செவ்வாய், 1 டிசம்பர், 2020

பஞ்சாப், அம்ரிஸ்டர் அருகே ரயில் பாதை மறிக்கும் விவசாயிகள் – பாரத் பந்த் போராட்டம்

சாய்நாத்: பஞ்சாப், அம்ரிஸ்டர் அருகே ரயில் பாதை மறிக்கும் விவசாயிகள் – பாரத் பந்த் போராட்டம்! அடுத்தது அரசு கொள்முதல் நிலையங்கள் குறித்த பிரச்சனை. அரசு கொள்முதல் நிலையங்கள் எப்படி சித்தரிக்கப்படுகின்றன.? விவசாயத்தை முன்னேற விடாமல் தடுக்கின்ற ஒரு மிகப்பெரிய தீய சக்தியாக திட்டமிட்டே இவை சித்தரிக்கப் படுகின்றன. அரசு கொள்முதல் நிலையங்கள் ஏன் ஏற்படுத்தப்பட்டன? விவசாயிகளின் மீது கந்துவட்டிக்காரர்கள் – கமிஷன் மண்டிகாரர்களும் மிகப்பெரிய வியாபாரிகளும் செலுத்தி வந்த ஆதிக்கத்தை ஏகபோகத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயத்துறையில் அரசு கொள்முதல் நிலையங்கள் இருப்பதைப் போல, மற்ற துறைகளில் என்ன இருக்கின்றன? கல்வித்துறையில் அரசுப் பள்ளிகள் தான் அரசு கொள்முதல் நிலையத்துக்கு இணையான நிறுவனங்கள். அரசுப் பள்ளிகளில் கூடத்தான் ஏகப்பட்ட குறைகள் இருக்கின்றன. ஆனால் அவை தான் கோடிக்கணக்கான ஏழைப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கான வாய்ப்பையே வழங்குகின்றன. தனியார் பள்ளிகளில் விதவிதமாக இருக்கின்றன. எதில் வேண்டுமானாலும் உங்கள் பிள்ளையைச் சேர்க்கலாம் என்று தனியார் கல்வியின் புகழ் பாடுகிறார்கள். ஏழைப் பிள்ளைகள் தனியார் பள்ளிகளுக்கு போக முடியுமா?
ஆரம்ப சுகாதார நிலையங்களும் அரசு மருத்துவமனைகளும் தான் சுகாதாரத்துறைக்கான கொள்முதல் நிலையங்கள். மோடி அரசு விவசாய கொள்முதல் நிலையங்களில் மட்டும் கை வைக்கவில்லை. நினைவிருக்கிறதா? கொரோனாவுக்கு சற்று முன்னர் மாவட்ட அரசு மருத்துவமனைகளை எல்லாம் தனியார் மயத்தை நோக்கித் தள்ளும் திட்டத்தை அரசு முன்வைத்தது.
கொள்முதல் நிலையங்களில் ஏகப்பட்ட குறைகள் இருக்கின்றன என்பது உண்மை. ஆனால் அவைதான் வெளிச்சந்தையில் விவசாயிக்கு கிடைக்கக்கூடிய விலையைவிட சற்றுக் கூடுதலான, நியாயமான விலையை விவசாயிகளுக்கு வழங்குகின்றன. அரசு கொள்முதல் காரணமாகத்தான் விவசாயம் கெட்டுவிட்டது என்று சொல்வது ஒரு நகைக்கத்தக்க கூற்று. ஏனென்றால் நாட்டில் நடக்கும் மொத்த விவசாய கொள்முதலில் ஆகப் பெரும்பான்மையான பகுதி அரசு கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே, தனியார் துறையில் தான் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை எப்படி விற்கிறார்கள் என்று கிராமப்புறங்களை பற்றியும் விவசாயத்தைப் பற்றியும் கொஞ்சமாவது அறிவு உள்ளவர்களுக்குத்தான் தெரியும். விளைபொருட்கள் களத்து மேட்டிலேயே விற்பனை செய்யப்பட்டு விடுகின்றன. விவசாயி யாரிடம் கடன் பெற்று இருக்கிறானோ, அந்த கந்துவட்டிக்காரனும் கமிஷன் மண்டிக்காரனும் அந்தக் கணமே விற்ற காசை வசூல் செய்துகொண்டு போய்விடுகிறான்.
ஒரிசா மாநிலத்தின் வளமான பகுதியான கலஹந்தியில் என்ன நடக்கிறது? அந்த மாவட்டத்தின் விவசாயி, 2023-இல் என்ன விளைவிக்கப் போகிறானோ அந்த விளைச்சலை இன்றே, அதாவது 2020-இலேயே அடமானம் வைத்துவிட்டான். ஏனென்றால் நிகழ்காலத்தில் (2020 இல்) அவனது குடும்பம் பசியாற வேண்டுமென்றால், எதிர்கால (2023) உழைப்பின் விளைபொருளை இப்போதே அவன் அடமானம் வைத்தாக வேண்டும். விவசாயிகளின் மீது தனியார் முதலாளிகள் இத்தகைய கோரப்பிடியை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் எதார்த்த நிலைமை.
விவசாயத்தில் அரசு கொள்முதல் நிலையங்களை ஒழிப்பதற்கும் மருத்துவத்துறையில் அரசு மருத்துவமனைகளில் அழிப்பதற்கும் கல்வித்துறையில் அரசு பள்ளிகளை ஒழிப்பதற்கும் ஒரு மிக முக்கியமான வேறுபாடு இருக்கிறது.
அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் ஆகியவையெல்லாம் பொதுத்துறைகள். ஆனால் விவசாயம் என்பது பொதுத்துறை அல்ல என்று பல அறிவாளிகளுக்கு புரிவதில்லை. இந்த நாட்டில் ஆகப்பெரிய தனியார் துறையே விவசாயம்தான். இந்த அரசாங்கம் தனியார்மயமாக்குகிறது என்று சொல்வது சரியல்ல, தனியார் துறையை கார்ப்பரேட் மயமாக்குகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு 10,000 கமிஷன் மண்டி காரர்கள் இருக்கும் இடத்தில், கார்ப்பரேட்மயமான பின்னால் ஐந்து கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் இருக்கும். ஒரு கமிசன் மண்டிக்காரனிடம் விவசாயி கொஞ்சம் பேரம் பேச முடியும். ஐந்து ஏகபோக நிறுவனங்களுக்கு எதிராக ஒரு எளிய விவசாயிக்கு என்ன பேரம் பேசும் திறன் இருக்க முடியும்? இவர்களால் கட்டுப்படுத்தப்படும் சந்தையை எதிர்த்து ஒரு விவசாயி எப்படி போராட முடியும்?
கடந்த 30 ஆண்டுகளில் மெல்ல மெல்ல விவசாயம் அழிக்கப்பட்டு வரும் நிகழ்ச்சிப் போக்கின் தொடர்ச்சிதான் இன்றைக்கு மோடி அரசு கொண்டு வந்திருக்கின்ற இந்த சட்டங்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இதற்கு முன்னால் என்ன நிலைமை? அரசாங்கங்களே அரசு கொள்முதலை எப்படி ஒழித்துக் கட்டி வருகின்றன என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் மகாராட்டிர அரசு என்ன செய்துள்ளது? விதர்பா பகுதியில், குறைந்தபட்ச விலையை மிக அதிகமாக இந்த அரசு ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயித்திருக்கிறது. விலையை அதிகமாக நிர்ணயம் செய்த அரசாங்கம், கொள்முதலை நடத்தாது என்பதுதான் தந்திரம்.
கொள்முதல் நிலையங்களைத் திறப்பதையே இருபது நாட்களுக்கு அவர்கள் தாமதப் படுத்துவார்கள். ஒரு சிறுவிவசாயிக்கு என்ன நடக்கும்? அவருக்கு விளைபொருளை விற்று உடனே கடனை அடைத்தாக வேண்டும். கொள்முதல் நிலையம் திறக்கும்வரை அவர் காத்திருக்க முடியாது. யார் முதலில் வாங்குவதற்கு வருகிறானோ அவனுக்கு, என்ன விலையாக இருந்தாலும் விற்று விடுகிறார். அரசாங்கம் செய்யும் இன்னொரு தந்திரம் என்னவென்றால், எவ்வளவு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமோ அவற்றின் எண்ணிக்கையை குறைத்து சரிபாதி அளவுக்கு திறப்பது, மூன்றாவது தந்திரம் கொள்முதல் நிலையங்களை உரிய நாளுக்கு 20 நாட்கள் முன்னதாகவே மூடிவிடுவது. தாமதமாக விளைச்சலை கொண்டு வருகின்ற விவசாயி அரசு கொள்முதல் நிலையத்தில் விற்க முடியாது. அவன் தனியார் கமிஷன் மண்டி காரரனிடம்தான் போக வேண்டும்.
அரசுக் கொள்முதல் இல்லாத இடத்தில் நடக்கும் வேறு ஒரு பிரச்சனையை நான் சொல்கிறேன். மும்பையில் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 48 ரூபாய் நான் கொடுக்கிறேன். எருமைப்பாலுக்கு 60 ரூபாய் கொடுக்கிறேன். விவசாய சங்கங்கள் விடாப்பிடியாகப் போராடி இந்த 48 ரூபாயில், ஒரு லிட்டருக்கு 30 ரூபாயை பெற்று வந்தார்கள். இது கொரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு சற்று முன் இருந்த நிலைமை. ஊரடங்கு வருகிறது. நான் வழக்கம் போல ஒரு லிட்டருக்கு 48 ரூபாய் தான் கொடுக்கிறேன். ஆனால் விவசாயிக்கு என்ன போய் சேர்ந்தது? லிட்டருக்கு வெறும் 17 ரூபாய். மராட்டிய மாநிலம் முழுதும் விவசாயிகள் பாலை சாலையில் கொட்டிப் போராடிய காட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏனென்றால் தானியங்களைப் போல பாலுக்கு அரசு கொள்முதல் கிடையாது. பாலை கொள்முதல் செய்பவர்கள் தனியார் வியாபாரிகள். அதன் விளைவைத்தான் உடனே நாம் பார்த்திருக்கிறோம்.
கொரோனா ஊரடங்கின் போது என்ன நடந்தது? குறுவை சாகுபடியில் பல இடங்களில் விளைச்சல் நன்றாக இருந்தது. ஆனால் புலம்பெயர் தொழிலாளிகள் அவரவர் ஊர்களுக்கு திரும்பி விட்ட காரணத்தினால் விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காமல் பயிர்கள் நாசமாகின.
தர்பூசணி போன்றவை தெலிங்கானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வயலிலேயே அழுகி நாசமாயின. அடுத்த பிரச்சனை வாங்குவதற்கு ஆள் இல்லை.
ஏப்ரல் மாத வாக்கில் விவசாயிகளுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுத்தேன் சம்பா பருவத்திலாவது யாரும் பணப்பயிர் போடாதீர்கள். உணவுப்பயிர் மட்டும் பயிர் செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். ஏனென்றால் என்ன விதமான பிரச்சனைகள் வரவுள்ளது என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.
கொரோனா காலத்தில் விவசாயத்தில் 4 சதவீத வளர்ச்சி என்று அரசாங்கம் பீற்றிக் கொண்டது. சென்ற ஆண்டு ஒரு வறட்சிஆண்டு. அதை ஒப்பிடும்போது நான்கு சதவீதம் வளர்ச்சி என்று மோசடியாக ஒரு கணக்கு சொன்னார்கள்.
வளர்ச்சி என்று சொன்னார்களே, அந்த வளர்ச்சி விவசாயிக்கு பயன்பட்ட தா? இல்லை. ஏனென்றால் உற்பத்தி செய்த விளை பொருட்களை விவசாயி விற்க முடியவில்லை. மராட்டிய மாநிலத்தில் ஆகஸ்ட் இறுதியில் பருத்திக் கொள்முதலை அரசாங்க முடித்துவிட்டது. இன்னும் 30 லட்சம் குவிண்டால் பருத்தி விற்கப்படாமல் இருக்கிறது. விதர்பா, எவத்மால் போன்ற பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பாருங்கள். வீடு முழுவதும் பஞ்சுப் பொதிகளை அடுக்கி வைத்துக்கொண்டு செய்வதறியாமல் தவிக்கிறான் விவசாயி.
இப்போது மோடி போட்டிருக்கும் சட்டம் என்ன செய்யப் போகிறது? எண்பதுகளில் வந்த இந்தி திரைப்படங்களில் சௌகார்கள், தாகூர்கள், பண்ணையார்கள், கந்துவட்டிக்காரர்கள் போன்ற நிலப்பிரபுத்துவ கதாபாத்திரங்கள், குர்தா பைஜாமா அணிந்து வருவார்கள். அந்த உடைக்கு பதிலாக இனிமேல், அர்மானி, குஸ்ஸி போன்ற சர்வதேச பிராண்ட் கோட் சூட் அணிந்து புதிய கார்ப்பரேட் தரகர்கள் சந்தையில் இறங்குவார்கள். அவர்கள் கிராமப்புறத்து வர மாட்டார்கள். கமிஷன் மண்டி காரர்கள் 50 பேர் இருந்தால் அவர்களில் மூன்று பேரை பயன்படுத்திக் கொள்வார்கள். தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே காரியங்களை நடத்திக் கொள்வார்கள்.
ஏற்கனவே 30 லட்சம் குவின்டால் பருத்தி பொதிகள் விற்கப்படாமல் இருக்கின்றன. இப்போது மீண்டும் சம்பா பருவத்திலும் அதை பருத்தியைப் பயிரிடுகிறார்கள். சந்தையிலோ துணி உற்பத்தி இல்லை. துணிமணிகள் வாங்குவார் இல்லை. இந்த பருத்தியெல்லாம் எப்படி விற்பனையாகும் என்ற கேள்வி இருக்கிறது. இதே நிலைமைதான் கரும்புக்கு. கரும்பு உற்பத்தி செய்த விவசாயிகள் விற்க முடியாமல் தேக்கி வைத்துக் கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். சம்பா விளைச்சலுக்குப் பிறகு, விற்கப்படாமல் தேங்கியிருக்கும் விளைபொருட்கள் இரண்டு மடங்காக உயர்ந்து விட்டன.
அதனால்தான் அவர்கள் பட்டினிச்சாவுக்குத் தள்ளப்படுவார்களோ என்று அஞ்சி “பணப்பயிர் போடாதீர்கள் – உணவுப்பயிர் செய்யுங்கள்” என்று நான் விவசாயிகளை வலியுறுத்தினேன். ஆனால் விவசாயிகளோ, கடன் வலையில் சிக்கியிருக்கிறார்கள். பணப் பயிர் உற்பத்தி செய்வதற்கான பல ஒப்பந்தங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தப்பிக்க முடியவில்லை.
கொரோனாவின் விளைவாக உலகெங்கும் தொழிலாளர்கள் 60 சதவீதம் ஊதிய இழப்புக்கு ஆளாகியிருப்பதாக சர்வதேச தொழிலாளர் கழகம் கூறுகிறது. ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலைமை மோசம். கிராமப்புற நிலைமை இன்னமும் மோசம். இந்த சூழ்நிலையில் பருத்தியையும் கரும்பையும் விளை பொருட்களையும் யார் வாங்கப் போகிறார்கள்?
சென்றாண்டு இந்தியப் பருத்தியை யாருக்கு விற்பனை செய்தோம் தெரியுமா? இந்தியாவில் விளைந்த மொத்த பருத்தியில் 50 சதவீதத்தை சீனாவுக்கு ஏற்றுமதி செய்தோம். அடிமாட்டு விலைக்கு. அரசு கொள்முதல் நிலையங்கள் வேண்டாம் என்று சொல்பவர்கள், வேறு யாருக்கு விற்கப் போகிறீர்கள், யார் வாங்கப் போகிறார்கள் என்றும் சொல்ல வேண்டும்.
000
இப்பிரச்சனையை இன்று மோடி அரசு கொண்டு வந்திருக்கின்ற இந்த மூன்று சட்டங்களிலிருந்து மட்டும் பார்க்கக்கூடாது. கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த விதமான அணுகுமுறை இந்திய விவசாயத்தை சீரழித்து இருக்கிறது என்று பரிசீலித்துப் பார்க்கவேண்டும். முப்பது ஆண்டுகளில் இந்தக் கொள்கை படுதோல்வி அடைந்திருக்கிறது. ஆனால் நம்முடைய நாட்டில் இருக்கின்ற பெரிய அறிவுஜீவிகள் இன்னமும் சொல்லுகிறார்கள் – சுதந்திர சந்தை தான் சுதந்திரத்தை வழங்குகிறதாம், அரசாங்க ஆதரவு என்பது அடிமைத்தனமாம்.
இந்தப் பிரச்சினையை உலகின் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் எப்படி சமாளித்திருக்கின்றன? மருத்துவத் துறையை எடுத்துக் கொள்வோம். உலகிலேயே மருத்துவம் தனியார் மயமாக்கப்பட்ட நாடுகளில் மிக முக்கியமானது இந்தியா. இந்திய நாட்டின் மொத்த மருத்துவ செலவில் 80 விழுக்காட்டை தனிப்பட்ட நபர்கள் தம் சொந்த வருவாயில் இருந்து செலவு செய்கிறார்கள் மீதமுள்ள 20 விழுக்காடு மட்டும்தான் அரசு செய்யும் செலவு
கொரோனா தொடங்கிய முதல் வாரத்திலேயே ஸ்பெயின், அயர்லாந்து போன்ற நாடுகள் தங்களுடைய நாட்டின் மொத்த மருத்துவத் துறையையும் அரசுடமை ஆக்கினார்கள். டெல்லியில் என்ன நடந்தது? தனியார் மருத்துவமனைகளிடம் எங்களுக்கு 50 சதவீத படுக்கைகளை கொடுங்கள் என்று அரசு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது. மராட்டிய மாநிலம் பரவாயில்லை. தனியார் மருத்துவமனைகள் 80 விழுக்காடு படுக்கைகளை தர வேண்டும் என உத்தரவிட்டது.
தனியார்மய கொள்கையைப் பொருத்தவரை முக்கியமான எதிர்க்கட்சிகளும் இக்கொள்கையை ஆதரிக்கின்றன என்பது தான் பிரச்சனை. கேரள மாநிலத்தில் விமான நிலையத்தை அதானிக்கு கொடுப்பதை அந்த மாநிலத்தில் எல்லா கட்சிகளும் எதிர்க்கின்றனர். மக்களும் எதிர்க்கிறார்கள். ஆனால் பிரதான எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தனியார்மயத்தை ஆதரிக்கிறார்கள்.
தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை கொள்ளையடிக்கிறார்கள் என்று எல்லோரும் புகார் செய்கிறார்கள். மருத்துவத்திலும் கல்வித்துறையிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன செய்கின்றனவோ அதைத்தான் விவசாயிகள் விசயத்திலும் செய்வார்கள். அவர்கள் விவசாயிகளிடம் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்வார்கள் என்று எந்த அடிப்படையில் நம்பச் சொல்கிறார்கள்?
தனியார்மயம் சாதித்தது என்ன? கல்வியை எடுத்துக் கொள்வோம்.
2018 ஆம் ஆண்டு தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் கல்வி குறித்த சில புள்ளி விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் தரவுகள் இல்லை – No Data Available – NDA – என்று கேலி கேலி பேசும் அளவுக்கு மோடி அரசு எந்தத்துறை குறித்தும் புள்ளி விவரங்களை வைத்துக் கொள்வதில்லை. வெளியிடுவதும் இல்லை. அதிசயமாக கல்வி பற்றி 2018 என் எஸ் எஸ் புள்ளி விவரம் மட்டும் வந்திருக்கிறது. அது என்ன சொல்கிறது?
16 வயதுக்கு கீழே உள்ள எத்தனை சிறுமிகள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள்? கிராமப்புறங்களை பொறுத்தவரை கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்கிறது இந்த புள்ளிவிவரம். மராட்டிய மாநிலம் முன்னேறிய மாநிலம் என்று கூறப்படுகிறது இங்கே கிராமப்புறத்தில் எத்தனை சதவீதம் மக்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா வெறும் 8%. சிலிகான் பள்ளத்தாக்கின் தாய் என்று கொண்டாடப்படும் பெங்களூரு இருக்கும் கர்நாடக மாநிலத்தில் கிராமப்புறத்தில் எத்தனை சதவீதம் மக்கள் கணினி வைத்திருக்கிறார்கள்? வெறும் 2% என்கிறது என்.எஸ்.எஸ் சர்வே.
இணையம் கணினி ஸ்மார்ட் ஃபோன் ஆகியவற்றை பயன்படுத்துவதில் நிலவுகின்ற சமூக ஏற்றத்தாழ்வை டிஜிடல் பிளவு (Digital divide) என்று கூறுகிறார்கள். கொரோனா வந்த பிறகு இந்த டிஜிட்டல் பிளவு என்பது டிஜிட்டல் பிரிவினையாக (Digital Partition) மாறி விட்டது. வசதி படைத்தவர்களும் வசதியற்ற ஏழைகளும் இரண்டு தேசங்களாகப் பிரிந்து விட்டார்கள்.
கடந்த 30 ஆண்டுகளில் தாராளவாத கொள்கையின் கீழ் ஏற்பட்டுள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளை மோடி அரசு சட்டரீதியாக புனிதமாக்கி வருகிறது. 15 ஆண்டுகளில் நடைபெற்ற புதிய தாராளவாத அநீதிகளை ஆறே மாதத்தில் நிறைவேற்றத் துடிக்கிறது.
5ஜி வருகிறது. அதற்கான கம்பி வழித்தடங்கள் போடப்படுகின்றன. விவசாயிகளுக்கு கவலையே இல்லை. இனி ஆன்லைனில் தங்கள் பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் என்று ஒரு மயக்கத்தை உருவாக்குகின்றனர். எல்லாம் கவைக்கு உதவாத கற்பனை கதைகள். ஏழை விவசாயிகள் மேலும் ஏழையாகப் போகிறார்கள் என்பதுதான் உண்மை. இதைத்தான் கடந்த 25 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். தனியார்மய தாராளமயக் கொள்கைகளை 25 ஆண்டுகளாக அமல்படுத்தி நீங்கள் சாதித்தது என்ன? கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் 2% மக்களிடம்தான் கணினி இருக்கிறது அதுதான் உங்கள் சாதனை.
நாங்கள் பால்கர் பகுதியில் ஆய்வு செய்து இருக்கிறோம். அந்த வட்டாரத்தில் எந்த கிராமத்திலும் 16 வயதுக்குட்பட்ட எந்த ஒரு சிறுமியிடமும் ஸ்மார்ட்போன் கிடையாது. 150 கிலோ மீட்டர் தொலைவில் செங்கல் சூளையில் வேலை பார்க்கும் தனது அண்ணன் வாரத்துக்கு ஒரு முறை வரும்போது மட்டும் தான் ஒரு பெண் ஸ்மார்ட் போனை தரிசிக்க முடியும்.
நாளொன்றுக்கு 2 ஜிபி வேண்டுமென்றால் மாதம் குறைந்தது 200 ரூபாய் செலவிட வேண்டும். கொரோனாவுக்கு பின் ஆன்லைன் கல்வி என்கிறார்கள். கல்வி தொடர்பான பாடநூல்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் மேலும் அதிகமாக செலவிட வேண்டும். அதாவது கொரோனாவுக்குப் பின் வேலை இல்லை, வருவாய் குறைந்து இருக்கிறது, ஆனால் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து கர்நாடகத்தில் நான்காண்டுகள், ஆந்திராவில் 10 ஆண்டுகள் வேலைசெய்த கிராமப்புற ஏழைகளின் நிலைமை என்ன? எல்லோரும் ஊர் திரும்பி விட்டார்கள். அங்கே அவர்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்க செலவு செய்ய முடியவில்லை. அரசுப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அங்கே ஆன்லைன் கல்வி படிக்க ஸ்மார்ட்போன் வேண்டும்.
பெற்றோரிடம் ஒரு போன் இருக்கிறது. கடனில் வாங்கியது. அவர்கள் வேலை தேடி ஆந்திரா போகவேண்டும். வேலை ஊரை விட்டுப் போனால் பிள்ளைக்கு போன் இருக்காது. கல்வி போகும். பிள்ளைகளின் கல்வியா தங்களுடைய வேலையா என்று தீர்மானிக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.
சந்தையில் விதவிதமாக ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன ஆனால் வாங்குவதற்கு காசு? கொரோனா ஏற்கனவே இருந்த வேலை வாய்ப்பையும் வாழ்க்கை தரத்தையும் பறித்து விட்டது. பல நாடுகளின் அரசுகள் மக்களுக்கு நிவாரணம் வழங்கின. இங்கே நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட பலர் வலியுறுத்தியும் கூட அரசாங்கம் அத்தகைய நிதி உதவியை செய்ததற்கு தயாராக இல்லை.
000
இப்போது இந்த மூன்று சட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டன. இனி இதுதான் எதார்த்தம்.
இந்த பிரச்சனையில் முதலாவதாக நாம் கவனிக்க வேண்டிய விசயம் – விவசாயம் தொடர்பான சட்ட திருத்தங்கள் வெளிப்படையாக மாநில உரிமைகளில் தலையிடுபவை. விவசாயம் என்பது மாநிலப் பட்டியலில் உள்ள விசயம். ஜிஎஸ்டி இல் தொடங்கி ஒவ்வொரு துறையிலும் மாநிலங்களின் உரிமை முற்றிலுமாக பறிக்கப்படுகிறது. கூட்டாட்சிக்கு குழி பறிக்கப்படுகிறது.
மாநிலங்கள் இதை எதிர்த்துப் போராட முடியும். ஏனென்றால் கொள்முதல் என்பது மாநில அரசுகளுக்கு ஒரு முக்கியமான வருவாய் ஆதாரம். ஏற்கனவே பல மாநில அரசுகள் முட்டாள்தனமாக தங்களுடைய மிக முக்கியமான வருவாய் ஆதாரத்தை ஜிஎஸ்டி-இல் இழந்து விட்டன. தரவேண்டிய ஜிஎஸ்டி பணத்தையும் மைய அரசு கொடுப்பதில்லை. இரண்டாவது முக்கியமான வருவாய் ஆதாரம் தானியங்கள். அதையும் இப்போது பலி கொடுக்கிறார்கள்.
இந்த மூன்று சட்டங்களின் நோக்கம் என்ன? விவசாயத்தின் மீது கார்ப்பரேட்டுகளின் பிடியை மென்மேலும் இறுக்குவது
அரசாங்கமே முற்றுமுழுதாக கார்ப்பரேட் துறையால் வழி நடத்தப்படுவது – இதுதான் இந்த சட்டங்களின் நோக்கம்.
ஆனால் இந்த நோக்கம் நிறைவேறப் போகிறதா? ஏற்கனவே நம்முடைய அனுபவம் என்ன சொல்கிறது? அரசு கொள்முதல் ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வருவார்கள் என்பது அரசின் எதிர்பார்ப்பு. அது ஏற்கனவே நடந்து இருக்கிறதா? கார்ப்பரேட் முதலாளிகள் தானிய கொள்முதலில் தங்கள் மூலதனத்தை போடப்போகிறார்களா? அது ஒரு போதும் நடக்கப் போவதில்லை.
மராட்டிய மாநிலத்தில் ஃபட்னாவிஸ் ஆட்சிக்காலத்தில் ஏற்கனவே கொள்முதல் நிலையங்களை கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு விட்டன. அரசுக் கொள்முதல் நிலையங்களின் அதிகாரம் சில ஆயிரம் சதுர அடிகளுக்குள் குறுக்கப்பட்டு விட்டது. அரசு காலி செய்த இடத்தில் தனியார் கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்யப்போகிறார்கள் என்றார்கள். எதுவும் நடக்கவில்லை.
கார்ப்பரேட் முதலாளிகள் எந்தக் காலத்தில் போட்டியை விரும்பினார்கள்.
கடந்த 25 ஆண்டுகளாக நம் நாட்டில் நடப்பது என்ன? அவர்களைப் பொருத்தவரை பொது சொத்துக்களையும், மக்கள் பணத்தையும் பொட்டலம் கட்டி ஒரு பரிசாக அவருடைய வீட்டு வாசலில் அரசாங்கம் கொண்டு வந்து வழங்க வேண்டும். இதுதான் கார்ப்பரேட்டு முதலாளிகளின் கோரிக்கை. பொதுப்பணத்தில்தான் அவர்கள் கை நனைப்பார்கள். அவர்கள் எந்தக் காலத்திலும் தங்கள் பணத்தை போடமாட்டார்கள்.
பஞ்சாப், அம்ரிஸ்டர் அருகே ரயில் பாதை மறிக்கும் விவசாயிகள் – பாரத் பந்த் போராட்டம்!
விவசாயிகளுக்கு கடன் கொடுக்க பணம் இல்லை என்கிறார்கள். அந்த பணம் எல்லாம் எங்கே போனது? ஏன் விவசாயிகள் கடன் நெருக்கடியில் சிக்கி கொத்துக்கொத்தாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்? விவசாய கடனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கும், அக்ரி பிசினஸ் என்று சொல்லக்கூடிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் அரசு திருப்பி விட்டுக் கொண்டிருக்கிறது.
விவசாய கடனுக்காக ஒதுக்கப்படும் பணம் உரியவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்தும் பொறுப்பில் இருப்பது நபார்டு வங்கி. மராட்டிய மாநிலத்தில் அந்த நபார்டு என்ன செய்திருக்கிறது என்று பார்ப்போம். மராட்டிய மாநிலத்தில் 55% மக்கள் விவசாயத்தை சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் விவசாய கடனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 53% மும்பை மாநகரத்தில் வழங்கியிருக்கிறது நபார்டு வங்கி. மும்பை நகரில் யார் விவசாயம் செய்கிறார்கள்? இங்கே விவசாயம் சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் இருக்கின்றன அவர்களுக்குத்தான் விவசாயத்துக்கான நிதி சென்றிருக்கிறது. இந்த உண்மையை நபார்டு மறைப்பதில்லை இதுதான் வளர்ச்சிக்கான பாதை – இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
தற்போது இந்த சட்டத் திருத்தத்திற்கு பின் அரசாங்கம் தலையிட்டு ஒரு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க முடியுமா என்று சிலர் கேட்கிறார்கள் அது சாத்தியமேயில்லை. சந்தைதான் விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் கார்ப்பரேட்டுகளின் கோட்பாடு. ஏற்கனவே இருக்கின்ற கமிஷன் மண்டிகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். ஒரு புதுவகையான அடிமைத்தனம் உருவாக இருக்கிறது. ஏற்கனவே கமிஷன் மண்டி வியாபாரிகளின் அடிமைகளாக இருந்த விவசாயிகள் இனி கார்ப்பரேட்டுகளின் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்.
இதனை எதிர்த்து பஞ்சாப் ஹரியானாவில் விவசாயிகள் போராடுகிறார்கள்.
ஏனென்றால் அரசு கொள்முதல் விலை நிர்ணயத்தின் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகம் பயன் பெற்ற இடங்கள் அவை. அரசுக் கொள்முதலை பெரிதும் சார்ந்திருந்த இடங்கள் இவை .எனவே அதிகமான போராட்டங்கள் இங்கே நடக்கும். இவற்றுக்கு ஆதரவாக எல்லா மாநிலங்களிலும் போராட்டத்தை எதிர்பார்க்கலாம். குறைந்த பட்ச விலை என்பது விவசாயிகள் அனைவருடைய கோரிக்கை. மகாராட்டிரத்தில் சாலை மறியல், தமிழகத்தில் கடையடைப்பு என பல வடிவங்களில் நடக்கலாம்.
மோடி அரசு இருப்பதை அழிக்கிறது. ஆனால் புதிதாக எதுவும் வரப் போவதில்லை. ஒரு மிகப்பெரிய அழிவை நாம் எதிர்நோக்கியிருக்கிறோம்.
முற்றும்
சுருக்கப்பட்ட மொழியாக்கம்: மருதையன்
குறிப்பு:
ஃபே டிஸோசா – “மிர்ரர் நவ்” என்ற ஆங்கில தொலைக்காட்சி சானலின் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஊடகங்கள் அனைத்தும் மோடி அரசின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட சூழலில், அதில் பணிபுரிவதில் பயனில்லை என்று தனது பணியை உதறிவிட்டு வெளியேறியவர். சுயேச்சையாக ஒரு ஆங்கில யு- டியூப் சானலை நடத்தி வருகிறார்.
சாய்நாத் – புதிய தாராளவாதக் கொள்கைகளின் விளைவாக, உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை நடப்பதை வெளிக் கொண்டு வந்தவர். கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் – ஊடகங்கள் – கட்சிகள் ஆகியோருக்கு இடையிலான வெளிப்படையான மற்றும் இரகசியமான உறவை அம்பலப்படுத்துவதிலும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
இந்தப் நேர்காணலின் இறுதியில் வாசகர்கள் சிலரின் கேள்விக்கு பதிலளிக்கும் அவர், “கம்யூனிட்டி சப்போர்ட்டட் அக்ரிகல்சர், விவசாயிகள் பிரச்சனை குறித்து நாடாளுமன்ற சிறப்பு அமர்வு, சாமிநாதன் குழு அறிக்கையின் அமலாக்கம்” என்பன போன்ற சில உடனடித் தீர்வுகளை முன்வைக்கிறார். அவை, விவசாயிகள் அரசியல் அதிகாரம் பெறுதல் என்ற அடிப்படையான பிரச்சனையையும், கார்ப்பரேட் – காவி பாசிசம் என்கின்ற நடப்பு அரசியல் சூழலையும் கணக்கில் கொள்ளாத தீர்வுகள். 80-களின் இறுதியில், கமானி டியூப்ஸ் என்ற மூடப்பட்ட தொழில் நிறுவனத்தின் பங்குகளை அதன் தொழிலாளர்களே வாங்கி நடத்த முயன்ற அனுபவத்துக்கு இணையானவை. நிலவுகின்ற அரசியல் – பொருளாதாரக் கட்டமைவின் எல்லைகளுக்குள் தீர்வு காண மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள், தவிர்க்கவியலாமல் அதற்கேயுரிய முரண்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதே நேரத்தில், தற்போதைய பேரழிவிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்றும் அவசரத் தேவையை நிராகரித்து விடவும் முடியாது. இன்றைய அரசியல் சூழலுடன் அதனை இணைத்து மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் ஊடாக மாற்றினை உருவாக்குவது எப்படி – இதுதான் நாம் எதிர்கொண்டிருக்கும் சவால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக