செவ்வாய், 29 டிசம்பர், 2020

சசிகலா ஜனவரி 27-ந்தேதி சிறையில் இருந்து விடுதலை!

maalaimalar :சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் ஏற்கனவே 129 நாட்கள் விசாரணையின் போது சிறையில் இருந்துள்ளதால் அந்த காலத்தை தண்டனையில் இருந்து கழித்துக்கொள்ள வேண்டும் என அவரது வக்கீல்கள் சார்பில் சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை அதற்கு சிறை நிர்வாகத்தில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் சிறை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில் சசிகலா இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் 2017-ம் ஆண்டில் இருந்து இதுவரை முன் கூட்டியே விடுதலையானவர்களின் பெயர் பட்டியலை உதாரணம் காட்டியுள்ளார்.
மற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்தது போல் சசிகலாவையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால் அவரது கடிதத்துக்கு சிறைத்துறையில் இருந்து முறையான பதில் எதுவும் வரவில்லை. இதனால் ராஜாசெந்தூர் பாண்டியன் தற்போது மீண்டும் சிறைத்துறை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதுபற்றி சிறைத்துறையில் அவர் கேட்டதற்கு உங்கள் மனுவை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம். பதில் வந்ததும் தகவல் சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி ராஜாசெந்தூர் பாண்டியன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

சசிகலா ஜனவரி 27-ந் தேதி விடுதலை ஆவார் என்று சிறை நிர்வாகத்தில் இருந்து ஏற்கனவே வெளியில் தகவல் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் முன் கூட்டியே சசிகலா விடுதலையாவதற்கான சலுகையை எதிர்பார்க்கிறோம். அந்த உரிமையைதான் சிறை நிர்வாகத்திடம் கேட்டு இருக்கிறோம். அதற்கு இதுவரை பதில் இல்லை. இந்த விசயத்தில் அவர்கள்தான் முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா விடுதலையாவதற்கு இன்னும் 29 நாட்கள்தான் உள்ளன. அவர் முன்கூட்டியே விடுதலையாகாவிட்டாலும் ஜனவரி 27-ந்தேதி விடுதலையாவது உறுதியாகி உள்ளது. அன்றைய தினம் அவர் விடுதலையானதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

பெங்களூரில் இருந்து சென்னை வரை வழிநெடுக 65 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சசிகலா 2016-ம் ஆண்டு சிறைக்கு செல்வதற்கு முன்பு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றபோது 3 முறை கையால் ஓங்கி அடித்து நினைவிடத்தில் சப்தம் எடுத்து விட்டுதான் ஜெயிலுக்கு புறப்பட்டார்.

அதே போல் ஜனவரி 27-ந்தேதி ஜெயிலில் இருந்து விடுதலையாகி வரும்போதும் முதலில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று மீண்டும் சபதம் எடுத்து விட்டு தான் வீட்டுக்கு செல்வார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

அவரது சபதம் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறி வருகின்றனர். சசிகலா மீண்டும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று சபதம் எடுக்க இருப்பது அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக