புதன், 18 நவம்பர், 2020

அதனால்தான் நான் எப்போதும் உரக்கக் கத்திக்கொண்டேயிருக்கிறேன் educationistheonlyweapon என்று

Image may contain: 4 people, people standing
Maha Lakshmi : · ஒரு பங்கு கறி எடுக்க ஆத்தத் தாண்டி எங்க அப்பா மட்டுமல்ல எங்க சேரியில இருக்கிற ஒட்டுமொத்த அப்பன்களும் பொழுது விடியறதுக்குள்ள போயாகணும். கெங்கப்பட்டுக்குப் போனா பின்ரவ கறிக் கிடைக்குங்கிறது ஒருபக்கம் இருந்தாலும் எங்கூரு மாதா கோயில் தெருவுல இராயப்பன் அறுக்குற கறி புதுச்சேரி பழைய சேரிக்குப் பத்தாதுங்கிறது இன்னொருபக்கம்.டீப்னிய எடுத்துக்குனு அந்தக் கருக்கல்ல போய் வரணும். இன்னொரு எலும்புத்துண்டு போடு மவராசானு கெஞ்சி எலும்ப வாங்காதவங்க யாருமிக்கமாட்டாங்க.
கோழிக்கறி  ஆக்கறவிங்களையும் ஆட்டுக்கறி ஆக்கிறவிங்களையும் பெரிய பணக்காரங்கடினு வாய நல்லா பொளந்து வச்சி கண்ணையும் புருவத்தையும் ஒசத்தி சொல்லுவோம். சேரிங்கள்ள யாரோ ஒருசிலரு கோழிய ஆக்குவாங்க.ஆம்பள புள்ளைக நிறைய பேர் இருந்து அவங்க வெளியில எங்கயாவது போய் சம்பாதிக்கிறவங்களா இருந்தா, அந்த வூட்டு பெரிய ஆம்பளைங்க பட்ணத்துல ஆட்டோ, ரிக்ஷா இதுமாதிரி எதாவது ஓட்றவங்களா இருந்தா அவங்களுக்குத்தான் பண்டிகையினே சொல்லலாம்.இன்னும் கேட்டா ஆம்பள புள்ளைங்க இல்லாத வீட்ல தீபாவளி மட்டுமில்ல எல்லா பண்டிகைகளுமே ஒரு சாபம் மாதிரிதான்.நல்ல நாளா இருந்தா என்சோட்டு புள்ளைகளாம் பஸ் ஸ்டாணெடுக்க் ஓடுவாங்க 
"என் அண்ணன் வரான்;என் சித்தப்பா வரான்"னு.என் அப்பன் ஓரிங்கிறதால எந்த ஒறவும் எனக்கு வரும்னு பஸ் ஸ்டாண்டு பக்கம் போனது இல்ல.
 
ஆம்பள புள்ள மட்டும் ஒரு குடும்பத்துல இல்லாம போனா அந்தக் குடும்பம் அவ்ளோதான்.எங்க அம்மாவ எல்லாம் "உனக்கு கொள்ளி வைக்க ஒரு ஆம்பள புள்ள இருக்காடி"னு சண்டையில பேசாதவங்க யாருமே இல்ல.அநாத பொணமா போறவ,இவ பொண்ணுங்களுக்குக் கோடி போடி நாதியில்லாத ஆக்கனவனு சகட்டுமேனிக்கும் எங்க அம்மாவ எங்க வட்டாரத்துல இருக்கிறவங்க பேசியிருக்காங்க. எங்கம்மா நல்லா இருக்கும்போது ஆம்பள புள்ளைய வச்சே பேசனவிங்க, அவங்க மனநிலை பாதிக்கபெபட்டதுக்கு அப்புறம் பேசியதோட மயிரை இழுத்துப் புடிச்சி,சோத்தத் தலையில வாரிவச்சி,தரதரனு இழுத்துப் போட்டுலாம் அடிச்சாங்க.
ஆம்பள புள்ள இல்லாததாலதான் இவளுக்கு பைத்தியம் புடிச்சிடிச்சினு முத்தரை குத்தாலும் இல்ல.
 
எங்க அப்பா கால எங்கம்மாவே பாடகாலுனு தான் சொல்லும்.காலு அந்தளவுக்கு படந்து இருக்கும்.கோன கோன வெரலுங்க... ஒவ்வொரு வெரலுக்கும் நடுவுல அம்மாம் பெரிய சந்து.எனக்கு வெவரம் தெரிஞ்சி எங்க அப்பாவுக்கு சேர்த்து புண்ணே வந்தது இல்லனே பாருங்களேன்.
பொழுதினிக்கும் சேத்துலியே ஒட்கார்ந்து நாத்து எடுக்கும். அப்பக்கூட அந்த சேர்த்துப்புண்ணு அதுக்கு வராது.கால்ல நரம்பு எல்லாம் முடிச்சிப் போட்ட மாதிரி இருக்கும்."பட்டாளத்துக்கு ஆளெடுத்துக்குனு போனப்போ காலு சரியா இல்லனு மோளம்(Drums) அடிக்க வுட்டாங்க. நான் ஒடியாந்துட்டன் யம்மா"னு பெருமையா வேற பேசும்.
இந்தக் காலோடதான் எங்கப்பா மாண்டியா மைசூர்னு நெல்லறுக்க, கெவுரறுக்கப் போவும்.அறுத்ததுல கெடச்சத காசா மாத்தியெடுத்துக்கினு வரும்.அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கு அப்புறம் அங்கயும் போகல.கடுதாசி போட்டு வர்றத சொன்னாதான் நான் அந்த பஸ் ஸ்டாண்டு பக்கம் போறது.இல்லேனா எந்தப் புள்ளைங்களோட அண்ணனையும் போய் இட்டுக்குனு வந்ததில்ல.
 
அப்டி ...ஆத்தத் தாண்டி எடுத்துட்டு வந்த அந்த ஒருபங்கு கறியை எங்கம்மா எங்களுக்கு ஆக்கிக் கொடுக்கும்.தலைக்கு எண்ணையெல்லாம் வச்சி,குளிக்கவும் வச்சிடும்.மத்தியானம் போல எங்கப்பா ஈட்டு ஆளுங்களாம் ஊர்த்தெருவுக்கு அவங்கவங்க ஆண்டைங்க வூட்டுக்குப் போவாங்க.வரும்போது சோமத்துல,இல்லனா துண்டுல இட்லி தோச இருக்கும்.கொழம்ப சிலசமயம் அதுலய ஊத்தியிருப்பாங்க.இல்லனா ஒரு பிளாஸ்டிக் பேப்பர்ல.அப்பலாம் பிளாஸ்டிக் பேப்பர் கிடைக்கிறது 
அம்மாம் கஷ்டம்.எங்கம்மா நல்லாயிருக்கிற வரைக்கும் சண்டபோடும்.நானும் மட்டப்புள்ளங்கிறதால எனக்குத் தெர்ல.அப்பாவ திட்னா "அதான் யம்மா நம்ம பழக்கம்;ஆண்டைங்க வூட்ல நல்ல நாலு அன்னிக்குப் போய் வாங்கிக்கினு வரணும்"னு சொல்லும்.
 
எங்க ஆயா அந்த வூட்ல மாடு மேய்ச்சி,சாணி வாரிக்கொட்னதால அவுங்கதான் எங்கூட்டுக்கு ஆண்ட.எங்கயா மட்டுமில்ல எங்க ஆயா ஈட்டு ஆயாங்க,தாத்தாங்க இப்டித்தான் சில கவுண்டன்,உடையான்,
நாயக்கன்,நைனா,செட்டியான் ஊட்ல வேல செஞ்சிருக்காங்க.எங்கூட்டு ஆண்ட நானும் என் அக்காவும் படிச்ச எங்கூர்ப்பள்ளிக்கூடத்து எட்மாஸ்டர் வூடு.
அதுக்கு மனநிலை சரியில்லாம போனதுக்கு அப்புறம் கறி எடுக்கிறதே இல்ல.
 
கிட்டத்தட்ட 10 வருசம்.யாராவது குடுத்தாலும் வேணானு சொல்லிருவோம்.ரொம்ப வற்புறுத்துனா மட்டும்தான் சாப்டுவோம்(நானும் அக்காவும்).பள்ளிக்கூடத்துல குடுக்கிற முட்டைய பாவாடையில வச்சித் தச்சிருந்த பாக்கெட்லியே போட்டு வச்சிருந்து வூட்டுக்கு வந்து எங்கப்பாவுக்குக் குடுத்துருவேன்.
எங்கூர்ல படிக்கிற வரைக்கும் மத்தியானமே குடுத்துருவேன்.அசலூர்க்குப் போயி படிக்கப்போனதுக்கு அப்புறம் சாயந்தரம்தான் தரமுடியும்.ஒருமாதிரி வாட வந்தாலும் அப்பா துன்னுடும்.
பண்டிகைனா இன்னொரு பயமமும்கூட.சாராயத்தைக் குடிச்சிட்டு வந்து அம்மாம் கலவரம் நடக்கும்.வூட்டுக்குள்ளேயே சண்ட,தெருவுக்குள்ள சண்ட,கூட்டாளிங்களுக்குள்ள சண்டனு தினுசு தினுசா போடுவாங்க ஆம்பளைங்க.
"நல்ல நாளுனு ஒன்னு ஏன்தான் வருதோனு தெர்ல;உசுர கையில புடிச்சிக்கினு கீறதா கீது இவனுங்கக்கிட்ட"னு பொம்பளைங்க ஒப்பாரி வைப்பாங்க.யாருக்கு எப்டியோ எங்க வூட்டுக்குத்தான் கிலியே.நல்லா இருந்தப்பவும் சரி முடியாம போனப்பவும் சரி எங்கம்மா நியாயம் சொல்லக் கிளம்பி அது எங்க மேலயே திரும்பும்.எங்கப்பாவும் அவ்ளோ தெறம் கிடையாது.  அதிர்ந்துகூட யாரையும் பேசாது.வாய்க்குச் செத்தவனுக்கு வாயாடியா பார்த்துக் கட்டிவச்சி அவுங்க(எங்கப்பம்மா) வாழ்க்கையையே எங்க அம்மாவோட தாய்மாமன் நாசம் பண்ணிட்டானு வைங்களேன்.
 
நான் நாலாவது படிச்சவரைக்கும்தான் எங்களுக்குப் பண்டிகை,கொண்டாட்டம் எல்லாம்.அப்புறம் அம்மா மனநில போச்சி;எல்லாமே போச்சி.எங்கம்மா ஒரு சாமியார் கிட்ட குறிக்கேட்கப் போயி,ஊர் ஊரா போயி பாரத்க்கதையைக் கேட்டு,பாரதக் கதையோட நல்லதங்கா கதையையும் கேட்டு,
தன்மேல சாமி இருக்கினு நம்பி,மூளைக் கலங்கி ,எங்க போவுதுனே தெரியாம ரோட் ரோடா போயி , 
அது பின்னாடியே நானும் திரிஞ்சி,கையில கால்ணா இல்லாம போனமாதிரியே திரும்பி கால்நடையாவும் வந்து, கதுவு ஜன்னல்லு எதுவும் இல்லாம நாலாபக்கமும் தொறந்துபோட்டு கூர மட்டுமே இருக்குற வனாந்தரத்துல கெடக்குற எங்கள குடிச்சிட்டு வர ஆம்பளைங்களும் வெறியேறிப்போன ஆம்பளைங்களும் எதுவும் குறிப்பா எங்கம்மாவ எதுவும் பண்ணிடக்கூடாதுனு நிம்மதியா கண்ணசந்து தூங்காம கெடந்து பாத்துக்கிட்டோம்.
அப்பப்போ இயற்கை(மழை,காத்து) படுத்தி எடுக்கும்.வூட்டோட மூளையில போய் நின்னாதான் சாரலும் அடிக்காது.மழைத்தண்ணியும் கால்வரைக்கும் வராது.
மேல சொன்ன விசயங்கள்ல ஜாதி,ஆம்பள புள்ள,சாமியார், சாமி,ஒறவு, ஆம்பளைங்க இவைகளோட உணரணும்னா நீங்க ஒரு இந்தப் பதிவிலாவது மகாவா இருக்கணும்.
அப்பதான் ஜாதிய, ஆண் ஒசந்தது என்கிறத ,சாமி என்கிறத,சாமியார் என்கிறத... வெதச்சவனு(ளு)ங்கள, ஜாதிய கடைபிடிக்கிறவனு(ளு)ங்கள,அத பாதுகாக்கிறவனு(ளு)ங்கள சுருக்கமா சொல்லப்போனா மநுவ நான் ஏன் எதிர்க்கிறேன்னு ஒங்களுக்குப் புரியும்.
அதுவரைக்கும் மைக்ரான் அளவு கூட வெளங்காது.
இப்படி நான் பகிரங்கமா கேள்விக் கேட்பதற்குக் காரணமாயிருந்தது,
இருப்பது நான் பெற்ற கல்வி.
அதனால்தான் நான் எப்போதும் உரக்கக் கத்திக்கொண்டேயிருக்கிறேன் #educationistheonlyweapon என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக