வியாழன், 3 டிசம்பர், 2020

இலங்கையில் புரேவி புயல்- யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறையில் மிக மோசமான சேதம்!

Mathivanan Maran - /tamil.oneindia.com/ யாழ்ப்பாணம்: இலங்கையில் பேயாட்டம் போட்டு கரையை கடந்த புரேவி புயல் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் புரேவி புயலால் இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே நேற்று இரவு புரேவி புயல் கரையை கடந்தது. இலங்கையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முல்லைத்தீவை ஊடறுத்து புயல் கரையை கடந்துள்ளது.

இந்த புயல் தற்போது மன்னார்வளைகுடாவுக்குள் நுழைந்து பாம்பனை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புரேவி புயல் கரையை கடந்த போது மணிக்கு 80கி.மீ. முதல் 100 கி.மீ. வரை பலத்த சூறாவளி காற்று வீசியது. பாம்பனை நெருங்கிய புரேவி புயல்- பல மாவட்டங்களில் கனமழை- இன்று இரவு அல்லது அதிகாலை கரையை கடக்கிறது இப்புயலால் இலங்கையின் பல பகுதிகளில் 20 செ.மீ மழை பதிவாகி இருக்கிறதாம். இந்த புரேவி புயல் முழுவதும் தமிழரின் தாயகப் பகுதிக்குள்தான் கரையை கடந்தது. இதனால் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னர், கிளிநோச்சி மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளில் நேற்று முதலே பெரும் சேதங்கள் ஏற்பட தொடங்கிவிட்டன. எங்கு திரும்பினாலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல கிராமங்களில் கடல்நீர் உள்ளே புகுந்துள்ளது. யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் இந்த புரேவி புயலால் மீண்டும் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்ல வேண்டிய துயரத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னமும் முழுமையான சேத விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக