வியாழன், 24 டிசம்பர், 2020

அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த பிரிட்டன்

அர்னாப் கோஸ்வாமி நடத்தி ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு சுமார் ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது பிரிட்டன். எதற்காக? ரிபப்ளிக் டிவியின் இந்தி சேனல் ரிபப்ளிக் பாரத். இந்த தொலைக் காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட, 'பாரத் பூச்தா ஹே' (பாரதம் கேட்கிறது) என்கிற விவாத நிகழ்ச்சியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக, வெறுப்புணர்வைத் ண்டும் வகையில் பேசியதாக, பிரிட்டன் அரசு 20,000 பவுண்ட் ஸ்டெர்லிங் அபராதம் விதித்திருக்கிறது.அர்னாப் கோஸ்வாமி கைது - தாக்கப்பட்டார் என்கிறது ரிபப்ளிக் தொலைக்காட்சி - நடந்தது என்ன?

அந்தப் பேச்சு பிரிட்டன் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை நெறிமுறைப்படுத்தும் ஆஃபீஸ் ஆஃப் கம்யூனிகேஷன்ஸின் (ஆஃப் காம்) விதிகளை மீறுவதாக இருப்பதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது பிரிட்டன்.

அத்துடன், இந்த நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பப்படக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது பிரிட்டனின் ஆஃப் காம்.  "பாரதம் கேட்கிறது" நிகழ்ச்சியில், பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.

கடந்த 2019 செப்டம்பர் 6-ம் தேதி அர்னாப் கோஸ்வாமி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் சந்திரயான் - 2 விண்கலம் குறித்து விவாதம் நடந்தது என்கிறது ஆஃப்காம் அறிக்கை.

இந்த விவாதத்தில் மூன்று இந்தியர்களும், மூன்று பாகிஸ்தானியர்களும் கலந்து கொண்டார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.

விவாதத்தின் போக்கில் இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்தும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் பேசப்பட்டது.

ஒரு கட்டத்தில், அந்த விவாதத்தில் பங்கெடுத்தவர்கள் பாகிஸ்தானியர்கள் குறித்தும், பாகிஸ்தான் விஞ்ஞானிகள் குறித்தும் இழிவாகவும், அவதூறாகவும் பேசத் தொடங்கினர்.

அர்னாப் கோஸ்வாமி "நாங்கள் (இந்தியா) விஞ்ஞானிகளை உருவாக்குகிறோம், நீங்கள் (பாகிஸ்தான்) தீவிரவாதிகளை உருவாக்குகிறீர்கள்" என்று பேசினார்.

இதை ஆஃப் காம் தன் அறிக்கையில் சுட்டிக் காட்டி, இந்தப் பேச்சுகள் வெறுப்புணர்வைத் தூண்டுவதாக இருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறது.

மிக முக்கியமாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து பேசியவர்களுக்கு, இந்த நிகழ்ச்சியில் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த நிகழ்ச்சி ஆஃப் காம் விதிமுறைகளை மீறியதாக கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முடிவு செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த அபராதம் வேர்ல்ட் வைட் மீடியா நெட்வொர்க் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் தான் ரிபப்ளிக் பாரத் சேனலை பிரிட்டனில் ஒளிபரப்பும் உரிமத்தை வைத்திருக்கிறது.

குறிப்பிட்ட நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பப் போவதில்லை என்றும் மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழாது என்றும், இந்த விதி மீறல் வேண்டும் என்றே செய்யப்படவில்லை என்றும் வேர்ல்ட் வைட் மீடியா பிரிட்டனின் ஆஃப் காம் அமைப்புக்கு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக