“ஜில்லா பரிஷத் பள்ளி” என்ற உதிர்ந்துக்கொண்டிருக்கும் பெயர்ப்பலகையுடன் ஒரு பள்ளி. டீச்சரில்லாமல் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள். மிகச்சிறிய அந்த மலைகிராமத்தில், பெரும்பாலும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள விவசாய குடும்பங்கள். பாரதிராஜா படமெல்லாம் இல்லை. 2009 இல் ரஞ்சித்சிங் திசேல் பரிதேவாடி மலைக் கிராமத்திற்கு வேலைக்கு வந்தபோது, அவர் வேலைக்கு சேரவேண்டிய பள்ளி இப்படித்தான் இருந்தது. 70 களில் இது வழக்கமான காட்சியாக இருந்திருக்கலாம். 2009 இல் இப்படிப்பட்ட இடங்களில் பணிபுரிய எத்தனை இளைஞர்களிடம் முனைப்பு இருக்கும்?. ரஞ்சித்திற்கும் இக்கால இளைஞர்களின் வழக்கமான IT எஞ்சினியர் கனவு இருந்தது. ஆனால், சில காரணங்களால் கனவு, கனவாகவே நின்றுவிட, அப்பாவின் ஆலோசனையின்படி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருகிறார் ரஞ்சித். பெரிய பிடித்தம் என்றெல்லாம் இல்லையென்றாலும் ரஞ்சித்திற்கு ஒன்று புரிந்தது. “மெஷினை வடிவமைக்கிறவங்க எஞ்சினியர்னா, குழந்தைகளை, அவர்கள் மூலம் இந்த சமுதாயத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கற எஞ்சினியர்கள் ஆசிரியர்கள்தான்”. இந்தப் புரிதலுக்குப் பிறகு ரஞ்சித்தால் தன் படிப்பை, அது சார்ந்த தொழிலை ஆழமாக நேசிக்க முடிந்தது.
சனி, 5 டிசம்பர், 2020
“ஜில்லா பரிஷத் பள்ளி” 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு ரஞ்சித்சிங் திசேல்~.. Ranjitsinh Disale Wins Global Teacher Prize 2020
Vidhya Suresh : ஒரு மாட்டுத்தொழுவம், பக்கத்திலேயே சாமான்கள் போட்டு வைக்கும் குடோன். இரண்டுக்கும் இடையில் சொருகினாற்போல ஒரு ஷெட் போன்ற கட்டடம்.
ரஞ்சித்தின் முன் இருந்த முதல் சவால், மொழி. ரஞ்சித், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். பரிதேவாடியும் மகாராஷ்டிரம்தான். ஆனால், கர்நாடக ஓரம். பெரும்பாலான பழங்குடி மக்கள் கன்னடம் பேசுகிறவர்கள். அந்த கிராமத்தில் இன்னமும் குழந்தை திருமணம் நடந்துக்கொண்டிருந்தது. அவற்றிலிருந்து பெண் குழந்தைகளை மீட்டு, வயற்காட்டில் அப்பாவுடன் வேலைக்குப் போய் கொண்டிருந்த பிள்ளைகளை படிப்பின் பக்கம் மடைதிருப்ப ரஞ்சித்துக்கு கன்னடம் தேவையாயிருந்தது. கற்றுக்கொண்டார். கிராமங்களில் ஆசிரியர்களின் பணி பள்ளிகளோடு முடிந்து விடுவதில்லை. பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வர, ஒரு தோழனாக, ஊர்ப்பெரியவராக, ஆலோசகராக என அவர்கள் குடும்பங்களில் ஒருவராக ரஞ்சித் மாற வேண்டியிருந்தது.
மாறினார். அடுத்த சவால், பள்ளிப் பாட புத்தகங்கள் வடிவில் வந்தது. மராத்தி மொழியில் இருந்த அந்த அந்தப் புத்தகங்களை தன் சொந்த முயற்சியில் கன்னட மொழியில் மாற்றி, புதிதாய் வடிவமைத்தார். இங்கு ரஞ்சித் எடுத்த முன்னெடுப்பும், அதற்கான உழைப்பும் அசாத்தியமானது. ஒரு வகுப்பில் 12,13 குழந்தைகள் இருந்தால், அவரவர் பாடப்புத்தகங்களில், ஒவ்வொருவருக்கும் பிரத்யேக QR code ஐ சேர்த்தார். ஏனெனில், படிக்கும் பாடம் ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையின் கற்றல்திறன் வேறு. கற்க எடுத்துக்கொள்ளும் நேரம் வேறு.
அந்த QR code ஐ ஸ்கேன் செய்யும் குழந்தைகளின் அறிவுத்திறனுக்கேற்ப தனித்தனி பயிற்சிகளையும் வடிவமைத்திருந்தார். மாணவர்கள் தமக்குத் தாமே சவால்கள் வைத்துக்கொள்ள வேண்டுமேயன்றி, அருகிருப்பவர்களுடனான ஒப்பீடும், அனைவருக்குமான ஒரே பயிற்சி முறையும் உதவாது என்ற தெளிவடைந்த ரஞ்சித் அதெயொட்டியே தன் பயிற்சிகளை வடிவமைத்தார். பரிதேவாடியின் இருண்ட குடில்களில் அகல் விளக்கு ஏற்றப்பட்டது. வெறும் பாடங்களோடு நிற்காமல் அவற்றை வாழ்வியலோடு தொடர்புபடுத்திப் பார்க்கவும் பிள்ளைகள் பயின்றனர்.
தொடர் முயற்சிகளால் 2016 ஆம் ஆண்ட மாவட்டத்தில் சிறந்த பள்ளி என 98% தேர்ச்சியுடன் முன்னணி வகித்தது ஜில்லா பரிஷத் பள்ளி. மைக்ரோசாஃப்ட் தலைமை அதிகாரி சத்யா நாடெல்லாவால் தன் Hit Refresh புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் ரஞ்சித்துக்கு 2016 இல் “ Innovative Researcher of the Year” விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு.
உட்சகட்ட அங்கீகாரமாக, உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் “Global Teacher Prize 2020” ரஞ்சித்துக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையும் பெறுகிறார்
ரஞ்சித். கடும் போட்டி, மிகக் கடுமையான விதிமுறைகளுடன் 50 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் இருந்து 10 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வாக, 10 பேரில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ரஞ்சித்.
உலகம் முழுவதிலும், முக்கியமாக பின்தங்கிய நாடுகள், வளரும் நாடுகளில், கிராமங்களிலும், வசதி வாய்ப்பற்ற பிள்ளைகளிடையேயும் மிகப்பெரிய “கல்வி இடைவெளி” யை கொண்டு வந்துள்ளது கோவிட். இடைநிற்றல் இல்லாத கல்வியின் முக்கியத்துவத்தை உலக அரசுகள் தொடர்ந்து பேசி வருகின்றன. இடைநிற்றலால், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிரிக்கக்கூடும். கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்து, எந்தவித திட்டமோ,
கலந்துரையாடலோ, பேச்சுவார்த்தைகளோ இன்றி காலவரையறையற்று பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நம் நாட்டில், குழந்தை தொழிலாளர் பிரச்சினை மட்டுமின்றி, குழந்தை திருமணங்கள் இன்னமும் வழக்கிலிருக்கும் வட இந்திய மாநிலங்களில், பெண் குழந்தைகள் இதற்கு பலியாகும் அபாயமும் அதிகரித்திருக்கிறது. ரஞ்சித்தின் முன்னோடி திட்டமான QR code கொண்டு பாடங்களை இருந்த இடத்திலிருந்தே படிக்கும் வசதியால், பரிதேவாடி கிராமத்து பிள்ளைகள் இவற்றிலிருந்து தப்பியிருக்கின்றனர். பின்தங்கிய ஒரு சமூகத்தின் ஒரு தலைமுறையை, புதைகுழிக்குள் இழுத்துக்கொள்ளாமல் மீட்டெடுத்திருக்கிறார் ரஞ்சித்.
இத்தாலி, பிரேசில், வியட்நாம், லண்டன்( இங்கிலாந்தின் மிகப் பிரபலமான பள்ளியின் ஆசிரியர்), தென்கொரியா,அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து முதல் பத்து இடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுள் விருதுக்குரியவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ரஞ்சித்.
இத்துடன் முடியவில்லை. விருது அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தான் ஜெயித்தால் தன் பரிசுத்தொகையின் 50% தொகையை(500, 000அமெரிக்க டாலர்கள்) முதற் பத்து போட்டியாளர்களுடன் பகிர்ந்துக் கொள்ளப்போவதாக அறிவித்த ரஞ்சித், விருது பெற்ற உடன், அந்தந்த நாடுகளிலுள்ள பிற்படுத்தப்பட்ட குழந்தைகளின் கல்விக்காக அந்தத்தொகை செலவிடப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
உண்மையான சூப்பர் ஸ்டார்கள், பால்கனியிலிருந்து மக்களுக்கு கையசைப்பதில்லை. துரதிர்ஷ்டவசமாக, ரஞ்சித் விருதுபெற்ற அன்று, ஊடகங்கள், வயதுபோன ஒரு நடிகரின் வீட்டின் முன் தங்கள் காமிராக்களை பொருத்தியிருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக