சீற்றங்கள் – வறட்சி,  வெள்ளம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொறுப்பேற்காது. அரசாங்கம் வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் வழங்காது. தரக் கட்டுப்பாடு என்ற பெயரில் உற்பத்திப் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்துவது நடக்கும்;  தரசான்றிதழ் வழங்கினால் மட்டுமே நிறுவனங்கள் கொள்முதல் செய்யும்.

உற்பத்திப் பொருட்களை குறைவாக மதிப்பிட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்கள். விவசாயிகள் நஷ்டம் அடைந்து கார்ப்பரேட் நிறுவனங்களுடன் வாங்கிய முன் தொகைக்கு ஈடு செய்ய இயலாமல் தங்களது வாழ்வாதாரமான நிலங்களை இழந்து நிற்கும் கொடுமைக்கு தள்ளப்படுவார்கள்.

விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப் படுத்துதல்) சட்டம்2020

உற்பத்திப் பொருளை வாங்குவதிலும் விற்பதிலும் விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை இந்த சட்டம் வழங்குவதாக மோடி அரசு கூறுகிறது. இலாபகரமான விலை விவசாயிகளுக்கு கிடைக்கும்.  உற்பத்திப் பொருள் விற்பனை தடை இல்லாமல் நடைபெறும். இத்திட்டம் நடைமுறைப்படுத்தும்போது ஒரு சில வினாடிகளில் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் உள்ளவருக்கு இங்குள்ள விளைபொருள் உரிமையாகும்.

மின்னணு வர்த்தகத்தின் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளூரில் சேமிப்புக் கிடங்கை வைத்துவிட்டு ஆன்லைன் மூலமாக பிற நாடுகளுக்கு விற்று விடுவார்கள். தொடர்ந்து பொருள்கள் ஏற்றுமதி ஆகிவிடும்.

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், மண்ணின் மைந்தர்களுக்கு கையளவு உணவு பொருள் கூட கிடைக்காமல் போகும். கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவுப் பொருட்களை பல மடங்கு விலை ஏற்றி கொள்ளை அடிப்பார்கள். இதன் விளைவாக உணவு பஞ்சமும் பட்டினிச் சாவுகளும் நிகழ இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற வர்த்தக சுதந்திரத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே இந்தியா, ஒரே விவசாயம்,  ஒரே சந்தை; இந்த லட்சியத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகிறது மோடி அரசு.

நாட்டின் செல்வவளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது போதாதென்று மிச்சமிருக்கும் விவசாயத்தையும் அவர்களது கரங்களில் ஒப்படைக்கும் ஏற்பாடுதான் இந்த புதிய வேளாண் சட்டங்கள்.

60 சதவீதத்துக்கும் மேலான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். இந்திய அரசின் கணக்குப்படி சிறு மற்றும் குறு விவசாயிகளின் எண்ணிக்கை 86 விழுக்காடு, பணக்கார விவசாயிகளின் எண்ணிக்கை 14 விழுக்காடு, இந்திய வேளாண்மை துறையின் கணக்கெடுப்பின்படி குறு விவசாயிகள் ஒன்னேகால் ஏக்கர் முதல் 2  -1/2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளனர். சிறிய விவசாயிகள் இரண்டரை ஏக்கரில் இருந்து 5 ஏக்கர் நிலத்தைசொந்தமாக வைத்துள்ளனர். நடுத்தர விவசாயிகள் பத்து ஏக்கரில் இருந்து 25 ஏக்கர் வரை வைத்து உள்ளனர். விவசாயிகளின் மொத்த எண்ணிக்கையில் 86 விழுக்காடு இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

மோடி அரசு கொண்டு வந்துள்ள இந்த மூன்று வேளாண்மை திருத்தச் சட்டங்களும் அனைத்து விவசாயிகளையும், கூலி ஏழை உழவர்களையும், ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கக் கூடியது. இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். விவசாயிகளுடைய ஒவ்வொரு வருமானமும் கணக்கிடப்பட்டு வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.

வேளாண் திருத்த சட்டங்கள் அரசியல் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாநில உரிமைக்கு வேட்டு வைக்கக் கூடியவை. கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானவை.

கார்ப்பரேட் காவி பாசிசத்தை அமல்படுத்தும் மோடி கும்பலுக்கு கணக்கின்றி நிதி ஆதாரத்தையும் நன்கொடைகளையும் வாரி வழங்குகின்றன கார்ப்பரேட் அம்பானி, அதானி கும்பல். அதற்கு நன்றிக் கடனாக விவசாயத்தை முற்றிலுமாக கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பது என்பதே மோடி அரசு கொண்டுவந்திருக்கும் இச்சட்டங்களின் நோக்கம்.

ஆட்சியாளர்கள் தங்களது அகண்ட பாரத கனவை நிறைவேற்ற, மாநில உரிமைகளைப் பறித்து,  ஒரே நாடு என்கின்ற ஒற்றை இந்தியாவை உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டு இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரோம் நகர் பற்றி எரிகின்ற பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்ததாக சொல்வார்கள். நாட்டின் தலைமை அமைச்சர் மோடி அலங்காரங்களோடு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்கிறார். உறைய வைக்கும் கடும் குளிரிலும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்.  கார்ப்பரேட் நிறுவனங்கள் வீசி எறியும் எலும்புத் துண்டை கவ்விக்கொண்டு சில ஊடகங்கள் மாபெரும் விவசாயிகளுடைய எழுச்சியை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

டெல்லி தலைநகரை அதிர வைத்துக் கொண்டிருக்கும் போராட்டம், பஞ்சாப், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் உரிமையை வென்றெடுக்கும் போராட்டம் மட்டுமல்ல, இந்திய துணை கண்டத்தின் அனைத்து விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை காப்பதற்கான போராட்டம். அனைத்து மாநில விவசாயிகளும் ஓரணியில் போராட்டக் களத்தில் நின்றால், ஆட்சியாளர்களின் ஆணவத்தை அடக்கி வெற்றியை  நோக்கி இந்தப் போராட்டம் செல்லும்.

வரலாற்றின் திசையை மாற்றும் வல்லமை கொண்டவர்கள் இந்திய விவசாயிகள்.

டெல்லி தலைநகர் இதுவரை கண்டும் கேட்டிராத போராட்டக் களத்தை சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இறுமாப்போடு இருக்கும் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்கிறது விவசாயிகளின் போராட்டம். மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால் பாசிஸ்டுகள் படு தோல்வி அடைவது திண்ணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக