ஞாயிறு, 13 டிசம்பர், 2020

தருமபுரி அடுத்தடுத்து 15 வாகனங்கள் மீது கண்டெய்னர் லாரி மோதியது - 4 பேர் உயிரிழப்பு

News18 Tamil Nadu : Dharmapuri Thoppur Accident | தொப்பூர் கணவாய் பகுதியில் தாழ்வாக உள்ள 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 35 லட்சம் ரூபாய் செலவில் வேகக்கட்டுப்பாட்டு தடுப்புகள் அமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி ஆட்சியர் கார்த்திகா தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே கண்டெய்னர் லாரி மோதியதால் 15 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
தொப்பூர் கணவாய் அருகே சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்ற இரண்டு லாரிகள், விபத்தில் சிக்கின. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், ஒரு லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, சாலையில் காத்திருந்த வாகனங்கள் மீது அதிவேகத்தில் மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபத்தில், 12 கார்கள், இரண்டு மினிலாரிகள், ஒரு இருசக்கரவாகனம் என மொத்தம் 15 வாகனங்கள் மோதிக் கொண்டன. இதில் ஓமலூரைச் சேர்ந்த மதன்குமார், கார் ஓட்டுநர் கார்த்தி, கோவையைச் சேர்ந்த நித்தியானந்தம் மற்றும் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



படுகாயமடைந்த 15 பேரை மீட்ட பொதுமக்கள், சேலம், தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் அகற்றப்பட்டு 2 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.

விபத்துக்கு பின் தப்பி ஓடி வனப்பகுதியில் பதுங்கியிருந்த லாரி ஓட்டுநர் புட்புதினை போலீசார் கைது செய்தனர்.விபத்து நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பழகன், நெடுஞ்சாலையை சீர் செய்து விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

தொப்பூர் விபத்து
தொப்பூர் கணவாய் பகுதியில் தாழ்வாக உள்ள 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 35 லட்சம் ரூபாய் செலவில் வேகக்கட்டுப்பாட்டு தடுப்புகள் அமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி ஆட்சியர் கார்த்திகா தெரிவித்தார்.

விபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளித்திருப்பதாக கூறியுள்ள பாமக இளைஞரணி தலைவரும், எம்.பியுமான அன்புமணி ராமதாஸ், விபத்தை தடுக்க தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக